‘ஒரு மாநிலம் ஒரு RRB’ மத்திய அரசின் திட்டம் என்ன?
- One State - One RRB திட்டத்தின் கீழ் கிராமப்புற வங்கிகளின் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டு வருவதாக DFS-இன் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் அளித்துள்ளார்.

Author: Kanal Tamil Desk
Published: September 26, 2024
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற தொடர் ஆய்வுக் கூட்டங்களில், பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRBs) செயல்பாட்டை அதிகப்படுத்தி, அதன் தொடர் வீழ்ச்சியைச் சமாளிக்கவும், RRBயின் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி நடந்த ஆய்வு கூட்டத்தில், கிராமப்புற வங்கிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை மேற்கோள்காட்டி, அவற்றை சீர் செய்து RRB-யின் தெளிவான முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
One State - One RRB பற்றிய விவாதம்:
கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி நடந்த ஆய்வுக் கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சகம், ‘ஒரு மாநிலம் - ஒரு ஆர்ஆர்பி (One State - One RRB)’ எனும் கொள்கையின் மூலம் கிராமப்புற வங்கிகளை ஒருங்கிணைப்பது குறித்து ஆய்வு செய்யபட்டது.
மத்திய நிதித்துறை சேவை அமைப்பின் (DFS) அதிகாரி ஒருவர் ஒரு மாநிலம் - ஒரு ஆர்ஆர்பி எனும் திட்டம் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை தெரிவித்தார். அவர் கூறுகையில், “ 'One State - One RRB' கொள்கை என்பது கிராமப்புற வங்கிகளை ஒருங்கிணைக்ககூடியதாகும். அவற்றின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் குறிக்கோளுடன் இந்த ஆய்வு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது. இந்தக் கொள்கைக்கான வரைவு விதிகள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. செப்டம்பர் இறுதிக்குள் திட்ட வரைவு முடிவடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என குறிப்பிட்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்த AIRRBEA (அனைத்திந்திய கிராமப்புற வங்கி ஊழியர்கள் சங்கம்) பொதுச் செயலாளர் எஸ்.வெங்கடேஷ்வர் ரெட்டி நமது கனல் செய்தி நிறுவனத்துடன் பகிர்ந்துகொண்ட தகவலின்படி, “ஒரு மாநிலம், ஒரு RRB திட்டமானது தீவிர பரிசீலனையில் உள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஸ்பான்சர் வங்கிகளின் எண்ணிக்கையை குறைப்பதாகும். இந்த செயல்பாட்டின் அடுத்த கட்டம் தேசிய கிராமப்புற வங்கியை நிறுவுவதாகும்." எனத் தெரிவித்தார்.
கிராமப்புற வங்கிகளுக்கு தொழில்நுட்ப உதவிகள் மற்றும் அதனை செயல்படுத்தும் பயிற்சிகளை ஸ்பான்சர் வங்கிகள் வழங்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் ஆய்வு கூட்டங்களில் வலியுறுத்தியுள்ளது.
RRB-யை பாதிக்கும் காரணிகள்:
RRB செயல்பாடுகளை பாதிக்கும் காரணிகள் குறித்தும் இந்த ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பெரு நிறுவனங்களுக்கான வணிக வங்கிகள் (SCBs - Standard Chartered Banks) போன்று ஊதிய விகிதங்களை RRB வழங்கினாலும், மற்ற வங்கிகளுக்கு செல்லும் RRB ஊழியர்களின் எண்ணிக்கையும் RRB செயல்பாட்டை பாதிக்கும் காரணியாக உள்ளது. கிராமப்புற வங்கிப் பதவிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஊழியர் பணியாற்ற வேண்டிய அவசியத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு கூட்டத்தில் வலியுறுத்தினார்.
