தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / RRB

தேசிய கிராம வங்கியை உருவாக்குவதே காலத்தின் தேவை!

கிராம வங்கிகளை ஸ்பான்ஸர் வங்கியின் பிடியில் இருந்து விடுவித்து விட வேண்டும். சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சமூக-பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு கடன் வழங்குவதற்கு, விவசாயம், வர்த்தகம், வணிகம், சிறு தொழில்கள் மற்றும் பிற உற்பத்தி வளர்ச்சிக்காக தொழில்ரீதியாக நிர்வகிக்கப்படும் மாற்று வழியாகச் செயல்படுவதே பிராந்திய கிராமப்புற வங்கிகளின் அடிப்படை நோக்கமாகும். கிராமப்புறங்களில் நடவடிக்கைகள். பொதுத்துறை வங்கிகளின் 50% கிளைகள் மட்டுமே கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ளன மற்றும் அவற்றின் முன்னுரிமைத் துறை கடன் 40% ஆகும், இதில் 18% விவசாயத்திற்கு.

News Image

Author: Anto Gaulbert

Published: July 24, 2024

இந்தியாவில் வங்கிகள் தேசியமயமாவதற்கு முன்பாக வங்கிச்சேவை என்பது சாமான்ய மனிதர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.

1955-ல் ஸ்டேட் பாங்க் அமைக்கப்பட்டது. அதன் கிளைகள் சில சிற்றூர்களில் திறக்கப்பட்டன. அப்போது தான் வணிக வங்கிகள் பெருநகரங்களை தாண்டி முதன்முதலாக அடிஎடுத்து வைத்தன. 1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகுதான் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமாக இருந்த வங்கிச்சேவை சாமான்ய மனிதர்களுக்கும் சாத்தியப்பட்டது. ஆங்காங்கே ஓரிரு வங்கிகள் சில கிராமங்களில் திறக்கப்பட்டாலும் அவைகளாலும் தேவையான அளவுக்கு கிராமப்புறங்களில் வங்கிச்சேவை செய்ய முடியவில்லை.

1975-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அப்போது வங்கித்துறையின் துணைசெயலாளராக இருந்த திரு.நரசிம்மம் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி ஜூலை 30-ஆம் தேதி ஓர் அறிக்கையை சமர்பித்தது.

‘ஏழை எளிய மக்களுக்கு மிகக் குறைந்த வட்டியில் முதலீடுகளுக்கு ஏற்பாடு செய்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற்வோம்” எனும் ஒளி மிகுந்த வார்த்தைகளில் கிராம வங்கிகள் 1975-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி ஓர் அவசரச் சட்டத்தின் மூலமாக ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

1975-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி ஐந்து கிராம வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டன. ‘Low cost structure’ என கூறிக்கொண்டு வங்கித்துறையில் அன்று இருந்த ஊதிய விகதத்தை வழங்காமல் கிராம வங்கி ஊழியர்களுக்கு மாநில அரசில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியத்தை வழங்கியது. இதன் பின்னணியில் இருந்த சதிகளையும், உழைப்புச் சுரண்டலையும் அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் என்ற சங்கத்தின் கீழ் அணிதிரண்டு கிராம வங்கி ஊழியர்கள் தங்களின் போராட்ட குணத்தால் வென்றது தனி வரலாறு.

இப்படி துவக்கப்பட்ட கிராம வங்கிகள் இன்று 43 கிராம வங்கிகளாக தேசமெங்கும் 26 மாநிலங்கள் மற்றும் 3-யூனியன் பிரதேசங்கள் என 22000 கிளைகளோடு நாற்பது கோடி வாடிக்கையாளர்களை கொண்டு பதினோரு லட்சம் கோடி ரூபாய் வணிகத்துடன் சிறப்பாக இயங்கி வருகின்றன.  

புளிப் பானைகளுக்குள்ளும், சமையலறையின் இடுக்குகளிலும் சுருட்டி மடக்கி வைக்கப்பட்டிருந்த அந்த எளிய கிராம மக்களின் சின்னஞ் சிறு சேமிப்புகளை பெற்று அந்த சேமிப்புகளை நம்பகத்தன்மையுடன் பெருக்கிக் காட்டி அவர்களை கந்துவட்டிக்காரர்களிடம் இருந்து மீட்டெடுத்து என தொடர்ச்சியாக ஒரு மகத்தான பொருளாதார புரட்சியை இந்திய கிராமங்களில் கிராம வங்கிகள் கடந்த அரைநூற்றாண்டுகளாக செய்து வருகின்றன.

