- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
இளம் இந்தியர்கள் மத்தியில் அதிகரிக்கும் சேமிப்பு பழக்கங்கள் : சர்வே முடிவுகள் இதோ
தற்காலத்து இந்திய இளைஞர்கள் மத்தியில் சேமிப்பு பழக்க வழக்கம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது என தனியார் நிதி நிறுவன ஆய்வு முடிவுகளில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Author: Kanal Tamil Desk
Published: November 15, 2024
இளைஞர்கள் என்றாலே, வீண் செலவு செய்வார்கள், தேவையில்லாத ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பர் என்ற பொதுவான மனநிலையானது, தற்காலத்து இளைஞர்கள் மத்தியில் மாறி வருகிறது. அவர்கள் தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேமிப்பு மற்றும் முதலீடு பக்கம் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர் என ஏஞ்சல் ஒன் நிதி நிறுவனம் வெளியிட்ட சர்வே முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏஞ்சல் ஒன் (AngelOne) நிதி நிறுவனம் சார்பில் ஃபின் ஒன்(Fin One) நடத்திய சர்வேயில் 13க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,600 இளைஞர்கள் இந்த சர்வேயில் பங்கேற்றனர். அவர்கள் தங்களது பொருளாதார சேமிப்பு பழக்க வழக்கங்கள் குறித்து பதில் அளித்துள்ளனர்.
ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் :
ஆய்வில் பங்கேற்றத்தில் 93% பேர் தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேமிப்பு அல்லது முதலீட்டில் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.
22-25 வயதுக்கு உட்பட்ட, தற்போது சம்பாதிக்க ஆரம்பித்து இருக்கும் இளைஞர்களில் பெரும்பாலானோர் ஆரம்பம் முதலே சேமிப்பு பழக்கத்தை ஆரம்பித்துள்ளனர்.
85% இளைஞர்கள், தங்கள் வாழ்க்கை செலவீனங்களான, உணவு, உடை, இருப்பிடம், போக்குவரத்து ஆகியவற்றிக்கு அதிக செலவு ஏற்படுவதாகவும், அதனால் தங்கள் சேமிப்பு திறன் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
58% பேர் பங்குசந்தையில் முதலீடு செய்வதை தங்கள் முதன்மை முதலீட்டு வழியாகத் தேர்வு செய்துள்ளனர். அதில், 39% இளைஞர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை விரும்புகின்றனர்.
18 - 21 வயதுடைய இளைஞர்கள் பங்குச் சந்தையில் அதீத ஆர்வம் கொண்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
72% பேர் நிலையான வைப்புத்தொகை (Fixed Deposit), மியூச்சுவல் ஃபன்ட் மற்றும் தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்வதை அதிகம் விரும்புகின்றனர்.
மேற்கண்ட பங்குச்சந்தை முதலீடு பற்றிய ஆய்வு முடிவுகளை உறுதிப்படுத்தும் வகையில், இந்திய மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சங்கம் (AMFI) சமீபத்தில் கடந்த அக்டோபர் 2024க்கான தரவு முடிவுகளை வெளியிட்டது. அதில், இந்தியர்கள் மத்தியில் முதலீடுகளின் அளவானது அதிகரித்து வருகிறது என்றும்,
கடந்த செப்டம்பர் 2024-இல் 9.87 கோடி என்ற அளவில் இருந்த SIP கணக்குகளின் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் 10.12 கோடியாக உயர்ந்துள்ளது என்றும், கடந்த மாதத்தில் மட்டும் 24.19 லட்சம் எண்ணிக்கையில் SIP கணக்குகள் இந்திய சந்தைகளில் அதிகரித்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியர்கள் மத்தியில் முதலீடுகளின் பங்களிப்பு அதிகரித்து வருவதை பிரதிபலிக்கிறது.
இளம் இந்தியர்கள் மத்தியில் நிலையான வைப்புத் தொகை (Fixed Deposit), தொடர் வைப்பு தொகை (RD) ஆகிய சேமிப்பு திட்டங்களின் ஆர்வம் குறைவாகவே உள்ளது. இந்த வகை சேமிப்பு திட்டங்களில் 22% - 26% இளைஞர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
71% இளைஞர்கள் தங்களுக்கான நிதி சேமிப்பு, முதலீடு பற்றிய புரிதலை இணையவழி வாயிலாகவோ அல்லது இதர நிதி ஆலோசகர்கள் மூலமாகவோ கற்றுக்கொண்டு வருகின்றனர். அதில் 62% பேர் நிதி சேமிப்பு , முதலீடு பற்றி அறிந்து கொள்ள யூ-டியூப் தளத்தை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
நிதி சேமிப்பு, முதலீடுகளில் ஈடுபடும், 68% பேர் தங்கள் சேமிப்புகளை நிர்வகிக்க தானியங்கி சேமிப்பு வசதிகள் (வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணம் எடுத்து கொள்வது) மற்றும் மொபைல் செயலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்த ஆய்வு நடத்திய ஏஞ்சல் ஒன் நிறுவனத்தின் துணைத் தலைவர் பார்த் தார் இளைய தலைமுறை சேமிப்பு பற்றி கூறுகையில், “இன்றைய டிஜிட்டல் யுகத்தில், அதிகரித்து வரும் இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் வளர்ந்து வரும் நிதி சேமிப்பு, முதலீடு பற்றி இளைஞர்கள் அதிகளவு தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதில் பலமான அடித்தளத்தை அமைக்க வேண்டும்.
சேமிப்பும் முதலீடும் இன்றியமையாத வாழ்க்கைத் திறன்கள் மட்டுமல்ல, நீண்ட கால பெரும் சேமிப்பை உருவாக்குவதற்கான முக்கிய வாய்ப்புகள் ஆகும். இளம் தலைமுறையினர் நிதி ரீதியாக பொறுப்பான பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பது மிக முக்கியமானது. அதே நேரத்தில் அவர்களின் நிதி மேலாண்மை பற்றிய கல்வியறிவு என்பதும் இன்றியமையாத ஒன்றாகும். “ என்று பார்த் தார் கூறியுள்ளார்.