ஊழியர்களை அவர்களது சொந்த ஊர் பகுதிகளுக்கு நெருக்கமான RRB கிளைகளுக்கு நியமிப்பதன் மூலம், கிராமபுற வங்கிகள் தங்கள் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், வாடிக்கையாளர் தொடர்புகளை மேம்படுத்தவும், வங்கி செயல்திறனை அதிகரிக்கவும் முடியும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
NABARD (National Bank for Agriculture and Rural Development) தரவுகளின்படி, RRB ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 2022ஆம் நிதியாண்டில் 95,833ஆக இருந்தது. 2023ஆம் நிதியாண்டில் 91,664ஆகக் குறைந்துள்ளது. இந்தச் சூழல் ஊழியர்களின் பற்றாக்குறையை ஊக்குவிக்கிறது.
வைப்பு நிதி (Savings Account) வீழ்ச்சி:
இந்த ஆய்வுக் கூட்டம் RRB-களில் டெபாசிட் வளர்ச்சியில் நிலவி வரும் வீழ்ச்சியை ஆதாரங்களோடு எடுத்துரைத்தது. கடந்த 10 ஆண்டுகளில் காப்பீடு (இன்சூரன்ஸ்) போன்ற மூன்றாம் தரப்பு சேவைகளை பயனர்களிடம் கொண்டு சேர்ப்பதில் RRB வங்கிகள் அதிக கவனம் செலுத்தியுள்ளன. நிலையான வைப்புத்தொகை (Fixed Deposit) திட்டத்தில் ஆயுள் காப்பீட்ட்டை (இன்சூரன்ஸ்) பயனர்களிடம் கொண்டு சேர்க்க வங்கி அதிகாரிகள் முயற்சித்து வந்துள்ளனர். இந்த நடைமுறையானது RRB வங்கி சேவைகளில் இருந்து நிதி, குறிப்பிடத்தக்க வகையில் வேறு விதமாக செல்வதற்கு வழிவகுக்கிறது எனவும் நிதியமைச்சர் அந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டினார். காப்பீட்டிற்கு அனுப்பப்பட்ட நிதிகள் நிலையான வைப்புகளில் வைக்கப்பட்டிருந்தால், 2023 நிதியாண்டில் வங்கி வைப்பு வளர்ச்சி 5.5% அதிகமாக இருந்திருக்கும் எனவும், இதனை கருத்தில் கொண்டு மேற்கண்ட நடைமுறைகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
RRB-களில் தொழில்நுட்ப மேம்பாடு:
இந்த ஆய்வு கூட்டங்களில் RRBயின் தொழில்நுட்ப செயல்பாடு மற்றொரு முக்கிய அம்சமாக இருந்தது. RRB-கள் தங்கள் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை, குறிப்பாக இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் சேவைகளின் அடிப்படையில் நவீனமயமாக்க வேண்டியதன் அவசியத்தை நிதியமைச்சர் வலியுறுத்தினார்.
RRBகள், நடப்பு நிதியாண்டில் இதுவரை இல்லாத வகையில், ரூ.7,571 கோடியாக ஒருங்கிணைந்த நிகர லாபமாக பதிவு செய்துள்ளன. மேலும் RRB செயல்பாடு அதிகரிக்க தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மொபைல் பேங்கிங் போன்ற டிஜிட்டல் வங்கிச் சேவைகள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகள் போன்ற வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இன்றியமையாததாக இருந்து வருகிறது.
நிதி அமைச்சகத்தின் உத்தரவுகள் RRB-ன் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருக்கும் அமைப்பு ரீதியான பிரச்சனைகள், பணியாளர்கள் பற்றாக்குறை (பணியாளர்கள் வேறு பணிக்கு செல்வது) முதல் டெபாசிட் வளர்ச்சி வரை, தொழில்நுட்ப குறைபாடுகள் மற்றும் ஒரு மாநிலம் ஒரு ஆர்ஆர்பி திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், RRB-கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்தி, இந்தியா முழுவதும் கிராமப்புற வங்கிகளின் செயல்பாடுகள் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments yet.