தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Friday, Apr 18, 2025 | India

Home / நிதி

அசுர வேகத்தில் காப்பீட்டுத் துறை : சீனா, தாய்லாந்தை பின்னுக்கு தள்ளிய இந்தியா!

இந்தியாவின் காப்பீட்டு துறை 2020-2023 நிதியாண்டில் 130 பில்லியன் அமெரிக்க டாலர் எனும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக தனியார் அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: November 17, 2024

கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு இந்தியாவில் மருத்துவ செலவீனங்களின் விகிதங்கள் கணிசமாக அதிகரித்துள்ளது என்றும், பொதுமக்கள் மருத்துவ காப்பீடு எடுத்துக்கொள்ளும் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. அதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, அண்டை நாடுகளுடன் ஒப்பீடு செய்து நமது நாட்டில் மருத்துவ காப்பீடு எடுப்போரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என மெக்கின்சே எனும் தனியார் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய காப்பீட்டுத் துறையானது, 2020-2023 நிதியாண்டிலிருந்து ஆண்டுக்கு 11 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது என்றும், இதன் மதிப்பு மொத்தமாக, 130 பில்லியன் அமெரிக்க டாலர் எனும் அளவை கடந்து, சீனா மற்றும் தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளை காட்டிலும் அதிகமாகியுள்ளது என மெக்கின்சே தனியார் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு நிலவரப்படி, நாட்டில் ஆயுள் காப்பீடு மதிப்பு 107 பில்லியன் அமெரிக்க டாலராகவும், மற்ற பொதுக் காப்பீடு மதிப்பு 35.2 பில்லியன் அமெரிக்க டாலராகவும் உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு நிலவரப்படி, நாட்டின் மொத்த ஆயுள் காப்பீடு மதிப்பு 55 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இந்த மதிப்பு 2017இல் 60 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியது. அடுத்து கொரோனாவுக்கு முன்னர் 2019இல் காப்பீடு மதிப்பு தோராயமாக 70 முதல் 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

காப்பீட்டுத் துறை வளர்ச்சியின் முக்கிய அம்சங்கள்

ஆயுள் காப்பீடு :

இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு துறையின் இந்த கணிசமான வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, குடும்ப நிதி பாதுகாப்பு மற்றும் நீண்டகால முதலீடுகளின் தேவைதான் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொது காப்பீடு:

பொதுக் காப்பீட்டு துறை 35.2 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இந்த பொது காப்பீட்டுத் துறையின் கீழ், வாகன காப்பீடு, சொத்து காப்பீடு போன்ற காப்பீடுகள் இடம்பெற்றுள்ளன. இம்மாதிரியான காப்பீடுகளும் இந்த அளவுக்கு வளர்ச்சியை சந்தித்துள்ளதும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.  

ஆசிய நாடுகளை மிஞ்சிய இந்தியா :  

ஆயுள் மற்றும் பொது காப்பீட்டின் வளர்ச்சியால், இந்திய காப்பீடு நிறுவனம் 11% ஆண்டு வளர்ச்சியை அடைந்து பெரிய சாதனையை படைத்துள்ளது. இதன் மூலம் சீனா மற்றும் தாய்லாந்து வளர்ச்சியை பின்னுக்கு தள்ளியுள்ளது. ஏனென்றால், இதே காலகட்டத்தில், சீனா மற்றும் தாய்லாந்து காப்பீட்டு துறைகள் 5% க்கும் குறைவான வளர்ச்சியை மட்டுமே கண்டுள்ளன.

வளர்ச்சிக்கான முக்கிய காரணங்கள்

நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி:

இந்தியாவின் நடுத்தர மக்கள் தொகையானது அதிகரித்துள்ளது. மேலும், இவர்களின் பொருளாதார எண்ணங்கள், அதாவது எதிர்கால நிதி சேமிப்புகள் பற்றிய திட்டங்கள் அதுகுறித்த விழிப்புணர்வு இவர்களிடம் அதிகரித்த காரணத்தால், அவர்கள் காப்பீடுகளை தங்கள் எதிர்கால நிதி பாதுகாப்பாக கருதி அதனை தேடிச் செல்ல ஆரம்பித்து விட்டனர் என்றும், இதன் காரணமாக தான் இந்தியாவில் காப்பீட்டு துறை பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சுகாதார விழிப்புணர்வு :

இன்றயை காலகட்டத்தில் உயர்ந்து வரும் மருத்துவச் செலவுகளை பெரும்பாலான மக்கள் புரிந்து கொண்டு, தங்கள் எதிர்கால நிதி பாதுகாப்புக்காக காப்பீடை தேர்வு செய்கின்றனர். குறிப்பாக, நகர்ப்புற மக்கள் மற்றும் இளம் தலைமுறையினர் மத்தியில் காப்பீட்டின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது என்றும் ஆய்வில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கண்ட ஆய்வறிக்கை தரவுகளின்படி, காப்பீட்டு துறையின் வளர்ச்சியானது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் முக்கிய உந்து சக்தியாக மாறுவதற்கு எல்லா வாய்ப்புகள் உள்ளன என்றும், இதன் மூலம் வருங்காலத்தில் இந்திய மக்களின் பொருளாதார நிதி பாதுகாப்பு என்பது சிறந்து விளங்கும் என  மெக்கின்சே தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் கூறப்படுகிறது.

Tags:MckinseyThailandChinaInsuranceHealth Insurance