- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
சொந்த வீடு வாங்குவோர் கவனத்திற்கு.., மறைமுக செலவுகளை தெரிந்து கொள்ளுங்கள்…
சொந்த வீடு வாங்குகையில் பொதுவாகவே அந்த வீட்டின் மதிப்பு மட்டுமே வாங்குபவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மற்ற மறைமுக கட்டணங்கள் பெரும்பாலும் தெரிவிக்கப்படுவதில்லை என தனியார் நிறுவன ஆய்வில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: December 1, 2024
‘வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை செய்து பார்’ என்ற சொல்லாடல் தமிழகத்தில் உண்டு. அதற்கேற்றாற் போல, புதியதாக சொந்த வீடு வாங்க முற்படும் போது ஒரு கல்யாணத்திற்கு நிகரான மெனக்கெடல் தேவைப்படுகிறது. நேரடி செலவுகள் என நாம் கணக்கிட்டு செயல்படுத்த தொடங்கும் போது மறைமுக செலவுகள் ஏரளமாக வந்துவிடுகின்றன.
இந்த மறைமுக செலவுகள் குறித்து கார்டியன்ஸ் ரியல் எஸ்டேட் அட்வைசரி ( Guardians Real Estate Advisory) எனும் அமைப்பு பெருநகரங்களில் சொந்த வீடு வாங்கிய சிலரிடம் அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்து அதனை ஆய்வு கட்டுரையாக வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வில் பங்கேற்றதில் 64% பேருக்கு சொந்த வீடு வாங்கும் போது மறைமுக கட்டணங்கள் என கூடுதல் செலவீனங்கள் இருக்கும் என்றே தெரியாது என்கின்றனர்.
45% பேர் வீடு வாங்கும் முன்பு விற்பனையாளர்கள் ஒரு தொகை கூறுகின்றனர். ஆனால் பெரும்பாலானோர் மறைமுக கட்டண சிக்கல்கள் பற்றி கூறுவதில்லை என்று பதிவிட்டுள்ளனர்.
27% பேர் விற்பனை பிரதிநிதிகளை நம்பவே முடியாது என்று கூறியுள்ளனர்.
ஆய்வில் பங்கேற்ற பலர் கூறிய ஒருமித்த கருத்துக்களின் தகவல்கள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளது.
வீடு வாங்க முற்படும் போது பல்வேறு இடங்களில் ஆய்வு செய்கிறோம். பிறகு மாதிரிகளை விற்பனை பிரதிநிதிகள் காண்பிக்கிறார்கள். ஆனால், இறுதியில் வீடு அந்த மாதிரியில் காண்பித்தது போல கட்டித்தரப்படுவதில்லை என்பது பொதுவான கருத்தாக உள்ளது.
வீடு வாங்கும் போது ஒரு விலையை மொத்தமாக குறிப்பிடுகிறார்கள். ஆனால், மறைமுகமாக இருக்கும் பல்வேறு செலவுகளை பலரும் கூறுவதில்லை. குறிப்பாக பத்திரப் பதிவு கட்டணத்தை கூட பலர் மறைக்கிறார்கள் என பதிவிட்டுள்ளனர்.
சொந்த வீடு வாங்கிய பிறகு, அது அடுக்குமாடி குடியிருப்பாக இருப்பின், அதில், சில மாற்றங்களை செய்யலாம் என முனையும் போது அதற்கு அந்த குடியிருப்பு பகுதியினர் அல்லது அந்த குடியிருப்பின் பில்டர் அதற்கு அனுமதிப்பதில்லை.
இவ்வாறு பல்வேறு மறைமுக கட்டணங்கள் இருப்பதை அந்த ஆய்வு கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அவையாவன…
பார்க்கிங் கட்டணம் : இது அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இந்த கட்டணம் அவர்கள் திட்டமிட்டதை விட அதிகமாக அமைந்துவிடுகிறது.
உள் கட்டுமான செலவுகள் : வீடுகளை வாங்கிய பிறகும், எலக்ட்ரிக்கல், பிளம்பிங், சில பூச்சுமான வேலைகள் இருக்கின்றன. இது கூடுதல் செலவாக உள்ளது.
முத்திரை வரி மற்றும் பத்திரப்பதிவு : ஒருவர் வாங்கும் வீட்டின் மதிப்பை கொண்டு பத்திரப்பதிவு கட்டணம் கணக்கிடப்படுகிறது.
மாடி கட்டணம் : சில அடுக்குமாடி குடியிருப்பில் மொட்டை மாடியை உபயோகப்படுத்த கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
வருடாந்திர முன்பணம் : கட்டி முடிக்கும் முன்பே பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் முன்பணம் வசூல் செய்து விடுகின்றனர். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமான பணியை முடிக்காமல் கால நீட்டிப்பு செய்கின்றனர் என்பதும் பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது.
பராமரிப்பு கட்டணம் : அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர் இந்த கட்டணத்தை செலுத்துகிறார்கள். ஒட்டுமொத்த வெளிப்புற பராமரிப்பு செலவுகள் குடியிருப்புவாசிகளிடம் வசூல் செய்யப்படுகிறது.
செயலாக்கக் கட்டணம் : வீடு வாங்குவதற்கு கடன் பெறுகையில் மறைமுக கட்டணமாக செயலாக்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
இருப்பிட விருப்ப கட்டணம் : ஒரு அடுக்குமாடி குடியிப்பில் அல்லது அந்த பகுதியில் வீட்டின் விலை இவ்வளவு என விளம்பரப்படுத்தி இருப்பார்கள். ஆனால், வீடு வாங்கும் போது, அவர்களது விருப்ப இடத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்றும் ஆய்வில் பலர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இவையெல்லாம் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவோருக்கும், ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவோருக்குமானது என்று அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.