- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
அடுத்த 5 ஆண்டுகளில் 88% இந்தியர்கள் பொருளாதார நிதி சிக்கலை எதிர்கொள்வார்கள்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
நிலையான வேலைவாய்ப்புகள், எதிர்கால சேமிப்பு திட்டமிடல் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அடுத்த 5 ஆண்டுகளில் 88 சதவீத இந்தியர்கள் பொருளாதார ரீதியில் நிதி சிக்கலை எதிர்கொள்ளவார்கள். - தனியார் ஆய்வறிக்கை.

Author: Kanal Tamil Desk
Published: September 8, 2024
டெல்லி : அடுத்த 5 ஆண்டுகளில் 88 சதவீதம் இந்தியர்கள் பொருளாதார நிலையற்ற தன்மை, அதாவது நிலையான வருமானம், சேமிப்பு இல்லாமல் பொருளாதார ரீதியில் பெரும் சிக்கலை எதிர்கொள்வார்கள் என ஓர் தனியார் அமைப்பு ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளது. அவசரக்கால நிதி சேமிப்பு இல்லாமை, முறையான நிதி திட்டமிடல் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த பொருளாதார நிலையற்ற தன்மையை இந்தியர்கள் எதிர்கொள்வார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதித்யா பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் எனும் நிறுவனம் ‘A-Nishchit Index 2024' எனும் பெயரில் ஓர் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயார் செய்துள்ளது. இந்த ஆய்வில் 7,978 பேர் தங்கள் கருத்துக்களை , தாங்கள் சந்திக்கும் நிதி பிரச்சனைகள் குறித்து பதிவிட்டனர். இவர்களில் 35 சதவீதத்திற்கும் அதிகமானோர் நிலையான வேலை இல்லாத சூழலில் உள்ளனர் எனக் கூறியுள்ளனர். அதில் குறிப்பிட்ட அளவில் வேலையில்லாதோர் எண்ணிக்கையும் அடங்கும்.
ஆய்வில், 33.95 சதவீதம் பேர் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள், குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு (AI) தங்கள் வேலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கவலைப்படுகின்றனர். அவர்களில் 76.57 சதவீதம் பேர் காப்பீட்டுக் கொள்கையை (இன்சூரன்ஸ்) தங்கள் குடும்ப நிதிப் பாதுகாப்பு மையமாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய 70 சதவீதம் பேர் தங்கள் அவசரக்கால சேமிப்புக் கணக்குகளை முறையாகப் பராமரித்து வருகின்றனர்.
மேலும், 49 சதவீதம் பேர் நிலையான வைப்பு நிதிகளில் (Fixed Deposite) முதலீடு செய்துள்ளனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் 34.87 சதவீதம் பேர் தாங்கள் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு நிதித் திட்டமிடலில் ஈடுபடவில்லை என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டனர்.
இந்த ஆய்வில் கிடைத்த தரவுகளின்படி 88 சதவீதம் பேர் எதிர்காலத்தில் நிதி நிச்சயமற்ற தன்மையைச் சந்திக்க உள்ளனர். பங்கேற்றவர்களில் பலர் இன்றைய சூழலில் நிலையற்ற நிதி நெருக்கடியை உணர்கிறார்கள் என்று ஆதித்ய பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கமலேஷ் ராவ் கூறினார்.
ஆய்வின் முக்கிய அம்சங்கள் :
83 சதவீதம் பேர் எதிர்கால நிதி திட்டமிடல் அவசியத் தேவை என்று நம்புகிறார்கள்.
77 சதவீதம் பேர் வைப்பு நிதி போன்ற நிலையான முதலீடுகளில் ஈடுபட வேண்டும் என விரும்புகிறார்கள்.
40 சதவீதம் பேர் அதிக லாபம் தரும் அதிக ரிஸ்க் கொண்ட வருவாய் ஈட்டும் முறைகளில் ஈடுபடு வேண்டும் என விரும்புகிறார்கள்.
72 சதவீதம் பேர் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் நேரடி முதலீட்டில் ஈடுபட வேண்டும் என விருப்பப்படுகிறார்கள்.
68 சதவீதம் பேர் தாங்கள் செய்யும் முதலீடுகளில் நிலையான வளர்ச்சி இருக்க வேண்டும். அதே சமயம் நமது முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
70 சதவீதம் பேர் குறுகிய கால லாபத்தை விட நீண்ட கால முதலீடுகளையே விரும்புகின்றனர்.
73 சதவீதம் பேர் காப்பீடு (இன்சூரன்ஸ்) முதலீடுகளைத் தேர்வுசெய்யும் போது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் பரிந்துரைகளை அதிகம் நம்புகின்றனர்.
42.24 சதவீத பெண்களும், 38.13 சதவீத ஆண்களும் தங்கள் குழந்தைகளின் உயர் கல்விக்கான நிதியை உறுதி செய்ய வேண்டியதன் அவசியம் என்பதை கூறினர்.