- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுவது எப்படி? ஆய்வு முடிவுகள் கூறுவதென்ன?
பணக்காரர்கள் தங்கள் முதலீடு, நிதி மேலாண்மை குறித்த முக்கிய முடிவுகளுக்கு பெரும்பாலும் தங்கள் நிதி ஆலோசகர்களையே நம்பி உள்ளனர் என்று தனியார் நிறுவன ஆய்வு முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: November 17, 2024
2024 ஆம் ஆண்டின் நிதி தரவுகளின்படி, 334 பில்லினர்களை (கோடீஸ்வரர்கள்) கொண்ட நாடு இந்தியா எனக் கூறப்படுகிறது. இப்படியான நாட்டில், பலருக்கும் பணக்காரர்களாக வேண்டும் என்ற ஆசையும், பணக்காரர்கள் மட்டும் எப்படி மேலும், பணம் சம்பாதித்து வருகின்றனர் என்ற கேள்வியும் மனதில் எழுந்திருக்கும். இதற்கான பதிலை ஆய்வு செய்யும் பொருட்டு, இந்தியாவில் உள்ள சில பணக்காரர்களிடம் ஒரு தனியார் அமைப்பு ஆய்வு நடத்தியது. அதில், பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்தது.
மிக அதிக சொத்துமதிப்புடைய தனிநபர்கள் (UHNI - Ultra High Net Worth Individual) மற்றும் அதிக சொத்து மதிப்புடைய தனி நபர்கள் (NHI - High Net Worth Individual) என மொத்தம் 388 நபர்களிடம், Crisil எனும் தனியார் அமைப்பு 360 One Wealth Index Survey எனும் பெயரில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன் மூலம் கிடைக்கபெற்ற முடிவுகளை அந்நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ளது.
UHNI-HNI :
UHNI பிரிவில் உள்ள மிக அதிக சொத்துமதிப்புடைய தனிநபர்கள் என்பவர்கள், 30 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சொத்து மதிப்புள்ளவர்கள் என்றும், HNI பிரிவில் உள்ள அதிக சொத்துமதிப்புடைய தனிநபர்கள் என்றால், இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.5 கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்புடைய பணக்காரார்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பணத்தை விட ஆலோசனை முக்கியம் :
பணக்காரர்கள் பலரும் தங்களுடைய பணத்தை அதிகரிக்க உதவும் சேவைகளுக்கும், அதற்கான ஆலோசனைகளுக்குமான கட்டணங்களில் சமரசம் செய்துகொள்வதில்லை. அதற்காக செலவு செய்யும் பணத்தை விட அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை கருத்தில் கொண்டு நிதி ஆலோசனைக்கான கட்டணங்களுக்கு தயக்கம் காட்டுவதில்லை என ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
ஆய்வில் பதிலளித்தவர்களில் சுமார் 30% பேர் தங்கள் சொத்துக்களை பெருக்க கட்டண அடிப்படியிலான நிதி ஆலோசனை சேவைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.
முன்னிலையில் முதியவர்கள் :
‘இளைஞர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும், முதியவர்கள் ஓய்வு எடுக்க வேண்டும்’ என்ற பழைய கூற்றை உடைத்தெறிந்து, தற்காலத்தில் முதலீட்டில் தீவிரமாக செயல்படுவதில் முதியவர்களின் (60 வயதுக்கு மேற்பட்டோர்) பங்கு அதிகமாக உள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆய்வில் பங்கேற்றத்தில் 90% பேர் தங்கள் எதிர்கால திட்டம் குறித்தும், தங்கள் சொத்துக்களின் மீதான வெளிப்புற தாக்கம் (வரி, சொத்து மதிப்பு குறைதல் உள்ளிட்டவை) மீது கவலை அடைகின்றனர். ஆனால், அதுபற்றி அதிகம் கவலைப்படுவது 40 வயதுக்கு குறைவானவர்களே. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அந்த கவலை சற்று குறைவு தான் என்கிறது ஆய்வு முடிவுகள்.
