தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / நிதி

மியூச்சுவல் பன்ட் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

மியூச்சுவல் பன்ட் (Mutual Fund) முதலீடு என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது, அதில் உள்ள வகைகள் என்ன என்பதை இந்த செய்திக்குறிப்பில் காணலாம்.

News Image

Author: Kanal Tamil Desk

Published: October 29, 2024

பங்குச்சந்தை முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. முதலீடுகள் மேற்கொள்ளும் முன் சந்தை விவரங்களை அறிந்து செயல்படவும். என்ற வாசகம் நமது டிவி சேனலிலோ, இணையதள பக்கத்திலோ வேகமாக கடந்து செல்வதை பார்த்திருப்பீர்கள். அதுபோல தான் இந்த செய்தி குறிப்பும். இதில் Mutual Fund பற்றிய சிறு வரையறை மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். முதலீடு தொடர்பான முடிவுகள் என்றுமே உங்களுடையது.

நமது அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து, நாம் எதிர்கால சேமிப்புக்காக வைத்திருக்கும் தொகையை சரியாக சிந்தித்து முதலீடு செய்ய வேண்டும் என்றும், அந்த முதலீடு பாதுகாப்பாகவும், அதே சமயம் குறிப்பிட்ட அளவு லாபத்தையும் கொடுக்க வேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ளது. அவ்வாறான பாதுகாப்பான முதலீட்டு வழிகளில் மியூச்சுவல் பன்ட் (பரஸ்பர நிதி) முதலீடு முக்கிய பங்கு வகிக்கிறது.

நேரடி முதலீடு - மியூச்சுவல் பன்ட்:

பலருக்கும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதன் மூலம் லாபம் ஈட்ட வேண்டும் என்பது விருப்பமாக இருக்கும் அதே வேளையில் தனது முதலீடு நஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணமும் இருக்கும். பங்கு சந்தையில் நேரடி முதலீட்டில் ஈடுபட மார்க்கெட் நிலவரம் பற்றிய போதிய தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும்.  அதே துறையில் அதீத ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், வேறு துறையில் வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் தொகையை பங்குசந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என எண்ணுபவர்களுக்கு சிறந்த வழி Mutual Fund முதலீடு என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஏனென்றால், பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு மேற்கொள்ள நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனத்தின் செயல்பாடு குறித்து அறிந்திருக்க வேண்டும். அதுபோல பல்வேறு நிறுவனங்கள் பற்றியும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஆனால், Mutual Funds-ல் முதலீடு மேற்கொள்ள அந்த அளவு பங்குச்சந்தை பற்றிய ஆழ்ந்த ஆய்வு தகவல்கள் தேவைப்படாது. ஓரளவு பங்குச்சந்தை பற்றிய புரிதல் அறிந்திருந்தாலே போதுமானது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Mutual Funds எப்படி செயல்படுகிறது:

இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEBI-யால் (Securities and Exchange Board of India) அங்கீகாரம் பெற்ற ஒரு Mutual Fund நிறுவனம், முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீட்டுக்கான பணத்தை வாங்கிக்கொள்ளும்.

அந்த நிறுவனத்திடம் ஒரு Fund Management எனும் நிதி மேலாண்மை அமைப்பு இருக்கும். அந்த அமைப்பு பங்குச்சந்தை மார்க்கெட் நிலவரம், தங்கபத்திர முதலீடு, என பல்வேறு நேரடி முதலீடுகள் பற்றி நன்கு ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை தெரிந்து வைத்திருப்பர்.

எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும், முதலீட்டாளர்கள் பணம் பாதுகாப்பாகவும் இருக்கும் என அறிந்து முதலீடு மேற்கொள்வார்கள். அதன் மூலம் கிடைக்கும் லாப வருவாயில் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெற்று மீதமுள்ள லாபத் தொகையை நமக்கு திருப்பி தருவார்கள்.

முதலீடு செய்து நாம் திரும்ப எடுக்கும் காலம் பொறுத்தும், நிறுவனங்களை பொருத்தும் நீண்ட கால முதலீடு, குறுகிய கால முதலீடு என முதலீடுகள் வகைப்படுத்தப்படுகின்றன.

நல்லதா? கெட்டதா?