கிராம வங்கிகளில் வணிக வங்கிகளுக்கு இணையான Technology வசதிகள் வழங்கப்படாத போதும் கிராம வங்கிகளின் இந்த மகத்தான வளர்ச்சிக்கு பின்னால் இருந்தது அதன் பிராந்திய குணாம்சம் தான். அதாவது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அவைகள் துவக்கப்பட்டதாலும் அந்தந்த பகுதியில் உள்ள இளைஞர்களை பணி அமர்த்தியதாலும் அவர்கள் அந்த மண்சார்ந்த மக்களின் தேவையை அறிந்து அவர்களின் மொழியில் இயல்பாக பழகி ஒரு கிராம வங்கி ஊழியர் என்பதனையும் கடந்து அந்த மக்களில் ஒருவராக மாறி வங்கிச்சேவையை கொண்டு சேர்த்ததே அதன் முக்கிய காரணமாக இருந்தது.

இந்த 43-கிராம வங்கிகளின் நிர்வாக பங்குகளின் 50% ஒன்றிய அரசிடமும், 35% ஸ்பான்ஸ்ர் வங்கியிடமும் (ஸ்பான்ஸர் வங்கி என்பது பொதுத்துறை வங்கி. ஒரே விதி விலக்கு ஜம்மு-காஷ்மீர் வங்கி) மீதம் உள்ள 15% பங்குகள் அந்தந்த மாநில அரசிடமும் உள்ளது.

ஆரம்பத்தில் 196- கிராம வங்கிகளாக இருந்த கிராம வங்கிகளை ‘One State One RRB’ என்னும் அரசின் கொள்கை முடிவின் காரணமாக தற்போது தேசமெங்கும் 43- கிராம வங்கிகளாக அவை இணைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இப்படி தேசமெங்கும் இயங்கும் கிராம வங்கிகளை இதன் அடுத்தக்கட்டமாக ஒரே தேசிய கிராம வங்கியாக உருவாக்கிட வேண்டும் என கடந்த நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக AIRRBEA என்னும் அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்து போராடி வருகிறது.

இப்படி தேசமெங்கும் பரந்து விரிந்து இருக்கும் கிராம வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தேசிய வங்கியாக உருவெடுக்கும் போது அது ஸ்டேட் வங்கிக்கு இணையான கிளைகள் கொண்ட வங்கியாக உருவெடுக்கும். நாற்பது கோடி கிராம மக்களுக்கான வங்கிச்சேவை என்பது முன்னிலும் அதிகரிக்கும். இதன் மூலம் ஒன்றிய அரசின் சமூக நலத்திட்டங்கள் ஆகட்டும், சிறப்பு கடன் திட்டங்களாகட்டும் அனைத்தும் முன்னிலும் வேகமாக எளிய கிராம மக்களை நோக்கி சென்றடையும். தேசமெங்கும் இன்னும் அதிக கிராமப்புற கிளைகள் திறக்கப்படும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக பிராந்திய குணாம்சத்துடன் கூடிய வங்கியாக உருவெடுப்பதால் அந்தந்த பிராந்தியங்களின் வளர்ச்சி மேலும் வலுப்படும்.

| தேசமெங்கும் பரந்து விரிந்து இருக்கும் கிராம வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தேசிய வங்கியாக உருவெடுக்கும் போது ஒன்றிய அரசின் சமூக நலத்திட்டங்கள் ஆகட்டும், சிறப்பு கடன் திட்டங்களாகட்டும் அனைத்தும் முன்னிலும் வேகமாக எளிய கிராம மக்களை நோக்கி சென்றடையும். |

தேசிய கிராம வங்கி vs பொதுத்துறை வங்கிகளுடன் இணைப்பு:

கிராம வங்கிகள் துவக்கப்பட்ட காலத்தில் அனுபவ மிக்க பொதுத்துறை வங்கிகள் ஸ்பான்ஸர் வங்கிகளாக இருந்தால், அந்த வங்கிகளில் பணிபுரியும் அனுபவமிக்க ஊழியர்களை கொண்டு எந்தவித ஆரம்பகட்ட இடர்களும் இன்றி கிராம வங்கிகளை இயக்கிட முடியும் என்பதன் அடிப்படையில் ஸ்பான்ஸர் வங்கிகளின் வசம் கிராம வங்கிகளை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. அதனை பயன்படுத்திக் கொண்ட ஸ்பான்ஸர் வங்கிகள் ஒருபக்கம் கிராம வங்கிகளின் நிர்வாகிகளாகவும், மறுபக்கம் கிராம வங்கிகளின் போட்டியாளர்களாகவும் என இருமுகத்துடன் செயல்புரியத் துவங்கினர். இதனால் ஸ்பான்ஸர் வங்கியில் இருந்து வருபவர்கள் ஏதோ கிராம வங்கிகளின் எஜமானர்களைப் போல கிராம வங்கி ஊழியர்களை நடத்தி வருகின்றனர். இதனையெல்லாம் வணிக வங்கிகளில் பெரும்பான்மை சங்கங்களாக இருக்கும் AIBOC மற்றும் AIBEA சங்கங்கள் ஒருபோதும் கேட்டதில்லை.

1975-ல் Low cost structure-ஆக கிராம வங்கிகள் துவக்கப்பட்ட போது வாய்மூடி மௌனமாக வேடிக்கைப் பார்த்தவர்கள், ஆரம்பகாலத்தில் கிராம வங்கி ஊழியர்களை வங்கி ஊழியர்களாக ஏற்க மறுத்து அவர்களின் சங்கத்தின் கிளையை கிராம வங்கிகளில் துவக்க மறுத்தவர்கள், ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கேட்டு கிராம வங்கி ஊழியர்கள் போராடிய போது அதற்கு எதிராக சாட்சியம் அளித்தவர்கள், வங்கித்துறையில் பென்ஷனுக்கான போராட்டம் நடைபெற்ற போது களத்தில் இறங்கி போராடிய கிராம வங்கி ஊழியர்களை விட்டுவிட்டு பென்ஷன் ஒப்பந்தந்தை போட்டவர்கள், இந்த ஐம்பது ஆண்டுகளில் கிராம வங்கி ஊழியர்களை ஏறிட்டும் பார்க்காத AIBOC மற்றும் AIBEA சங்கத்தின் தலைவர்கள் தற்போது கிராம வங்கிகளை வணிக வங்கிகளோடு இணைக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளார்கள்.

அப்படி கிராம வங்கிகளை வணிக வங்கிகளோடு இணைப்பதற்கு அவர்கள் சில வாதங்களை முன்வைத்து உள்ளார்கள். அதில் ஒன்று தற்போது BASEL-3 விதிகளை வங்கித்துறை கடைபிடித்து வரும் வேளையில் இன்றளவில் 16-கிராம வங்கிகள் BASEL-1 விதிகளின்படி குறிப்பிடப்பட்டுள்ள CRAR-ஐ கூட நிறைவு செய்யவில்லை என கூறியுள்ளனர்.

மேலும் BASEL- விதிகளை காட்டி பொதுத்துறை வங்கிகளை இணைக்க வேண்டும், தனியார்மயமாக்க வேண்டும் என அதிகார வர்க்கம் கூறிய போது அதனை எதிர்த்து போராடியவர்கள் இப்போது எந்த அடிப்படையில் அதே பொய்யான காரணங்களை குறிப்பிட்டு கிராம வங்கிகளை பொதுத்துறை வங்கிகளோடு இணைக்க வேண்டும் என்கிறார்கள்?

இன்றுவரை ஒருபுறம் பொத்துறை வங்கிகள் இணைப்பினை எதிர்த்து போராடி வருபவர்கள் மறுபுறம் எந்த நியாய உணர்வுடன் கிராம வங்கிகளை பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்க வேண்டும் என கோருகிறார்கள் என புரியவில்லை.

பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டால் கிளைகள் மூடப்படும், வேலையிழப்புகள் ஏற்படும், அது தனியார்மயத்திற்கு வழிவகுக்கும் என போராடியவர்கள் தான் இந்த AIBOC மற்றும் AIBEA சங்கத்தின் தலைவர்கள். ஒருவேளை கிராம வங்கிகள் அப்படி பொதுத்துறை வங்கிகளோடு இணைக்கப்பட்டால் அதேபோல் பல கிராம வங்கி கிளைகள் மூடப்படும், புதிய வேலைவாய்ப்புகள் பறிபோகும். இப்படி பொதுத்துறை வங்கிகளின் இணைப்பின் மூலம் ஏற்படும் அத்தனை பாதகங்களும் கிராம வங்கிகளை பொதுத்துறை வங்கிகளோடு இணைப்பதன் மூலம் ஏற்படும். அப்படி இருக்க இந்த தொழிற்சங்க தலைவர்கள் இப்போது யாரின் குரலாக ஒலிக்கிறார்கள் என்பதே நம் கேள்வி.

