- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
வங்கிகள் ‘இணைப்பு - ஒருங்கிணைப்பு’! கிராமப்புற வங்கிகளின் (RRB) எதிர்காலம் என்ன?
வங்கிகளின் இணைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பற்றிய விரிவான விளக்கங்கள் பற்றியும், இவ்விரண்டு நடவடிக்கைகள் மூலம் கிராமப்புற வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் எதிர்கொண்ட சாதக, பாதகங்கள் பற்றியும் இந்த கட்டுரையில் காணலாம்.

Author: Kanal Tamil Desk
Published: October 2, 2024
கிராமப்புற வங்கிகளான RRB-க்கள் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் அதன் செயல்பாடுகளையும், அடுத்தகட்ட நகர்வுகளையும் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ‘ ஒரே மாநிலம் ஒரே ஆர்.ஆர்.பி’ மாதிரியான திட்டங்கள் மூலம் கிராமப்புற வங்கிகள் இணைக்கப்பட உள்ளதா அல்லது ஒருங்கிணைக்கப்பட உள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
இணைப்பு , ஒருங்கிணைப்பு என்ற வார்த்தைகள் ஒரே அர்த்தம் தருவது போல இருந்தாலும், இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. கிராமப்புற வங்கிகள் ஒன்றாக இணைக்கப்படுமா? அல்லது ஒருங்கிணைக்கப்பட உள்ளதா? என்பது மத்திய அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் இருந்து தெரியவரும்.
சமீப வருடங்களில் ஆர்.ஆர்.பி-கள் தங்கள் அடையாளத்தையும் பணியாளர்களையும் தக்க வைத்துக் கொண்டு, படிப்படியான ஒருங்கிணைப்புகள் மூலம் தங்கள் வட்டாரத்தை விரிவடைய செய்துள்ளன. இதற்கு நேர்மாறாக, பொதுத்துறை வங்கிகள் (PSBs) பொதுவான இணைப்புகள் மூலம் தங்கள் அடையாளங்களை இழந்து , வங்கி கிளைகள் குறைக்கப்பட்டு பணியிடங்களும் குறைக்கப்பட்டு வருகின்றன என சில தரவுகள் குறிப்பிடுகின்றன.
கிராமப்புற வங்கிகள் (RRBs) தற்போது ஓர் மிக முக்கிய கட்டத்தில் இயங்கி வருகின்றன. மத்திய நிதி அமைச்சகம் மற்றும் நிதிச் சேவைகள் துறை (DFS) ஆகியவை ஆர்.ஆர்.பிக்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அதற்கான செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நடடவடிக்கைகளில் ‘ ஒரு மாநிலம் - ஒரு ஆர்.ஆர்.பி" திட்டத்தை செயல்படுத்துவது மிக முக்கிய நடவடிக்கையாக எதிர்நோக்கப்படுகிறது.
ஆர்.ஆர்.பிகளின் எதிர்காலத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான விவாதங்கள் இணைப்புகளை வலியுறுத்தினாலும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தும் ஒருங்கிணைப்புகளை எதிர்நோக்கி செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒருங்கிணைப்பு மற்றும் இணைப்பு நடவடிக்கைகளுக்கு இடையேயுள்ள வித்தியாசங்களை கிழே காணலாம்.
இணைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கு இடையேயான வேறுபாடுகள் :
ஒருங்கிணைப்பு என்பது வங்கிகளின் தனிப்பட்ட அடையாளங்கள், பணியாளர்கள் மற்றும் கிளை நெட்வொர்க்குகளைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் வங்கிகளை ஒருங்கிணைக்கும் செயலாகும் . ஊழியர்கள் மற்றும் அந்த வங்கி சேவைகளில் எந்தக் மாற்றமும் இல்லாமல் வங்கிகள் ஒருங்கிணைப்பு நடைபெறுகிறது. 2005ஆம் ஆண்டு முதல், RRBகள் பல்வேறு கட்டமாக ஒருங்கிணைப்புகளுக்கு உட்பட்டுள்ளன.
இந்த ஒருங்கிணைப்பானது கிளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் வங்கி வணிக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வண்ணம் உள்ளது. உதாரணமாக, சர்வா யுபி கிராம வங்கி (மீரட்) மற்றும் பிரதமா கிராம வங்கி (மொராதாபாத்) ஆகியவற்றின் இணைப்பின் மூலம் பிரதம UP கிராம வங்கி உத்திர பிரதேசத்தில் உருவாக்கப்பட்டது.
இதற்கு நேர்மாறாக, பொதுத்துறை மற்றும் வணிக வங்கிகள் மத்தியில் இணைப்பு நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது. இணைப்பு என்பது வங்கிகளை ஒன்றுடன் ஒன்று சேர்ப்பதை குறிக்கிறது. இதன் விளைவாக வங்கி கிளைகள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் சூழல் உருவாகும். இதன் மூலம் அந்தந்த வங்கிகள் தங்கள் தனிப்பட்ட அடையாளத்தை இழக்கிறது.