யாருக்கு அதிக ரிஸ்க்?
மிக அதிக சொத்துமதிப்புடைய தனிநபர்களில் (UHNI) 61% பேர் தங்களை ஓரு தொழில்முனைவோர்களாக அடையாளப்படுத்தி கொள்கின்றனர். அதேபோல, அதிக சொத்து மதிப்புடைய தனி நபர்களில் (NHI) 49% பேர் தங்களை சம்பளம் பெரும் தொழில் வல்லுனர்களாக, அதாவது தங்கள் திறமைகளை பணமாக மாற்றி வருகின்றனர்.
இதில், தங்கள் நிதி மேலாண்மை மீது ஆபத்து அதிகமாக உள்ளவர்கள் மிக அதிக சொத்துள்ள பணக்காரர்கள் (UHNI) தான். அதிக சொத்து மதிப்புடைய தனி நபர்கள் (NHI) குறைவான ஆபத்து உள்ளவர்களாகாகவே இருக்கின்றனர்.
பணக்காரர்களின் முதலீடுகள் :
ஆய்வில் பங்கேற்ற பணக்காரர்களில் பெரும்பாலானோர் தங்கள் முதலீடுகளை பங்குசந்தையில் மேற்கொள்கின்றனர். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், 39% பேர் பங்குச்சந்தையை தங்கள் விருப்ப முதலீடாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் முதலீடு செய்வது, ரியல் எஸ்டேட் துறையாகும். தங்கத்தில் முதலீடு என்பது வெறும் 10%ஆக தான் இருக்கிறது.
அதிக ரிஸ்க் உள்ள பங்குசந்தையில் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ளும் போது, நிதி ரீதியில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என ஓரு தற்காப்பு முதலீடாக தங்கத்தில் முதலீடு செய்கின்றனர் எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நிதி ஆலோசகர்களின் பங்கு :
பணக்காரர்களின் நிதி மேலாண்மை, அவர்களின் முதலீட்டு கொள்கையில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் நிதி ஆலோசகர்கள் என்கிறது ஆய்வு முடிவுகள். எதில் முதலீடு மேற்கொள்ள வேண்டும்? எது சிக்கலான வழிமுறையாக உள்ளது? எதில் ரிஸ்க் அதிகம் உள்ளது என பணக்காரர்களை வழிநடத்துவதில் நிதி ஆலோசகர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 25% பேர் தங்கள் நிதி மேலாண்மை, முதலீடுகளை நிர்வகிப்பது நிதி ஆலோசகர்கள் தான் என்பதையும், அவர்களை தான் முழுதாக நம்பியுள்ளதாகவும் வெளிப்படையாக கூறியுள்ளனர். உண்மையில், 50%-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் நிதி ஆலோசகர்களை சார்ந்து தான் முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர் என்கிறது ஆய்வு முடிவுகள்.
பங்கேற்றவர்களில் 12% பணக்காரர்கள் மட்டுமே தங்கள் முதலீட்டு முடிவுகளை தாங்களே முடிவு செய்வதாக கூறியுள்ளனர். 77% பேருக்கு நிதி ஆலோசகர்களின் உதவி தேவைப்படுகிறது.
இந்த ஆய்வு முடிவுகள் மூலம் பணக்காரர்களாக விரும்பும் நபர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பணத்தையும், நிதி மேலாண்மை தெளிவும் கொண்டு தான் அதிக பணத்தை சம்பாதிக்க முடியும். சேமிப்பு மட்டுமே ஒருவரை பணக்காரர்களாக மாற்றிவிடாது. பாதுகாப்பான முதலீட்டை சேமிப்பாக மாற்றினால் நமது நிதி மதிப்பை கூட்டலாம் என்று கூறுகிறது 360 One Wealth Index Survey முடிவுகள்.