- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
அதிமுக உட்கட்சி விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் முறையிடும் ஓ.பி.எஸ் தரப்பு!
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க தடையில்லை என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அடுத்து ஓபிஎஸ் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் கேவியேட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Author: Santhosh Raj KM
Published: February 17, 2025
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது .அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஓ.பி.ரவீந்திரநாத், புகழேந்தி ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
இபிஎஸ் தரப்பு வாதத்தில்..,
கட்சி விதிகளில் திருத்தம் செய்தது, இரட்டை இலை, புதிய தலைமை தேர்வு செய்தது உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை என வாதம் வைக்கப்பட்டது. உரிமையியல் நீதிமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரங்கள் உள்ளன என்றும், தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனு தாக்கல் செய்த எவரும், அதிமுக கட்சியின் உறுப்பினர்கள் இல்லை, கட்சியில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்
தேர்தல் ஆணையம் முன்வைக்கப்பட்ட வாதத்தில்
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளின் உத்தரவுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்படும் என தெரிவிக்கப்பட்டது
ஓபிஎஸ் தரப்பு வாதத்தில்..,
ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பெயர் கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது நிலைமை மாறி உள்ளது. பெரும்பாலான உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். அதனால், இது சம்பந்தமாக விசாரணை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது என குறிப்பிட்டிருந்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களும், கேட்ட நீதிபதிகள் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடுமட்டுமல்லாமல், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் "கட்சிக்குள் எந்தப் பிளவும் இல்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், சின்னத்தை முடக்கும் வகையிலான நடவடிக்கைகள் இருக்கக்கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
சி.வி.சண்முகம் பேட்டி :
இந்த நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ”முதலில் தேர்தல் ஆணையத்துக்கு விசாரிக்க அதிகாரம் இல்லை. தேர்தல் ஆணையத்துக்கு இரண்டு அதிகாரங்கள் மட்டும்தான் இருக்கிறது. ஒன்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29A, மற்றொன்று சட்டவிதி 15 (தேர்தல் சின்னம் தொடர்பானவை).
ஒரு கட்சியைப் பதிவுசெய்ய வேண்டும் என்றால், அந்தக் கட்சியின் விதிகள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்ய வேண்டும். அவை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு இருக்கிறதா என்று பார்த்து முடிவெடுக்க வேண்டும் என்ற அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு என்கிறது 29A. அதே பிரிவில், 29A (9) தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியில் பொறுப்பாளர்கள் மாற்றம், பெயர் மாற்றம், விதிகளில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாகத் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும்.
அப்படி தெரியப்படுத்தும்போது அதைப் பதிவு செய்யவேண்டியது மட்டும்தான் தேர்தல் ஆணையத்தின் வேலை. வெறும் ‘குமாஸ்தா’ வேலை மட்டும் தானே தவிர, அது சரியா தவறா என்று பார்க்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை.” என்றார் .
கேவியேட் மனு :
இந்த நிலையில் தான் இரட்டை இலை விவகாரத்தில் உச்ச நீதி மன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக யாரேனும் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவுகள் பிறப்பிக்கக் கூடாது என ஓ.பி. ரவீந்திரநாத், கே.சி.பழனிச்சாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்து உள்ளனர்.