வணிக வங்கிகள் மத்தியில் இணைப்பு என்பது ஒரு பொதுவான நிகழ்வாகவே உள்ளது. உதாரணமாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானர், ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் மற்றும் பாரதிய மகிளா வங்கி போன்ற வங்கிகள் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வங்கிகள் ஒருங்கிணைப்பு - வங்கிகள் இணைப்பு வேறுபாடுகள் :
ஒருங்கிணைப்பு :
- வங்கிகளின் அடையாளங்கள் பாதுகாக்கப்படுகிறது.
- பணியாளர் மற்றும் கிளைகள் எண்ணிக்கைகள் குறைக்கப்படாமல் அதன் நெட்ஒர்க் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
- ஒருங்கிணைப்பு மூலம் பணியாளர்களின் பணி நிரந்தரம் உறுதிசெய்யப்படுகிறது. விருப்ப ஓய்வு ,திடீர் இடமாற்றம் ஆகியவை இதில் நடைபெறாது.
- ஒருங்கிணைப்பு மூலம் கடந்த 2014 முதல் 2019 வரையில் 2,960 புதிய கிராமிய வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டன.
- கிராமிய வங்கிகள் 2006இல் 523 மாவட்டங்களில் இருந்தது. இந்த எண்ணிக்கை 2023இல் 696 மாவட்டங்கள் வரையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இணைப்பு செயல்பாடு :
- வங்கிகள் அதன் அசல் அடையாளத்தை இழக்கிறது. உதாரணமாக ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், பாரதிய மகிளா வங்கி ஆகியவை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது .
- வங்கி இணைப்பு மூலம் கிளைகள் மற்றும் அதன் பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிகளை ஒன்றுடன் ஒன்று சேர்ப்பது, அந்த வங்கி செயல்பாடுகளை வெகுவாக பாதிக்கும். இதன் மூலம் பணியார்களுக்கு திடீர் இடமாற்றங்களும், விருப்ப ஓய்வு பெரும் சம்பவங்களும் நடைபெறுகிறது.
- இணைப்பின் விளைவாக பொதுத்துறை வங்கிகளின் 3,400 வங்கி கிளைகள் மூடப்பட்டன.
- இணைப்பு செயல்பாடு பல்வேறு வங்கி கிளைகளை மூடுவதற்கும், வங்கி செயல்பாடுகளை தடுப்பதற்கு மட்டுமே வழிவகுக்கிறது.
ஒருங்கிணைப்பு பற்றிய NABARD (National Bank For Agriculture And Rural Development) அறிக்கையின்படி, RRB கிளைகளின் மொத்த எண்ணிக்கை 2006இல் 14,494ஆக இருந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2024இல் 22,000ஆக அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில், 2006-ல் 523 மாவட்டங்களில் இருந்த கிராம வங்கிகளின் செயல்பாடு 2024-ல் 696 மாவட்டங்களாக விரிவடைந்ததுள்ளது. ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மூலம் RRBகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Image: NABARD report detailing about RRBs post amalgamation period since 2005
RRB சட்டம் கூறுவதென்ன?
1976இல் உருவாக்கப்பட்ட பிராந்திய கிராமப்புற வங்கிகள் சட்டத்தில் ‘வங்கிகள் இணைப்பு’ என்ற வார்த்தை இல்லை. அப்போது இருந்தே ஆர்ஆர்பிக்களின் நலனை கருத்தில் கொண்டு ‘வங்கிகள் ஒருங்கிணைப்பு’ என்பதை மட்டுமே செயல்படுத்தபட்டு வருகிறது.
ஆர்ஆர்பி சட்டத்தின் அத்தியாயம் 5-ல் உள்ள பிரிவு 23Aயின் படி, “இந்தச் சட்டத்தில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால்,, மத்திய அரசு, தேசிய வங்கி, மாநில அரசு மற்றும் ஸ்பான்சர் வங்கியுடன், பிராந்திய கிராமப்புற வங்கிகளின் நலன் குறித்து கலந்தாலோசித்து, இணைப்பு அவசியம் என்று கருதினால். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்திய கிராமப்புற வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். “ என்பதாகும்.
இணைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு செயல்முறையானது இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளின் ஒரு முக்கியமான அணுகுமுறையாக உள்ளது. இது பொதுத்துறை வங்கிகள் மற்றும் RRB இரண்டிற்கும் பொருந்தும். இருப்பினும், RRBகளின் எதிர்காலம் என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது. நிதி அமைச்சகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக RRB காத்திருக்கிறது. RRBகளின் இணைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பாக நடந்து வரும் விவாதம் பொதுமக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.