- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
மக்களுக்கு பலனளித்ததா? மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம்!
மத்திய அரசின் PM-JAY மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைக்கு வந்து 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதனால் மக்கள் அடைந்த பலன் என்ன? அரசின் நோக்கம் பலித்ததா? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

Author: Kanal Tamil Desk
Published: October 1, 2024
ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்குகிறோம் என்ற கருத்தை முன் நிறுத்தி மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) எனும் திட்டத்தை அறிமுகம் செய்தது.
இந்திய மக்கள் தொகையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் சுமார் 40 விழுக்காடு மக்களை சென்றடையும் நோக்கத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் தனியார் காப்பீடு நிறுவனங்கள் இணைக்கப்பட்டு அதன் மூலம் மக்கள் பயன்பெறுவார்கள் என்ற அடிப்படையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
நாடு முழுவதும் இதுவரை 35.4 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 12 கோடி குடும்பங்களை சேர்ந்த 55 கோடி தனி நபர்கள்கள் பயனடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த திட்டம் முழுக்க முழுக்க சாமானிய மக்களின் நலனுக்கானது அல்ல எனவும், இதனால் தனியார் காப்பீடு நிறுவனங்களும், அவர்களிடம் இருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான கமிஷன் தொகை மூலம் மத்திய அரசும்தான் பயன்பெற்றுள்ளது எனவும் அரசியல் தலைவர்கள், சமூக சேவையாளர்கள், மருத்துவர்கள் என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த சூழலில்தான், இந்த திட்டம் அமலுக்கு வந்து 6 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டு இருக்கிறது என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன. உண்மையிலேயே இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள மக்களை சென்றடைந்திருக்கிறதா? மருத்துவம் என்ற அடிப்படை தேவை பாரபட்சம் இன்றி அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதா? மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை என்ற அரசு பொதுமருத்துவமனைகளின் கட்டமைப்பில் எழுந்திருக்கும் சிக்கல் என்ன? தனியார் மருத்துவமனைகள் பெற்றிருக்கும் ஆதாயம் என்ன? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கிறது.
இது குறித்து நமது கனல் இணையதள செய்தி நிறுவனத்திற்கு, மகப்பேறு மருத்துவர் மற்றும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சாந்தி பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், “ பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) எனும் காப்பீட்டு திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகம் செய்துள்ள மத்திய அரசு மக்களின் ஆரோக்கியத்திற்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதுபோல் ஒரு பிம்பத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த திட்டம் எதற்காக? இந்த திட்டத்தின் மூலம் மக்கள் பயன் அடைந்துள்ளார்களா என்ற கேள்விக்கு மத்திய மாநில அரசுகளின் பதில் என்ன?
மருத்துவம் என்பது ஒவ்வொருவரின் அடிப்படை தேவை. ஆனால் மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டத்தால் இடைநிலை மக்கள் பணம் கொடுத்துதான் மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மக்களுக்கான மருத்துவ தேவைகளை பொதுத்துறைகள் முதல் அரசுகள் நேரடியாக செலவு செய்தால், அரசு வழங்குவது 1 ரூபாயாக இருந்தால் கூட அது மக்களை நேரடியாக சென்று சேரும். இடை தரகர்கள்போல் கார்ப்பரேட் காப்பீட்டு நிறுவனங்களை உள்ளே கொண்டு வந்துள்ள காரணத்தால் மக்களுக்கு வந்து சேர வேண்டிய பணம் காப்பீட்டு நிறுவனங்களுக்கும், சில மருத்துவமனைகளின் தவறான செலவீன கணக்குகளுக்கும் சென்று சேர்கிறது.
அது மட்டும் இன்றி, இதில் மத்திய அரசுக்கும் காப்பீட்டு நிறுவங்களிடம் இருந்து ஒரு கமிஷன் செல்கிறது என கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் இது எப்படி முழுமையாக மக்களுக்கான திட்டமாக இருக்க முடியும்? இது ஒரு பக்கம் இருக்க, மருத்துவ ரீதியாக ஏதேனும் தவறுகள் நடைபெறும் பட்சத்தில் அரசு காப்பீட்டு நிறுவனங்களை கை காண்பித்துவிட்டு விலகி விட முடியும் என்ற சூழலும் உள்ளது. மக்களின் வரிப்பணம் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நேர்கோட்டில் இருக்கும் சூழலில், அரசு எப்படி இதில் இருந்து விலகி நிற்க முடியும் என்பதும் பலரின் கேள்வியாக இருக்கிறது.
கிசான் இன்சூரன்ஸ் என்ற விவசாயிகளுக்கான ஒரு காப்பீடு பற்றி கேள்விப் பட்டிருப்போம். இந்த திட்டத்தில், ரூ.30 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் எனும் தனியார் நிறுவனத்திற்கு செல்கிறது. அவர்கள் வழங்கும் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகை வழங்கப்படும். அவர்கள் கூறும் கண்டிஷன்களை பார்த்தால் எதற்கு இந்த கிசான் காப்பீட்டு திட்டம் என நினைத்து தலையில் அடித்துக்கொள்வதுபோல் தான் இருக்கிறது. மழை, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளை விவசாயிகள் தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில் அவர்களுக்கான இழப்பீட்டு தொகையை அரசு நேரடியாக வழங்கினால் மட்டுமே சிறப்பாக இருக்கும். அதை விட்டு விட்டு காப்பீடு நிறுவனம் பார்த்துக்கொள்ளும் என தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது அரசின் சிறப்பு அல்ல.
