- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
தனிநபர் கடன்களில் வரி சலுகைகளை பெற முடியுமா? விதிமுறைகள் என்னென்ன?
தனிநபர் கடன் பெறுகையில் அதில் வரிசலுகைகளை பெற முடியுமா? அதற்கான வருமான வரி விதிமுறைகள் என்னென்ன என்பதை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Author: Kanal Tamil Desk
Published: November 28, 2024
தனிப்பட்ட தேவைகளுக்காக ஒருவர் வாங்கும் கடன், தனிநபர் கடனாக வகைப்படுத்தப்படுகிறது. இவை பாதுகாப்பற்ற கடன்கள் என கூறப்படுகிறது . அதாவது, பிணை உத்தரவாதம் என எதுவுமின்றி, தனிநபர் ஒருவரின் சிபில் மதிப்பெண் (CIBIL Score) மட்டுமே கொண்டு கடன் வழங்கப்படுகிறது.
தனிநபர் கடன்கள் வாங்கும் பலருக்கும் தனிநபர் கடனுக்கான சாத்தியமான வரிச் சலுகைகள் குறித்து பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தனிநபர் கடன்களில் உள்ள வரிச்சலுகை பற்றிய விளக்கத்தையும் CashKaro மற்றும் EarnKaro இன் இணை நிறுவனர் ரோஹன் பார்கவா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,“ தனிப்பட்ட கடன்கள் பொதுவாக முதலீடுகள் அல்லது வருமானம் ஈட்டுதல் ஆகியவற்றுடன் இணைக்கப்படுவதில்லை. எனவே, நேரடி வரிச்சலுகைகளை இந்த கடன்கள் வழங்குவதில்லை. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், இந்திய வருமான வரிச் சட்டத்தின் கீழ் உள்ள சலுகைகளை குறிப்பிட்டு ஒருவர் வரி விலக்குகளைப் பெறலாம்” என தெரிவித்தார்.
தனிநபர் கடன்களுக்கான வரிச்சலுகை :
வீடு கட்டுவதற்கோ அல்லது வீட்டை புதுப்பிப்பதற்காகவோ ஒருவர் தனிபர் கடன் வாங்குகிறார் என்றால் அந்த தனிநபர் கடனுக்கு அதிகபட்ச வரி விலக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை பெறலாம் என LEDSAK.AI இன் நிறுவனர் சைஃப் அஹ்மத் கூறியுள்ளார்.
வருமான வரிச் சட்டம், 1961-ன் படி, சொத்தை வாங்குதல், கட்டுதல், பழுதுபார்த்தல், புனரமைத்தல் அல்லது புதுப்பித்தல் ஆகியவற்றிற்காக எடுக்கப்பட்ட கடனுக்காக வரி செலுத்துவோர் பிரிவு 24(b) இன் கீழ் விலக்கு கோரலாம் என்பது வருமானவரி விதியாகும்.
கல்விக்கான தனிநபர் கடன்:
ஒருவருடைய தனிப்பட்ட கல்விச் செலவு அல்லது பிள்ளைகளின் கல்வி செலவுக்காக தனிநபர் கடன் பெற்றால், வருமான வரி சட்டப்பிரிவு 80E-ன் கீழ் கடனுக்கான வட்டி விகிதங்களுக்கு வரி விலக்குகளை கோரலாம். வருமானவரி சட்டப்பிரிவு 80E கல்விக் கடனுக்கான வட்டிக்கான வரி விலக்கு தொடர்பானது. இச்சட்டப்பிரிவு உயர் கல்விக்காக ஒருவர் வாங்கிய கடனுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வரிவிலக்கை கல்வி கடன் வாங்கிய 8 ஆண்டுகள் அல்லது கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தும் வரை பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
வணிகங்களுக்கான தனிநபர் கடன் :
வணிக நோக்கங்களுக்காக தனிநபர் கடனைப் பெற ஒருவர் வாங்கினாலும் அதற்கும் வரிச் சலுகைகள் பெற முடியும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். முதலீடு அல்லது வணிக நோக்கத்திற்காக கடன் வாங்கப்பட்டால், அதற்கான வட்டியை வணிகச் செலவாக குறிப்பிடலாம் என்றும், அதன் மூலம் வருமானத்தை குறைத்து காண்பிக்கலாம் என்றும் ரோஹன் பார்கவா கூறியுள்ளார்.
அதிகபட்ச வரிச் சலுகைகள் வேண்டும் என்றால், தனிநபர் கடனை பெறுவதற்கு முன்பு சில முக்கிய விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். தனிநபர் கடனைப் பெறுவதன் நோக்கம் முறையாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. கடனின் நோக்கம் மற்றும் அதன் பயன்பாடு ஒத்துப்போகிறது என்றால் வரிச்சலுகை என்பது எளிதாக கிடைக்கும். ஏனெனில் கடனின் நோக்கத்தை நிரூபிப்பது எளிதாக இருக்கும் என்றும் ரோஹன் பார்கவா கூறினார்.
தனிநபர் கடனின் வரி சலுகைகள் குறித்து ஒருவருக்கு தெளிவான புரிதல் இல்லாவிட்டால், வரி நிபுணர் அல்லது நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. தனிநபர் கடன் வாங்குவதற்கு பதிலாக, வீட்டு கடன், கல்விக் கடன் போன்ற தேவைக்கேற்ற குறிப்பிட்ட கடன் வகைகளை தேர்வு செய்து அதன் வழியில் கடன் பெறுவது நன்மை பயக்கும் என்றும், இதனால் குறைந்த வட்டி விகிதங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் பொருளாதர வல்லுநர்கள் கூறுகிறார்கள்.