- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
பணவீக்கம் உயர்வு சாமானியர்களை எப்படி பாதிக்கிறது? தற்போதைய நிலவரம் இதோ…
அக்டோபர் 2024 நிதி தரவுகளின்படி, நாட்டின் பொது பணவீக்கமானது ஆண்டுக்கு 6.21%ஆக உயர்ந்துள்ளது. இதில், கிராமப்புற பணவீக்க விகிதம் 6.68% ஆகவும், நகர்ப்புற பணவீக்க விகிதம் 5.62% ஆகவும் உள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: November 16, 2024
மத்திய பட்ஜெட், பணவீக்கம், புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடித்தல் என பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த செய்திகள் நமது வாழ்வை, நமது அத்தியவசிய தேவைகளை எப்படி பாதிக்கிறது? என்பது குறித்து நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்தவகையில், பணவீக்கம் என்றால் என்ன? அதனால், சாமானியர்களுக்கு என்ன பாதிப்பு, நமது அன்றாட வாழ்வில் எம்மாதிரியான நிதி சூழலை எதிர்கொள்வோம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பணவீக்கம் என்றால் என்ன?
பணவீக்கம் என்பது நம்முடைய நாட்டின் பணத்தின் மதிப்பு குறைவது என்பதாகும். அதாவது, நாம் ஒரு பொருளை குறிப்பிட்ட தொகைக்கு கடந்த வருடம் வாங்கியிருப்போம். ஆனால் அதே பொருள் இந்த வருடம் கடந்த வருடம் செலுத்திய தொகையை விட அதிக தொகை செலுத்தி வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், நமது பணத்தின் மதிப்பு குறைந்துவிட்டது என்று அர்த்தம்.
15 வருடங்களுக்கு முன்பு ஒரு டீ விலை ரூ.2 ஆக இருந்தது. தற்போது அதே டீ விலை குறைந்தபட்சம் ரூ.15ஆக உயர்ந்துள்ளது. இது டீ விலை அதிகரித்துள்ளதை காட்டவில்லை. நமது 2 ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டது என்பதை காட்டுகிறது. இதற்கு பணவீக்கமும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறனர்.
பணவீக்கத்தின் வகைகள் :
பெட்ரோல் விலை அதிகமாகிறது என ஒருவர் பெட்ரோல் வாகனம் ஓட்டுவதை நிறுத்திவிட்டு மின்சார வாகனம் வாங்கி பயன்படுத்தி வருகிறார் என்றால், அவர் பெட்ரோல் விலை செலுத்தவில்லை என்று அர்த்தமில்லை.
பெட்ரோல், டீசல் விலை ஏற்றதால் அன்றாட பொருட்களின் விலை தாமாக ஏறிவிடும். அதனால், அதன் மூலம் உங்கள் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறும். அப்போது பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு அவர் பணம் கொடுத்து தான் ஆகவேண்டிய நிலை ஏற்படும்.
ஒரு நிலம் வாங்க செல்கிறீர்கள் என்றால், அந்த நிலத்தை வேறு சிலரும் வாங்க விரும்புகின்றனர் என்றால், அப்போது நிலத்தின் விலை அதிகரிக்கும். அதிக பணம் யாரிடம் இருக்கிறதோ அவருக்கு அந்த நிலம் சொந்தமாகும். இதுவும் ஒருவகை பணவீக்கம் தான். இவற்றை வெறும் எடுத்துக்காட்டுகளே. இதுபோன்று நாம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயங்களிலும் பணவீக்கத்தின் தாக்கம் ஏற்படத்தான் செய்கிறது.
பணத்தை அதிகம் அச்சடித்தால் என்ன நடக்கும்?
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகமாகிறது. மக்களிடம் போதிய பணம் இல்லை என்ற சூழ்நிலையில் அதிக பணத்தை அச்சடித்தாலும் பிரச்சனை தான் என்கிறார்கள் பொருளாதர வல்லுநர்கள்.