அடுத்ததாக அவர்கள் தங்கள் அறிக்கையில் மிகுந்த அக்கறையோடு வைத்த வாதம் என்னவெனில் கடந்த 2021-22 நிதியாண்டில் மட்டும் கிராம வங்கிகளுக்கு ரூ.10890 கோடிகள் மூலதனைத்தை ஒன்றிய அரசு வழங்கி உள்ளது. இதுவே கிராம வங்கிகள் வணிக வங்கிகளோடு இணைக்கப்பட்டால் இந்த மூலதனம் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் மிச்சப்பட்டிருக்கும் என கவலைப்பட்டு உள்ளார்கள்.

| கடந்த 2016-17 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை ரூ.310000 கோடிகள் மூலதனத்தை பொதுத்துறை வங்கிகளுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்த போது அதனை பொறுப்புடன் வரவே/ற்றவர்கள் இவர்கள். ஏன் இத்தனை முரண்கள்? |

கிராம வங்கிகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக பல்வேறு அடிப்படை வசதிகள் கூட இன்றி கிராம மக்களுக்கு மகத்தான பொருளாதார சேவையை செய்து வருகின்றன. கிராம வங்கிகள் தாங்கள் வழங்கிய மொத்த கடன்களில் 90% கடன்கள் முன்னுரிமை துறை கடன்களாக வழங்கியுள்ளது. அதிலும் 70% கடன்கள் விவசாய கடன்கள் ஆகும். ஆனால் பொத்துறை வங்கிகளோ தங்களின் மொத்த கடன்களில் 40% முன்னுரிமை கடன்கள் வழங்கியுள்ளது. ஆக கிராம வங்கிகள் பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டால் இதுவரை வழங்கப்பட்டு வந்த முன்னுரிமை கடன்கள் பாதிப்புக்குள்ளாகும்.

தேசமெங்கும் உள்ள சுய உதவிக்குழுக்களில் 32% கிராம வங்கிகளால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களான APY, PMJDY, PMJJY போன்றவைகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் 12-19% பங்கு கிராம வங்கிகளுக்கானது. இப்படி ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் அரசின் திட்டங்களை கிராமப்புற மக்களுக்கு கொண்டு சேர்ப்பதிலும் முன்னணியில் இருக்கும் கிராம வங்கிகளை வணிக வங்கிகளோடு இணைத்தால் இந்தப் பணிகளை இனி யார் மேற்கொள்ளுவார்கள்?

இப்படிப்பட்ட கிராம வங்கிகளை மேலும் வலுப்படுத்த வேண்டுமே தவிர அதனை வணிக வங்கிகளோடு இணைத்து அழித்துவிடக்கூடாது.

கிராம வங்கிகளை வலுப்படுத்திட அவைகளை ஒன்றிணைத்து தேசிய கிராம வங்கியாக உருவாக்குவது காலத்தின் அவசியமாகும். அதற்கு முதலில் கிராம வங்கிகளை ஸ்பான்ஸர் வங்கியின் பிடியில் இருந்து விடுவித்து விட வேண்டும்.

பல்வேறு காலகட்டங்களின் ஒன்றிய அரசு/ ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட அத்தனை கமிட்டிகளும் கிராம வங்கிகளின் சேவைகளை, அதன் பங்களிப்பை பாராட்டியே வந்துள்ளது. மேலும் Parliamentary Standing Committee on Finance கிராம வங்கிகளை இணைத்து தேசிய கிராம வங்கியை உருவாக்கிட கோரி அறிவுறுத்தி உள்ளது..

தேவையற்ற முரண்கள் நிறைந்த வாதங்களை முன்வைக்கும் தொழிற்சங்கங்களின் ஆலோசனைகளை புறந்தள்ளிவிட்டு, பிராந்திய குணாம்சங்களை உள்ளடக்கிய தேசிய கிராம வங்கியை உருவாக்கி வலுப்படுத்துவதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் மற்றும் கிராம மக்களின் வாழ்க்கைத்தரம் மட்டுமல்ல இந்திய வங்கித்துறையும், பொருளாதாரமும் ஏற்றம் காணும்.

[கருத்து தனிப்பட்டது. இந்த கட்டுரை முதலில் வங்கி பணியாளர் சங்கத்தில் வெளியிடப்பட்டது]

Tags:Tamil Nadu Grama BankrrbOne State One RRBNRBInational banknational body