குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டிய முக்கிய நிதி சேமிப்பு பழக்கங்கள்
14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நிதி சேமிப்பு, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து Finhaat வெல்த் மேனேஜ்மென்ட் தலைவர் சங்கேத் பிரபு கூறிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

Author: Kanal Tamil Desk
Published: November 15, 2024
தற்காலத்து குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டியதும், பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஸ்மார்ட்போனில் ஆன்லைன் விளையாட்டுகள், ஆன்லைன் ஷாப்பிங் என மிக எளிதாக பணத்தை செலவு செய்வதை இக்காலத்து குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன.
அதனை தவிர்த்து, இன்றயை காலத்திற்கு ஏற்ற நிதி சூழலை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டியது நமது கடமையாகும். நிதி ரீதியில் குழந்தைகள் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய அறிவுரைகள் குறித்து Finhaat வெல்த் மேனேஜ்மென்ட் தலைவர் சங்கேத் பிரபு பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்," குழந்தைகளுக்கு அவர்களுடைய சிறு வயதில் இருந்தே பணம் எவ்வளவு முக்கியம் என்பதை அறிவுறுத்தி வளர்த்தால் அவர்களுடைய பெரிய வயதில் பணத்தை தேவைக்கேற்ப சிக்கனமாக செலவு செய்து வாழ கற்றுக்கொள்வர்கள் " என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் 10 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் நிதி சேமிப்பு தொடர்பாக கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு…
பணம் சேமிப்பு :
இப்போது பெரியவர்களிடம் கூட பணத்தை சேர்த்து வைக்கும் பழக்கம் இல்லாமல் இருக்கிறது. ஆதலால், அடுத்த தலைமுறைக்கு பணத்தை சேமித்து வைக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுப்பது இன்றியமையாத ஒன்றாகும்.
பட்ஜெட் :
அடுத்ததாக ஒரு மாதத்திற்கு இவ்வளவு தான் செலவு செய்யவேண்டும். அதற்கு ஒரு பட்ஜெட் குறித்து வைத்து அதற்கு மேல் செலவு செய்யக்கூடாது என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் கூறினார்.
தேவை மற்றும் ஆசை :
குழந்தைகள் என்றாலே எந்த விஷயத்தை கேட்கவேண்டும்? எதனைக்கேட்க கூடாது என்று தெரியாமல் தேவையற்ற சில விஷயங்களை கேட்பார்கள். எனவே, எந்தெந்த விஷயங்கள் அத்யாவசிய தேவை, எந்தெந்த விஷயங்கள் ஆடம்பர தேவை என்பதை கற்றுக்கொடுக்கவேண்டும்.
உதாரணமாக, பள்ளிக்கு தேவையான பொருட்கள் மற்றும் சத்தான உணவுகள் வாங்கி கொடுத்து பழகவேண்டும். ஏனெனில் அவை அடிப்படை தேவை என்பதை குழந்தைகளிடம் கூறவேண்டும். அதே நேரம் குழந்தைகள் அடம்பிடித்து கேட்கும் தேவையற்ற விளையாட்டு பொருட்கள் அடிப்படை தேவை இல்லை என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும்.
இதன் மூலம், குழந்தைகள் எது அத்யாவசிய தேவை? எது ஆடம்பர தேவை என்பதை தங்களுடைய சிறு வயதிலே கற்றுக்கொள்வார்கள் எனவும் பிரபு கூறினார்.
அவசரச்செலவுகள் தவிர்ப்பது :
குழந்தைகள் ஒரு ஆசையில் தாங்கள் விருப்பட்ட பொருட்களை கேட்கிறார்கள் என்றால், அதனை நாம், நம்மளுடைய சேமிப்பில் முக்கிய செலவுக்காக வைத்துள்ள பணத்தை செலவு செய்து வாங்கிக்கொடுத்து பழக்க படுத்தக்கூடாது. அந்த பொருள் தேவையற்றது அதனை வாங்கக்கூடாது என்று குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்க்கவேண்டும்.
இதனால், குழந்தைகள் தான் கேட்கும் பொருள் நமக்கு தேவையுள்ளதா? அல்லது தேவையற்றதா? என்பதை சிந்திக்க தொடங்கிவிடுவார்கள்.
மேலும், பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு "மூன்று பானைகள்" விதியை கற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் பிரபு கூறினார். 3 பானைகள் விதி என்றால் "சேமிப்பு" (Save), "செலவிடு" (Spend), மற்றும் "பகிர்வது" (Share) என்பது தான். குழந்தைகளிடம் பணம் கிடைத்தால், அதை எப்படி இந்த மூன்று பானைகளில் சமமாகப் பிரிக்கவேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் பிரபு தெரிவித்தார்.
No comments yet.