அதிக பணத்தை அச்சடித்தாலும், அது பணத்தின் மதிப்பை இன்னும் குறைக்குமே தவிர பொருட்களின் விலையை குறைக்காது. பணத்தை அச்சடித்தால் அனைவரது கையிலும் பணப் புழக்கம் அதிகரிக்குமே தவிர அது பணவீக்கத்தை கட்டுப்படுத்தாது எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நாட்டின் தற்போதைய பணவீக்கம் :
அக்டோபர் 2024 நிதி தரவுகளின்படி, நாட்டின் பொது பணவீக்கமானது ஆண்டுக்கு 6.21% ஆகும். அதாவது, இப்போது ஒரு பொருளின் விலை 100 ரூபாய் என்றால், அது அடுத்த வருடம் 106 ரூபாய் 21 பைசாவாக உயர்ந்து இருக்கும், ரூபாய் மதிப்பு குறைந்து இருக்கும். இதுவே பணவீக்கம்.
கிராமப்புற பணவீக்க விகிதம் 6.68% ஆகவும், நகர்ப்புற பணவீக்க விகிதம் 5.62% ஆகவும் உள்ளது.
அதே நேரம், அக்டோபர் 2024 தரவுகளின்படி, உணவு பணவீக்கமானது CFPI தரவுகளின்படி, ஆண்டு பணவீக்க விகிதம் 10.87%ஆக உள்ளது. கிராமப்புறத்தில் 10.69% என்றும், நகர்புறத்தில் 11.09% என்றும் உள்ளது.
அடுத்து, நகர்ப்புற வீடு மனை (ரியல் எஸ்டேட்) பணவீக்கமானது செப்டம்பர் 2024-இல் 2.72%ஆக இருந்தது. அக்டோபர் 2024இல் 2.81%ஆக உயர்ந்துள்ளது. மின்சாரத்துறை பணவீக்கம் செப்டம்பரில் 5.39%ஆக இருந்தது, அக்டோபர் 2024இல் 5.45%ஆக உயர்ந்துள்ளது.
அக்டோபர் 2024 இல், பருப்பு, முட்டை, சர்க்கரை மற்றும் தின்பண்டங்கள் உள்ளிட்ட மசாலாப் பொருட்களுக்கான பணவீக்கமானது சற்று குறைந்துள்ளது என்றும், காய்கறிகள், பழங்கள் மற்றும் எண்ணெய்கள் போன்ற பணவீக்கம் சற்று அதிகரித்துள்ளது எனவும் பணவீக்க தரவுகள் குறிப்பிடுகின்றன.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
பணவீக்கத்தை கட்டுப்படுத்த பொருளாதர வல்லுநர்கள் பொதுவான சில அறிவுறுத்தல்களை அவ்வப்போது வழங்கி வருகின்றனர். அதில், சிலவற்றை இங்கே காணலாம்.
- உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவதன் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்தலாம். குறிப்பாக உணவுப்பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
- வெளிநாட்டு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும். மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மத்திய அரசு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்.
- நிதி பற்றாக்குறை ஏற்படுவதை அரசு தடுக்க வேண்டும். அதற்கென பொருளாதார கொள்கைகளை மேம்படுத்த வேண்டும்.
- அத்தியாவசிய பொருட்கள் பதுக்கி வைக்கப்படுவதை அரசு தடுக்க வேண்டும்.
- பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு மட்டுமல்லாது, ரிசர்வ் வங்கியும் போதுமான நிதி கொள்கையை வகுத்து செயல்படுத்த வேண்டும்.
பணவீக்கம் அதிகரித்து வருவது பற்றி அண்மையில், மத்திய நிதித்துறை செயலாளர் துஹின் காந்த பாண்டே ஆங்கில செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பதற்கு தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, தங்கம், வெள்ளி ஆகிய 5 பொருட்கள் முக்கிய காரணம் எனக் கூறியுள்ளார்.