- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
அதிகரிக்கும் மருத்துவ செலவுகள் : கைகொடுக்குமா மருத்துவ காப்பீடு?
எதிர்பாரா மருத்துவச் செலவுகளை சந்திக்கும் நடுத்தர குடும்பங்கள், தங்கள் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு அவர்கள் தேர்வு செய்யும் மருத்துவ காப்பீடு எவ்வாறு அவர்களுக்கு உதவுகிறது என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Author: Kanal Tamil Desk
Published: November 15, 2024
கடந்த 2019ஆம் ஆண்டில் நோயாளியின் மருத்துவ செலவில் 5 முதல் 7 சதவிகிதம் நுகர்வு பொருட்கள் (ஊசி, மருந்து உள்ளிட்ட மருத்துவ பொருட்கள்) இருக்கும். ஆனால், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, அம்மாதிரியான நுகர்வு பொருட்கள் மருத்துவ செலவில் 18 சதவீதத்திற்கு மேல் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என பாலிசி பஜார் மருத்துவ காப்பீடு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் மருத்துவச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளது என பல்வேறு மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. குறிப்பிட்டு பதிவிட வேண்டுமென்றால், நாட்டில் மருத்துவ செலவுகளானது ஆண்டுக்கு 14 சதவிகிதம் வரை உயர்ந்து, ஆசியா கண்டத்திலேயே மிக அதிக மருத்துவ செலவுகள் கொண்ட நாடாக இந்தியா மாறி உள்ளது.
இவ்வாறு உயரும் மருத்துவ செலவுகளால் குறைந்த வருமானம் கொண்ட நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மருத்துவ செலவுகளிலிருந்து ஒருவர், தங்கள் குடும்பத்தை நிதி ரீதியாக பாதுகாக்க மருத்துவ உடல்நலக் காப்பீடு அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.
மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், ஒருவரிடம் உரிய மருத்துவ காப்பீட்டு இல்லையென்றால், எதிர்பாராத நோய் அல்லது விபத்தின் போது, ஏற்படும் பெரும் செலவு அவருக்கு நிதி ரீதியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
உதாரணமாக, இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் புற்றுநோய் சிகிச்சைக்கு, ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையில் செலவாகும் எனக் கூறப்படுகிறது. இது ஒரு சாதாரண குடும்பத்தின் நிதி அடித்தளத்தை வெகுவாக பாதிக்கக்கூடும். இதனை கருத்தில் கொண்டு ஒருவர் தங்களுக்கேற்ற முறையான மருத்துவ காப்பீட்டை தேர்வு செய்வதன் மூலம் அதிகப்படியான மருத்துவ செலவை தவிர்க்கலாம் என்கிறது நிதி ஆய்வு முடிவுகள்.
ஒருவர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்தாலும், அது எந்தவகையில் பயன்படும், எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் பலன் கிடைக்கும், அங்கு எந்த மாதிரியான நோய்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என்பதை அறிந்துகொண்டு பாலிசி தேர்வு செய்வது அவசியம்.
சில சமயம், பாலிசிதாரர்கள் தங்கள் மருத்துவமனை பில்லில் சிகிச்சை தொகை அல்லாத மருத்துவ பொருட்களுக்கு சேர்த்து காப்பீடு கைகொடுக்குமா என்பதை கவனிக்க தவறிவிடுகின்றனர். அதனால், சிலர், மருத்துவ காப்பீடு பாலிசி வைத்திருந்தாலும், மருத்துவ பொருட்களுக்கான செலவுகளை காப்பீடு மூலம் பெற முடியாத நிலையும் ஏற்படலாம்.
நடுத்தர வயது நபர் ஒருவர் ரூ.10 லட்சம் வரையில் மருத்துவக் காப்பீட்டைக் கொண்டு, அந்தளவுக்கு உரிய மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்கிறார் என்றால் அவர் மேற்கொண்ட சிகிச்சைக்கான தொகையில் சிகிச்சை செலவுகளை தவிர்த்து மருத்துவ பொருட்களுக்கான செலவுகள் மட்டுமே 11 முதல் 18 சதவீத பங்கைக் கொண்டிருக்கும் எனவும், இது பல சமயங்களில் மருத்துவ காப்பீட்டில் அடங்காது என்றும் பல்வேறு மருத்துவ நிதி ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.
மருத்துவ காப்பீடு பாலிசியை வாங்குவது ஒருவரது மருத்துவ செலவுக்களுக்கு பாதுகாப்பானது என்றாலும் அந்த மருத்துவ காப்பீடானது அவருக்கு தேவைப்படும் நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சைக்கு முழுதாக பயன்படுமா என்பதை ஆய்வு செய்து பாலிசியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்கிறது ஆய்வு முடிவுகள்.
கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் :
- பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் (முகம், தோல் சார்ந்த அழகுக்கான அறுவை சிகிச்சை) மற்றும் எய்ட்ஸ் (HIV) போன்ற பரவும் நோய்களுக்கு பெரும்பாலும் மருத்துவ காப்பீடு இல்லை.
- பெரும்பாலான மருத்துவ காப்பீடுகள் மருத்துவ சிகிச்சைக்கான நிதி பாதுகாப்பை மட்டுமே வழங்குகிறது. மருத்துவ பொருட்கள் இதில் சேர்க்கப்படுவதில்லை. இதனை கருத்தில் கொண்டு பாலிசி தேர்வு செய்ய வேண்டும்.
- ஒருவர் தேர்வு செய்யும் பாலிசியானது, சிகிச்சைக்கு முழு பணத்தையும் செலவு செய்த பிறகு காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படி இருக்கிறதா? அல்லது காப்பீடு நிறுவனம் சிகிச்சைக்கு முன்பே நேரடியாக பணத்தை செலுத்திவிடுமா? என்பதை கவனிக்க வேண்டும்.