- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
வீட்டுக் கடன் வாங்க போறீங்களா? வட்டி, EMI, Pre closing பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்
வீட்டுக் கடன் வாங்குகையில் மாதத் தவணை தொகை எவ்வளவு, எத்தனை வருடங்கள் தவணைத் தொகை செலுத்த வேண்டும் என்பதை தாண்டி, வட்டி விகிதம், EMI கணக்கீடு, Pre Closing என பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Author: Kanal Tamil Desk
Published: October 24, 2024
“எவ்வளோ கடனை வாங்கியாச்சும் ஒரு சொந்த வீடு வாங்கனும்” என்பது தான் இங்கு பெரும்பாலான நடுத்தர மக்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது. சொந்த வீடு என்பது நிரந்தர சொத்து, முதலீடு என்பதையும் தாண்டி பலருக்கு வாழ்க்கை லட்சியமாகவே இந்த கனவு இருக்கிறது.
லட்சியமாக இருக்கும் இந்த சொந்த வீட்டை வாங்குகையில் பெரும்பாலனோர் வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் வீட்டு கடன் பெற்று தான் வீடு கட்டும் சூழல் நிலவுகிறது. அப்படி வீட்டு கடன் வாங்குகையில் வங்கிகள் கூறும் கட்டுப்பாடுகளை, தவணை விவரங்களை, வட்டி மாறுதல்கள் பற்றி பலர் கவனிக்க தவறுகின்றனர்.
தாங்கள் வாங்கும் வீட்டு கடன் எவ்வளவு, அதற்கான வட்டி எத்தனை சதவீதம், எத்தனை வருடங்கள் கடனை அடைக்க வேண்டும், எவ்வளவு தொகை மாதத் தவணையாக செலுத்த வேண்டும்.? இதனை மட்டும் தான் கடன் வாங்கும் போது கேட்டுக்கொள்கின்றனர். அந்த தவணைத் தொகை எத்தனை வருடங்கள் கட்ட வேண்டும் என்று மொத்தமாக கணக்கிட்டு பார்த்தால் நாம் வாங்கிய கடனை விட அதற்கு கட்டிய வட்டி தொகை அதிகமாக இருந்திருக்கும்.
வீட்டுக் கடன் வட்டி எப்படி கணக்கிடப்படுகிறது? மாத தவணை தொகையிலிருந்து கடன் தொகைக்கான வட்டி எப்படி கழித்துக் கொள்ளப்படுகிறது? ஒருவேளை தவணை காலத்திற்கு முன்கூட்டியே ஏதேனும் பெரிய தொகை கிடைத்தால் நமது கடனை மொத்தமாக அடைத்து கொள்ள முடியுமா? அப்படி மொத்த கடனை திருப்பி செலுத்தினால் அது பயனுள்ளதாக இருக்குமா? அதற்கான சாதக பாதகங்கள் என்னென்ன என்பதை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
அதிகரிக்கும் வீட்டுக் கடன்:
2012ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி, வங்கிகள் வழங்கிய கடன்களில் 8.6 சதவீதம் மட்டுமே வீட்டுக்கடனாக இருந்துள்ளது. ஆனால், 2022-2023 ஆண்டுகளில் இந்த சதவீதம் 14.2ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 8 சதவீதம் அளவுக்கு வீட்டு கடன் வளர்ச்சி உள்ளது என்கிறது ஒரு நிதிநிலை புள்ளி விவரம். வீட்டு கடன் வாங்கியதில் 90 சதவீதம் பேர் 35 லட்சத்திற்கு குறைவாக கடன் பெற்றவர்களாம்.
கவனிக்க வேண்டியவை:
வீட்டுக்கடன் வாங்குகையில் நமக்கு விதிக்கப்படும் வட்டி பற்றிய புரிதல் வேண்டும். இது நிலையான வட்டியா? அல்லது மாற்றம் பெறுமா? என கவனிக்க வேண்டும்.
நிலையான வட்டி என்றால் உங்கள் தவணை காலம் 25 வருடங்கள் என்றால் அது வரையில் மட்டுமே நீங்கள் தவணை செலுத்துவீர்கள். அதுவே ஏற்றஇறக்கம் கொண்ட விகிதம் என்றால் தவணைக் காலம் கூடுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
குறைந்த பட்சம் 6 மாதத்திற்கு ஒருமுறையேனும் வங்கிக்கு சென்று நமது வீட்டுக்கடன் வட்டியில் மாற்றம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
நமக்கு இடைப்பட்ட காலத்தில் அதிக பணம் வந்தால், அப்போது கடனை திருப்பி செலுத்திக்கொள்ளலாமா என்ற சந்தேகத்தை தீர்த்து கொள்ள வேண்டும்.
அப்படி முடியும் என்றால் அதற்கான வழிமுறை என்னென்ன? கடனை மொத்தமாக அடைக்க முயற்சிக்கும் போது , தவணை தொகையை முறித்துக் கொள்வதற்கான அபராத தொகை ஏதேனும் வசூலிக்கப்படுமா என்பதை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
தவணைத் தொகை (EMI) வசூல்:
ஒருவர் ரூ.50 லட்சம் தொகையை வீட்டு கடனாக வருட வட்டி 8 சதவீதத்தின் கீழ் வாங்குகிறார் என்றால், அவருக்கு தோராயமாக 25 வருடங்கள் தவணைக் காலம் என்றால் மாதத் தவணை சுமார் ரூ.38,500ஆக இருக்கும்.
