- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
திருச்சியில் AIRRBEA நடத்திய சிறப்பு பொதுக்கூட்டம் : தற்காலிக ஊழியர்களுக்கான முக்கிய முடிவுகள்
தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் (TNGBWU) மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி ஆபீஸர்ஸ் அசோசியேசன் (TNGBOA) இணைந்து திருச்சியில் நடத்திய தற்காலிக ஊழியர்களுக்கான சிறப்பு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

Author: Kanal Tamil Desk
Published: November 12, 2024
கடந்த 09.11.2024 (சனிக்கிழமை) அன்று திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியில் ஸ்ரீ சார்லஸ் மஹாலில் கிராம வங்கிகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் கலந்து கொண்ட சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தசிறப்பு கூட்டத்தை AIRRBEA-வின் தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் (TNGBWU) மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி ஆபீஸர்ஸ் அசோசியேசன் (TNGBOA) சங்கங்கள் இணைந்து நடத்தின.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு கிராம வங்கியில் தற்காலிக ஊழியராகப் பணிபுரியும் 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.இச்சிறப்பு கூட்டத்திற்கு திரு லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். மேலும், திரு அண்டோ கால்பர்ட், திரு அறிவுடைநம்பி, திரு அஸ்வத், திரு கீதா, திரு சோலை மாணிக்கம், திரு மாதவராஜ், தோழர் சுரேஷ், தோழர் பரிதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இச்சிறப்புக் கூட்டம் அன்று (09.11.2024) காலை 10.30 மணியளவில் TNGBWU சங்கத் தலைவர் திரு.லட்சுமிநாரயணயன் தலைமையில் தொடங்கியது. தமிழ்நாடு கிராம வங்கியில் தற்காலிக ஊழியருக்காக சங்கத்தின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள், அது தொடர்பான வழக்குகள் குறித்து இரு சங்கங்களின் முக்கிய தலைவர்களும் உரையாற்றினர்.
இந்த பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் தொடர் முயற்சி மூலம் தற்காலிக ஊழியர்களுக்கும் போனஸ் கிடைக்க வழிவகை செய்தமைக்கு தற்காலிக ஊழியர்கள், சங்க நிர்வாகிகளுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
அடுத்ததாக, சோலை மாணிக்கம் மற்றும் சுரேஷ் ஆகியோர் கடந்த காலங்களில் சங்கங்கள் மூலமாக தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும், அதில், அடைந்த வெற்றிகள் குறித்தும் பேசினார்கள்.
மாதவராஜ் பேசுகையில், “ கிராம வங்கிகள் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த 50 ஆண்டுகளும் Temporary என்ற வார்த்தைக்கு எதிரான போராட்டத்தை AIRRBEA தொடர்ந்து முன்னெடுத்து வருவதுடன் அந்தந்த காலகட்டத்தில் இந்த தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்தவும் செய்திருக்கிறது.”என்று கூறினார். இவரது பேச்சு, கலந்து கொண்ட அனைவருக்கும் உற்சாகம் மற்றும் நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்தது.
திருமதி.கீதா (வழக்கறிஞர்) பேசுகையில், “ தமிழ்நாடு கிராம வங்கி மட்டுமே தொடர்ந்து தற்காலிக ஊழியருக்காக போராடுகிறது. தொழிற்சங்க அரங்குகளில் தொடர்ந்து தற்காலிக ஊழியருக்காகவும் போராடி அதில் வெற்றியும் பெற்று வருவது AIRRBEA மட்டும்தான்.” என்று கூறினார்.
மேலும், TNGBWU சார்பாக நடைபெறும் வழக்குகள், அதில் கிடைத்த போனஸ், பிஎஃப் போன்ற வெற்றிகள் குறித்தும், அதில் BEFI-TN (Bank Employees Federation of India) தலைவர்கள் காட்டிய உறுதியையும், வழிகாட்டுதல்களையும், தற்காலிக ஊழியர்களுக்கான பணிநிரந்தம் குறித்த வழக்குகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் பேசினார். அதேபோல, தற்காலிக ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும் கீதா (வழக்கறிஞர்) பதில் அளித்தார்.
தற்காலிக ஊழியர்கள் சிறப்புக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
1. தழிழ்நாடு கிராம வங்கியில் பணிபுரியம் தற்காலிக ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
2. தற்காலிக ஊழியர்கள் அனைவருக்கும் பி.எஃப் (PF) பிடிக்க வழிவகை செய்ய வேண்டும்.
3. தற்காலிக ஊழியருக்கு குறைந்தப்பட்ச ஊதியமாக, ஒரு நிரந்த ஊழியரின் அடிப்படை சம்பளத்தின்படி கணக்கிட்டு வழங்க வேண்டும்.
4. வேலையில் இருந்து நீக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை மீண்டும் பணி அமர்த்த தேவையான முயற்சிகள் எடுக்க வேண்டும்.
5. தொடர்ந்து சட்டப் போராட்டம் மற்றும் அகில இந்திய சங்கங்களின் வழிகாட்டுதல்படி போராட்டங்களை நடத்த வேண்டும்.
இறுதியாக TNGBWU செயல் தலைவர் திரு பரிதி ராஜா நன்றி தெரிவிக்கக, திருச்சியில் நடைபெற்ற கிராம வங்கியின் தற்காலிக ஊழியர்களுக்கான சிறப்பு கூட்டம் நிறைவடைந்தது.