- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
மந்தநிலையில் நகர்ப்புற பொருளாதாரம், நிதியமைச்சகத்தின் அறிக்கை கூறுவதென்ன?
நடப்பு நிதியாண்டில் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட மாதாந்திர நிதி ஆய்வு பட்டியலில், நகர்ப்புற மக்களின் தேவைகள் மற்றும் அவர்கள் வணிகம் செய்யும் திறன் குறைந்துள்ளதால் நாட்டின் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் என நிதித்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Author: Kanal Tamil Desk
Published: November 4, 2024
ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது அந்த நாட்டின் மக்கள் தங்கள் தேவைகளை பொருத்தும் அதனை முறையாக பூர்த்தி செய்து வருகின்றனரா என்பதை பொருத்தும் கணக்கிடப்படும். நடந்து வரும் FY2025 நிதியாண்டில் முதல் அரையாண்டு பற்றிய நிதி ஆய்வு முடிவுகள் மத்திய நிதியமைச்சகத்தால் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி வெளியிடப்பட்டது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மற்ற பெரும்பாலான உலக நாடுகளை ஒப்பீடு செய்கையில் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டு வந்த இந்திய பொருளாதாரம், கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக பொருளாதார வேகம் பலவீனமடைந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட ஆய்வு முடிவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வணிகப் பொருட்களின் ஏற்றுமதியில் 3.76% சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், டிராக்டர்கள் போன்ற வணிக வாகனங்களின் விற்பனையும் குறிப்பிட்ட அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அதே போல கடன் வளர்ச்சியும் மந்தநிலையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறையின் திறனானது கடந்த FY2024 நிதியாண்டின் முதல் காலாண்டில் 76.8%-ஆக இருத்தது, ஆனால், FY2025 நிதியாண்டில் தொழில்துறை திறன் 74%ஆகக் குறைந்துள்ளது.
நகர்ப்புற மக்கள் FMCG-யின் (வேகமாக விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள்) விற்பனையின் அளவு வளர்ச்சி கடந்த FY24 நிதியாண்டில் முதல் காலாண்டில் 10.1%-ஆக இருந்தது. அது FY25 நிதியாண்டின் முதல் அரையாண்டில் 2.8%ஆக குறைந்துள்ளது. FADA (மோட்டார் வாகன சந்தை) அறிக்கையின்படி, நடப்பு FY25 நிதியாண்டின் முதல் அரையாண்டில் வாகன விற்பனை 2.3% அளவுக்கு குறைந்துள்ளது,
நடப்பு FY25 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் வீட்டுமனை விற்பனையும் குறைந்துள்ளன. வீட்டுமனை வாங்குவது குறைவது பற்றி குறிப்பிடுகையில், இயல்பை விட அதிகமான மழைப்பொழிவு மற்றும் பருவகால மாற்றங்கள் காரணமாக மக்கள் புதிய மனை வாங்குவதை சற்று தவிர்க்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த மந்தநிலை ஏற்பட்டிருந்தாலும், தீபாவளி, புத்தாண்டு என இந்த பண்டிகை காலத்தில் மேற்கண்ட மந்தநிலை நீங்கி முன்னேற்றத்தை எட்டும் என்று மத்திய நிதியமைச்சகம் கூறி இருந்தாலும், இந்த நடப்பு நிதியாண்டில் வெளியான பொருளாதர அறிகுறிகள் அந்த அளவுக்கு நம்பிக்கை தரவில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
நகர்ப்புற மக்கள் மத்தியில் பொருளாதர மந்தநிலை தென்பட்டாலும், நடப்பு FY25 நிதியாண்டின் முதல் அரையாண்டில் கிராமப்புற தேவைகள் தொடர்ந்து வலுவடைந்துள்ளது என்று நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பருவமழை நன்கு பெய்த காரணத்தால் பயிர் விதைப்பு, அதற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான (100 நாள் வேலை திட்டம்) கூடுதல் ஒதுக்கீடு போன்ற அரசாங்க முயற்சிகளால் கிராமப்புற பொருளாதர நிலை வலுவடைந்து வருவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு FY25 நிதியாண்டின் முதல் காலாண்டில் தொகுதி அடிப்படையில் கிராமப்புற பொருளாதரமானது 5.2% அதிகரித்துள்ளது, இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இருந்த 4% வளர்ச்சியை விட அதிகமாகும்.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலை பற்றிய இந்த இடைவெளி குறித்து அறிக்கையின் வாயிலாக தெரிய வந்தும், நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.5% முதல் 7% வரை வளர்ச்சி அடையும் என்று நிதியமைச்சக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நாடுகளுக்கு இடையேயான மோதல்கள், உயரும் உலக பொருளாதாரப் பிளவு, முக்கிய நாடுகளின் வர்த்தகக் கொள்கைகள் மீதான நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் சந்தை எதிர்வினைகள் போன்ற உலகளாவிய காரணிகளிலிருந்து இந்திய பொருளாதாரத்திற்கு அபாயங்கள் உருவாகலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நகர்ப்புற மக்களின் தேவைகள் குறைந்து வருவது பற்றி நோமுரா எனும் தனியார் நிதியமைப்பு கூறுகையில், நகர்ப்புற ஊதிய உயர்வுகள் குறைந்தது, மக்கள் மத்தியில் தேவையற்ற பொருட்களை வாங்கும் நிலை குறைந்தது, அதிகரித்து வரும் கடன் வட்டி விகிதங்கள், அதிகரிக்கும் கடன் சுமைகள் காரணமாக நகர்ப்புற தேவை என்பது குறைவதற்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.