- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
50 ஆண்டுகால போராட்டம்.. பிராந்திய கிராம வங்கிகள் கடந்துவந்த பாதை!
பிராந்திய கிராம வங்கி சேவை (RRB) இந்தியாவில் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் அதன் பொன்விழா நிகழ்ச்சி மதுரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Author: Kanal Tamil Desk
Published: October 9, 2024
மதுரை : கிராமங்களில் உள்ள பாமர மக்களின் படிவாசல் வரை சென்று வங்கியின் சேவையை கடத்திய பெருமை பிராந்திய கிராம வங்கிகளுக்கு (RRB) உண்டு. ஆனால் அந்த வங்கி மற்றும் வங்கி ஊழியர்கள் தங்கள் சேவைகளை தங்குதடையின்றி தொடர பல்வேறு போராட்டங்களை கடந்து வந்திருக்கிறார்கள் என்ற வரலாற்று நிகழ்வு இங்கு பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
பொதுத்துறை வங்கிகளுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் வழங்கப்படும் எவ்வித சலுகைகளுக்குள்ளும் இணைக்கப்படாத இவர்கள் இந்த 50 ஆண்டுகளை வெற்றிகரமாக எப்படி கடந்து வந்தார்கள்? அவர்களுக்கான உரிமைகளை எப்படி போராடி பெற்றுக்கொண்டார்கள்? அந்த போராட்டங்கள் பல தலைமுறைகளை கடந்து பயணித்தற்கு காரணம் என்ன? என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
பொதுவாக பிராந்திய கிராம வங்கி என்றால் என்ன?
மத்திய நிதி அமைச்சகம் மற்றும் மாநில அரசின் உரிமை ஆகியவற்றின் கீழ் இந்த கிராம வங்கிகள் இயங்குகின்றன. இந்த கிராம வங்கி உருவாக்கப்பட்டத்தின் முக்கிய நோக்கம் கிராமங்களையும், அங்கு வாழும் பாமர மக்களையும் பொருளாதார அமைப்பின் கீழ் ஊக்குவிக்கவே. 1975, அக்டோபர் 2ஆம் தேதி, முதன் முதலாக உத்திரபிரதேச மாநிலத்தில் கிராம வங்கி சேவை தொடங்கப்பட்டது. அது படிப்படியாக நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு மிக முக்கியக் காரணம், இந்தியாவில் பெரும்பாலான பகுதி கிராமங்கள் என்பதால் இந்த நோக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காலப்போக்கில் கிராம வங்கி எதிர்கொண்ட சவால் என்ன?
கடந்த 1990-களில் நாடு முழுவதிலும் 190க்கும் மேற்பட்ட RRB-கள் இயங்கி உள்ளன. ஆனால் அது காலப்போக்கில் ஒன்றிணைக்கும் சட்டத்திட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கி மொத்தம் 43 RRB-கள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதனால் ஏற்படும் பணி சுமை அதனை தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை வங்கி ஊழியர்கள் எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அதனை தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட, மேற்கொண்டு வரும் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்கள்:
* 12வது இருதரப்பு தீர்வு ஊதிய திருத்தம்
* விடுப்பு விதிகளில் திருத்தம்
* ஓய்வு பெற்றவர்களுக்கான கருணைத் தொகை
* RRB சங்கங்களை ஊதிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்துதல்
* COMPUTER INCREMENT
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உரிமை குரலை எழுப்பத்தொடங்கியுள்ளனர் ஆர்.ஆர்.பி ஊழியர்கள். 50 ஆண்டின் ஆரம்ப புள்ளியில் சிலர் எடுத்த முன்னெடுப்பு அடுத்தடுத்த தலைமுறையினரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு, தன்நிகர் அற்ற சுயநலம் அற்ற வெற்றியை நாங்கள் பெற்றுள்ளோம் என பெருமிதம் கொள்கின்றனர் இந்த வங்கி ஊழியர்கள்.
50 ஆண்டுகல வெற்றிக்கொண்டாட்ட பொன்விழா:
இவர்களின் இந்த 50 ஆண்டுகல பயணத்தின் வெற்றி விழாவை கொண்டாடும் வகையில், மதுரை EMAR மஹாலில் வைத்து தமிழ் நாடு கிராம வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம் ஆகியவை இணைந்து பொன்விழாவை நடத்தியுள்ளது.
இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம வங்கிகளை சேர்ந்தோர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக AIRRBEAவின் அகில இந்திய பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வர ரெட்டி AIRRBEAவின் லீகல் கமிட்டி நாகபூசன் ராவ் மற்றும் மதனன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அதேபோல, தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் லக்ஷ்மி நாராயணன், பொதுச்செயலாளர் அஷ்வத், தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் ஆண்டோ கால்பட், பொதுச் செயலாளர் அறிவுடை நம்பி மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம் தலைவர் புளுகாண்டி, பொதுச்செயலாளர் கிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும், இந்த விழாவில் AIRRBEAவின் சாதனைகள் மற்றும் போராட்டங்கள் குறித்த குறும்படமும் வெளியிடப்பட்டது. இந்த உணர்வுப்பூர்வமான குறும்படத்தை மாதவராஜ் தயாரித்திருந்தார். இதில், RRB தோன்றியது முதல் தொழிற்சங்கத்தினர் கடந்துவந்த பாதைகள் என விரிவடைந்த அந்த குறும்படம் வரும் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் விதமாக அமைந்தது.