இதேபோல தான் PM-JAY அரசு காப்பீடு திட்டத்திலும் நடைபெறுகிறது. மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவது மத்திய அரசின் கடமை. அந்த கடமையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இம்மாதிரியான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், இம்மாதிரியான திட்டங்கள் மூலம் முறைகேடு செய்வதற்கும் வாய்ப்புள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு, மக்கள் வரிப்பணத்தில் இருந்து ரூ.100 செலவிடப்படுகிறது என்றால், அதில் தோராயமாக ரூ.18 மட்டுமே மக்களுக்கு வந்து செல்கிறது. மீதமுள்ள ரூபாய் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல முறைகேடுகளுக்கு பலனளிக்க சென்று விடுகிறது.
இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் எப்படி செயல்பட வேண்டும் என்றால், நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் சாதி, மத, இன வேறுபாடுகள் மற்றும் வருமான ரீதியாக உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு எதுவும் இன்றி மருத்துவ சேவை மற்றும் மருந்துகள் முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதுதான். இந்த கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு இதில் இருந்து நழுவிக்கொண்டே இருக்கிறது.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தில் குறைந்தது 6 சதவீதமாவது மக்களுக்கான மருத்துவத்திற்கு செலவிட வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் அரசு அதனை செய்வதில்லை. 1.2 - 1.3 சதவீத அளவுக்கு தான் மருத்துவத்திற்கு செலவு செய்து வருகிறது. அதனை 2.5 சதவீதமாக மாற்றுவோம் என மத்திய பாஜக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், அதையும் அவர்கள் செய்யவில்லை. நாட்டிற்கான அடிப்படை தேவை என்பது எது என்பதிலேயே இங்கு குழப்பம் உள்ளது இதை முதலில் சரி செய்ய வேண்டும்.
ஏற்கனவே மக்களின் மருத்துவ சேவைக்கு நிதி ஒதுக்குவது குறைவு. அப்படி குறைவாக ஒதுக்கும் நிதியையம், இம்மாதிரியாக தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்தால், காப்பீடு தொகை என்பது மக்களுக்கு சொற்ப அளவிலான வகையிலேயே இருக்கும்.
ஒருவர் மருத்துவ செலவுக்கு 100 ரூபாய் செலவு செய்கிறார் என்றால், 80 ரூபாய் மருந்துகளுக்கு மட்டுமே செலவாகிறது. இதனை சரி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதிலிருந்தும் அவர்கள் விலகுகிறார்கள். இதன் காரணமாகவே PM JAY திட்டத்தால் மக்களுக்கு பலனில்லை என்பது எனது கருத்து.
70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அப்படி என்றால் 69 வயதில் உள்ளவர்கள், 65 வயதில் உள்ளவர்களுக்கு ஏதேனும் நடந்தால் பரவாயில்லை.? 70 வயதை கடந்தால் தானே உங்களின் மருத்துவ திட்டம் செல்லுபடியாகும்.? இந்தியாவில் 70 வயதை கடந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு மிகக் குறைவு. “ என்றும்,
“ ஒரே மொபைல் நம்பர், ஆதார் நம்பர் கொடுத்து பல PM JAY காப்பீடு அட்டைகள் உருவாகப்பட்டு மோசடி, இறந்தவர்களுக்கு சிகிச்சை செய்தது போல மோசடி, டிஸ்சார்ஜ் செய்த பிறகும் சிகிச்சை செய்தது போல மோசடி என பல்வேறு ஊழல் புகார்களும் PM JAY திட்ட செயல்பாட்டில் பதிவாகியுள்ளது” என்றும் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் கூறினார்.
மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத், 30 ஆண்டுகளுக்கும் மேலாக மகப்பேறு மருத்துவராக செயல்பட்டு வருகிறார்.சமூக ஆர்வலராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும் தன்னை சமூக பணியில் ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.
ஏழை மக்களுக்கு பயன்படும் என்று தான் அரசு இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. ஆனால் அதன் அடிப்படையிலேயே குழப்பம் உள்ளது என்பதே இங்கு பலரது குற்றச்சாட்டாக உள்ளது. நாட்டு மக்களுக்கான மருத்துவ சேவைகளை அரசு இலவசமாக வழங்க வேண்டும். மருத்துவத்திற்கு அரசு செலவு செய்யும் நிதியானது தனியார் நிறுவனங்கள் போன்று இடைத்தரகர்களை தவிர்த்து அரசே நேரடியாக செலவு செய்ய வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே அரசு செலவு செய்யும் ஒரு ரூபாய் கூட சாமானிய மக்களுக்கு நேரடியாக பலன் அளிக்கும் என்பதே இங்கு பலரின் கோரிக்கையாக உள்ளது.