- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
நலிவடையும் உள்நாட்டு ரப்பர் துறை, வாழ்வாதார நெருக்கடியில் விவசாயிகள்
வீழ்ச்சியை நோக்கி செல்லும் உள்நாட்டு வெள்ளை தங்கம். அரசின் பொருளாதார கொள்கைகளால் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ரப்பர் விவசாயிகள். குறைந்தபட்ச ஆதர விலையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Author: Pughazh Selvi PK
Published: November 3, 2023
இந்தியாவின் முதுகெழும்புகளாக கருதப்படும் விவசாயமும் விவசாயிகளும் நாளுக்குநாள் நலிவடைந்துக் கொண்டே வருகின்றனர். குறிப்பாக ரப்பர் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாறுதல்கள், ரப்பர் விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளது.
சமீபகாலமாகவே, வெள்ளை தங்கம் என்று அழைக்கப்படும் ரப்பரின் விலை சரிவையே கண்டுவருகிறது. 2011ல் 1 கிலோ 230 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் 2023ல் 1 கிலோ 114 ரூபாய்க்கே ரப்பர் மரபால் விற்கப்படுவதாக விவசாயிகள் வருந்துகின்றனர். இந்த ரப்பர் சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாறுதல்கள் பலவகைகளில் விவசாயிகளைப் பாதித்துள்ளது, என்று ரப்பர் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கூறுகின்றனர். அதை பற்றி விரிவாக பார்ப்போம்.
இந்தியாவில் ரப்பரும் தற்போதைய நிலையும்
இந்திய மண்ணில் ரப்பர் உற்பத்தி பற்றியறிய 1895 க்கு செல்லவேண்டும். முதன்முதலில் 1895 ஆம் ஆண்டு, கேரளா மாநிலத்தில் ஆங்கிலேயர்களால் ரப்பர் மரம் பயிரப்படுகிறது, அதனை தொடர்ந்து 1902 ஆம் ஆண்டு ரப்பர் மர உற்பத்தியும் ரப்பரும் வணிகத்திற்கு உட்படுத்தப்படுகிறது. சிறுக சிறுக திருவிதாங்கூர் சமஸ்தாத்தின் பகுதிகளுக்கு (பிறகு 1956ல் எல்லைகள் மறுவரையறை செயப்பட்டது) பரவ துவங்கிய ரப்பர் உற்பத்தி இரண்டாம் உலக போரில் புதிய பரிணானம் பெற்றது. உலக பெருமந்தத்தை வெற்றிகரமாக எதிர்கொண்ட ஒரு துறை என்பதால் இரண்டாம் உலக போரின் போதும் அதற்கு பின்பும் இதன் மதிப்பு கூடியது. உலக போருக்கு முன்பு வரை ரப்பர் மரங்கள் வழியே இயற்கை ரப்பர்களே உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் போரின் போது வேதியியல் பொருட்கள் கொண்டு செயற்கை ரப்பர் உருவாக்கம் குறித்து உலக நாடுகள் ஆராய்ச்சியில் இறங்கியது.
தற்போது இந்தியாவில் இருக்கும் ரப்பர் துறை மற்றும் ரப்பர் விவசாயிகளின் நிலை குறித்து அகில இந்திய விவசாய சங்க செயலாளர் (AIKS) விஜூ கிருஷ்ணன் கூறியது,“இப்போது கடந்த 15 ஆண்டுகளாக இந்தியவில் நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளின் அமலாக்கத்தைப் பார்க்க முடிகிறது. 1991ல் நரசிம்மராவ் மற்றும் மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியில் அமலானது இந்த பொருளாதார கொள்கை (தாராளமய, தனியார்மய, உலகமய பொருளாதார கொள்கை). பின்பு பிஜேபி அரசால் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நவீன தாராளமாய பொருளாதார கொள்கை தான் இன்று விவசாயிகளின் மோசமான நிலைமைக்கும், தீவிரமான விவசாய பிரச்சினைக்கும் காரணமாக இருக்கிறது” என்று ரப்பர் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கூறினார்.
தமிழ்நாட்டில் தற்போது ரப்பர் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலை பற்றி கன்னியாகுமரி மாவட்டம் தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தின் (சிஐடியு) பொது செயலாளர், பொன்மனை வல்சகுமார் கனலிடம் பேசுகையில், “தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் தான் ரப்பர் விவசாயம் நடைபெறுகிறது, காரணம் இப்பகுதியின் தட்பவெட்பநிலை. மலையோர பகுதியில் 30,000 முதல் 35,000 ஹெக்டேர் அளவில் ரப்பர் விவசாயம் நடைபெறுகிறது. இருப்பினும் மாநில அரசின் பட்டியலில் ரப்பர் விவசாயம் இல்லை. 1957 ஆம் ஆண்டு முதல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட்டுகள் தொடங்கி இன்று வரை ரப்பர் விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்காக போராடி வருகிறோம்” என்று கூறினார்.
உள்நாட்டு ரப்பர் உற்பத்தியில் தடுமாற்றம்
உள்நாட்டு ரப்பர் உற்பத்தியை பல காரணிகள் பாதிக்கின்றன. உதாரணமாக, தாமதமாக மரங்கள் முதிர்ச்சி அடைவது; அதிகரிக்கும் செயற்கை ரப்பர்களின் இறக்குமதி; குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்காதது; பெரும் நிறுவனங்கள் சிறு குறு விவசாயிகள் மீது ஆதிக்கம் செலுத்துவது; பெரும் டயர் நிறுவனங்கள் ஒன்றிணைந்து, சந்தையில் ரப்பரின் விலையை சட்டவிரோதமாக குறைப்பது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்புடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்; நவீன தாராளமய கொள்கை போன்ற பல காரணிகள் ரப்பர் துறையையும், விவசாயிகளையும் சரிவை நோக்கி தள்ளுகிறது.