அவர் முதல் மாதம் தவணை செலுத்துகையில் தோராயமாக 80 சதவீதம் வட்டி மட்டுமே கழிக்கப்படும். 20 சதவீதம் தான் அசல் தொகை கழிக்கப்படும். அதற்கடுத்தடுத்த மாதங்களில் 79 - 21, 78 - 22 என ஒவ்வொரு வங்கியை பொருத்தும் ஒவ்வொரு விதமாக மாறும்.
எப்படி கணக்கிட்டாலும், முதலில் வட்டி மட்டுமே EMI தொகையில் இருந்து கழிக்கப்படும். இறுதி தவணை நெருங்கும் வேளையில் தான் EMIஇல் இருந்து பெரும்பாலான தொகை அசல் தொகையில் கழிக்கப்படும்.
சுமார் 5 வருடங்கள் கழித்து தவணைத் தொகையை கணக்கிட்டு பார்த்தால் சுமார் 24 லட்சம் தவணை தொகை செலுத்தி இருப்பீர்கள் அதில், 20 லட்சம் வட்டி மட்டுமே அடைக்கப்பட்டிருக்கும். 4 லட்சம் அசல் தொகை அடைக்கப்பட்டிருக்கும்.
ஒரு மாத EMI கூடுதலாக
ஒரு வருடத்திற்கு 12 தவணைத் தொகைகள் (EMI) செலுத்த வேண்டும். அதற்கு கூடுதலாக 13வது தவணையை நீங்கள் செலுத்தினால் அது உங்கள் அசல் தொகையில் இருந்து கழித்து கொள்ளப்படும். (வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு). இந்த வசதியை நீங்கள் வங்கியில் விசாரித்து கூடுதலாக தவணைத் தொகையை செலுத்தினால் அதன் மூலம் உங்களுக்கு நிச்சயம் லட்ச கணக்கான ருபாய் அளவுக்கு நிறைய பலன் கிடைக்கும். உங்கள் தவணை காலம் நீங்கள் நினைத்ததை விட குறைவான வருடத்தில் நிறைவுபெறும்.
ரூ.60 லட்சம் வீட்டு கடன் வாங்கி 65 லட்சம் வட்டியுடன் சேர்த்து நீங்கள் தவணை தொகை செலுத்துகையில் ஒரு மாத கூடுதல் EMI செலுத்துவதால் உங்கள் மொத்த கடனில் தோராயமாக ரூ.20 லட்சம் வரையில் சேமிக்கலாம் என்று பல்வேறு நிதி தரவுகள் கூறுகின்றன.
கடனை மொத்தமாக திருப்பி செலுத்துவது:
நாம் வாங்கிய வீட்டு கடன் தொகையை தவணை காலத்திற்கு முன்பாகவே செலுத்தும் முறை தான் Pre Closing முறை எனும் முன்கூட்டியே திருப்பி செலுத்துதும் முறையாகும்.
இதன் மூலம் தவணை காலத்திற்கு முன்பாக நமக்கு பெரிய அளவில் தொகை கிடைத்தால் அதனைக் கொண்டு வீட்டுக் கடனை மொத்தமாக அடைக்கும் முறை. இதற்கு ஒவ்வொரு வங்கியை பொருத்தும் விதிமுறைகள் மாறும்.
சில வங்கிகளில் எளிதாக வீட்டு கடனை Pre Closing செய்து விட முடியும். ஆனால் பல்வேறு வங்கிகளில் விதிக்கும் நிபந்தனைகளை கண்டு இதற்கு நாம் மாத தவணையை முறையாக செலுத்திவிடலாம் என்ற அளவுக்கு கட்டுப்பாடுகள் இருக்கும்.
Pre Closing - நன்மைகள்:
கடனை முன்கூட்டியே மொத்தமாக அடைத்தால் நமக்கு வீணாக வட்டி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
மாதம் பிறந்தவுடன் தவணைத் தொகை செலுத்த வேண்டும் என நிதி அழுத்தம் இல்லை.
Pre Closing - கவனிக்க வேண்டியவை:
வருமான வரி செலுத்துபவர்கள் மாதத் தவணை தொகையை தங்கள் கடன் கணக்கில் குறிப்பிட்டு அதன் மூலம் வரிச்சலுகைகள் பெறுபவர்கள் தவணையை தொடர்வதே நல்லது.
இதே போல பெரிய அளவிலான தொகை திரும்ப கிடைக்குமா.? இதன் மூலம் வேறு முதலீடு மேற்கொண்டு அதனை கொண்டு தவணைத் தொகை செலுத்த வழி உள்ளதா என்பதை ஆய்வு செய்து பின்னர் தான் மொத்தமாக கடனை திருப்ப செலுத்த வேண்டும்.
வங்கிகள் பெரும்பாலும் தவணை தொகையை முறித்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். அதனால் பெனால்டி தொகை என பெரிய தொகையை சில வங்கிகள் அபராதமாக விதிப்பதுண்டு. அந்த தொகை மிக அதிகமாக இருப்பின், பெரிய தொகையை வேறு எதிலேனும் முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை மாதத் தவணையாக செலுத்துவதே நல்லது.