Mutual Fund நிறுவனத்திடம் Fund Management அமைப்பு இருக்கும். அவர்கள் பங்குச்சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு மேற்கொள்வதால் நமது முதலீட்டுக்கு அதிக ரிஸ்க் இல்லாமல் இருக்கும்.

நேரடி முதலீட்டில் நமக்கு லாபம் அதிகமாக கிடைத்தாலும், திடீரென அந்த நிறுவனம் சரிவர செயல்படவில்லை என்றால் நஷ்டமும் அதே அளவு அதிகமாக இருக்கும்.

Mutual Fund-ல் லாபம் குறைவு அதே போல நாம் எடுக்கும் ரிஸ்க் குறைவு. அதே நேரம் நேரடி முதலீட்டில் லாபம் அதிகமாக இருக்கும். நஷ்டமும் அதிமகாக இருக்கும்.

எப்போதுமே பங்குசந்தையில் குறுகிய கால முதலீடு என்பது தவிர்க்கப்பட வேண்டியவை. நீங்கள் இப்போது தான் முதன் முதலாக பங்கு சந்தைக்குள் வருகிறீர்கள் என்றால் பொறுமையுடன் செயல்படுவது மிக அவசியம்.

மேற்கண்ட இரண்டு முதலீடுகளும் உங்கள் பணத்திற்கு நீங்கள் பொறுப்பு என்பதை மனதில் வைத்து நன்கு ஆய்வு செய்து சரியான நிறுவனங்களில் முதலீடு செய்வது நமது முதலீட்டிற்கு பாதுகாப்பானது.

கவனிக்க வேண்டியவை:

ஒருவரிடம் அதிகமாக பணம் இருக்கிறது. அது அடுத்த ஒரு வருடத்திற்குள் முக்கிய விஷயத்திற்கு தேவைப்படுகிறது என்றிருந்தால் அதனை முதலீடு செய்வது அதிக ரிஸ்க்-ஆக அமையும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Mutual Fund முதலீடு மேற்கொள்கையில், அதில் Direct , Regular என இரண்டு வகை உண்டு.

Direct என்பது இடைத்தரகர் எதுவும் இன்றி நேரடியாக Mutual Fund நிறுவனத்தில் முதலீடு மேற்கொள்வதாகும்.

Regular என்பது இடைத்தரகர் உதவியுடன் Mutual Fund நிறுவனத்தில் முதலீடு மேற்கொள்வதாகும்.

Direct Fund-ல் 0.6 சதவீத கமிஷன் தொகை பிடித்தம் செய்யப்படும் என்றால், Regular முதலீட்டில் 1.6 சதவீதம் வரை கமிஷன் தொகை பிடித்தம் செய்யப்படும் இது செயல்பாட்டு கட்டணம் (Expense Ratio) என நிறுவனத்தை பொறுத்து மாறுபடும்.

முதலீட்டு வேறுபாடு:

மாதம் 10ஆயிரம் ரூபாய் வீதம் 5 ஆண்டுகள் Direct Mutual Fund-ல் முதலீடு செய்தால் 29.5 சதவீதம் விதிக்கப்பட்டு ஒருவர் மேற்கொள்ளும் ரூ.6 லட்சம் முதலீடு ரூ.13.72 லட்சம் மொத்தமாக திரும்ப கிடைக்கும்.

அதுவே, Regular Mutual Fund-ல் முதலீடு செய்தால் 28 சதவீதம் வட்டி பதியப்பட்டு ரூ.6 லட்சத்திற்கு திரும்ப கிடைக்கும் மொத்த தொகையானது ரூ.13.15 லட்சமாகும். இரண்டுக்கும் சுமார் ரூ.60 ஆயிரம் வித்தியாசம் ஏற்படும்.

இவ்வாறு Mutual Fund எனப்படும் பரஸ்பர நிதி முதலீட்டில் பல்வேறு விதிமுறைகள், நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஏற்கனவே கூறியது போல நீங்கள் சம்பாதித்து சேர்த்து வைத்த பணத்தை லாபகரமாக சேமிப்பதை விட பாதுகாப்பாக சேமிப்பது மிக முக்கியம். அதனை மனதில் வைத்து உங்கள் முதலீட்டுகான வழியை தேர்வு செய்வது நல்லது.

Tags:FinanceMutual FundsMutualFundsshare value