இந்த காரணிகளால் இந்தியாவில் ரப்பர் இறக்குமதி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2011 - 2012 ஆம் நிதியாண்டில் 4 லட்சம் மெட்ரிக் டன் ரப்பர்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் 2021 - 2022 ஆம் நிதியாண்டில் 5.46 மெட்ரிக் டன்னாக கூடியுள்ளது. தற்போது நிறைய பகுதிகளில், ரப்பர் தோட்டங்கள் தனியாரால் நடத்தப்படுகிறது. மற்றொருபுறம், அரசு நடத்தும் தோட்டத்திலும் குறைந்த கூலியும் பல கட்டுபாடுகளும் இருக்கிறது.
தமிழ்நாட்டு விவசாயிகளைப் பொறுத்தவரையில், “ரப்பர் விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் தற்போது அன்றாட வாழ்க்கையை நடத்தவே சிரமப்படும் நிலையில் இருக்கின்றனர். ஒரு ஆயிரம் ரூபாய் இருந்தால்தான் ஒரு நாளை கடக்க முடியும் என்கிற சூழலில் ரப்பர் விவசாயிகள் இருக்கிறார்கள். இரவு முதல் விடியற்காலை வரை ரப்பர் பால் எடுப்பதும் அதற்குமேல் களை எடுத்தல், வாழை தோட்டத்தில் வேலை செய்தல் போன்ற பிற வேளைகளில் ஈடுபடுகின்றனர்” என்று வல்சகுமார் கூறினார்.
இதை பற்றி மேலும் வல்சகுமார் பேசுகையில், “கடந்த அதிமுக அரசு தான் தவறு என்று கூறிய இன்றைய அரசும் ரப்பர் விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை. இது அன்றாடம் கிடைக்கும் வேலையில்லை, பருவதிற்கேற்றார் போல் செய்ய வேண்டிய வேலை ஆகவே, குறைந்தபட்ச ஊதியமும் ஆதார விலையும் இருந்தால் மட்டுமே ரப்பர் தோட்ட தொழிலாளர்களும் விவசாயிகளும் வாழ்க்கையை நடத்த முடியும்”, என்று கூறினார்.
ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்
தொடர்ச்சியாக ஏற்படும் விலை சரிவு மற்றும் அதிகப்படியான ரப்பர் இறக்குமதியைக் கண்டித்து, கடந்த செப் 14 ஆம் தேதி, டெல்லியில் இருக்கும் ஜந்தர் மந்தரில ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) சார்பாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கேரளா, தமிழ்நாடு, திரிபுரா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த ரப்பர் விவசாயிகள் பங்கெடுத்துள்ளனர்.
ரப்பர் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளில் இருந்தும் அவர்கள் மீட்கப்பட வேண்டுமென்றால் குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்; விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகளும் விவசாய சங்கங்களும் தீர்வை முன்மொழிகின்றனர்.
AIKS பொது செயலாளர் விஜூ கிருஷ்ணன் பிடிஐ (PTI) செய்தி நிறுவனத்திடம் பேசும்போது கூறியதாவது, “ரப்பர்க்கு குறைந்தபட்ச ஆதாரவிலை ரூ. 360 ஆக இருக்க வேண்டும் ஆனால், உற்பத்திக்கு ஆகும் செலவுகளை கருதி ஒரு கிலோவிற்கு ரூ. 300 வழங்க கோருகிறோம்”, என்றார். மேலும், போராட்டத்தில் பேசுகையில், “தென்கிழக்கு ஆசிய கூட்டமைப்பில் இருக்கும் நாடுகள் விவசாயிகளுக்கு அதிக மானியம் தருவதாகவும், குறிப்பாக தாய்லாந்த் ஒரு ஹெக்டேருக்கு 2.5 லட்சம் மானியம் தருகிறது ஆனால் இந்தியாவில் அதுபோல் மானியங்கள் வழங்கப்படுவதில்லை” என்று கூறினார்.
இப்படியான நிலையில் சமீபமாக அப்பலோ டயர் லிமிடட், எம்ர்ஃப் லிமிடட், சியட் லிமிடட், ஜெகே டயர் & இண்டஸ்ட்ரி லிமிடட் மற்றும் ப்ரில்லா டயர் லிமிடட் போன்ற நிறுவனங்கள் கூட்டாக இணைந்து 2022 ஆம் ஆண்டு செய்த மோசடி, காம்பெட்டிசன் கமிசன் ஆஃப் இந்தியா (CCI) மூலம் அமபலமாகியது. ஆகையால், ரப்பர் சந்தையில் கார்டலைசேஷன் எனப்படும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதால் CCI அந்நிறுவனங்கள் மீது 1,788 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தற்போது விவசாயிகளுக்கு இந்த பணத்தை பங்கிட்டு தர வேண்டும் என்று விவசாய சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இறுதியாக,வருகிற நவம்பர் 26 - 28 வரை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் லட்சகணக்கில் விவசாயிகள் பங்கேற்க, போராட்டம் நடைபெறும் என்று அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல் விடுத்தது.