- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
RRB-க்கள் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த வேண்டும்! நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்!
பிராந்திய கிராம வங்கிகள் (RRB) தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொள்ள தொழில்நுட்ப முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

Author: Kanal Tamil Desk
Published: December 1, 2024
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஒடிசா, பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 8 கிராமிய வங்கி கூட்டமைப்புகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பிராந்திய கிராம வங்கிகளுக்கு (RRB) நிதியமைச்சர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். RRB-க்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொள்ள தொழில்நுட்ப முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.
RRB -க்கள் தங்கள் வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் பொருட்டு, ஸ்பான்சர் வங்கிகள் ஆதரவுடன் தங்களுக்கான இன்டர்நெட் வங்கி சேவை, மொபைல் வங்கி சேவை, UPI டிஜிட்டல் சேவைகள் ஆகிய டிஜிட்டல் சேவைகளுக்கு தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை செயல்படுத்த டிசம்பர் 2024ஐ இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் , RRBக்கள் தங்கள் வணிக செயல்திறன், புதிய கடன் சலுகைகளை மதிப்பாய்வு செய்த தங்கள் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும், விவசாயம் மற்றும் சிறுகுறு தொழில்துறைகளுக்கு கடன் உதவிகளை அதிகரித்து தங்கள் வணிகத்தை விரிவாக்க வேண்டும் என்றும் நிதியமைச்சர் இந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தினார்.
அதேபோல, பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு உதவும் பொருட்டு அதற்கான கடன் ஓட்டத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். மாநில அரசுகளுடன் NABARD வங்கியும் கைகோர்த்து சுய உதவிக்குழுக்களின் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
சுயதொழில்களை மேம்படுத்துவதற்கான ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ODOP) எனும் மத்திய அரசின் திட்டத்தை மேம்படுத்த RRBக்கள் உதவ வேண்டும் என்றும், அதற்காக மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அதனை சந்தைப்படுத்தலுக்கான உதவிகளையும் வழங்க வேண்டும் என RRB வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.
RRBக்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்த தொழில்நுட்ப சேவைகளை வளர்த்து கொள்வது முக்கியம் என வலியுறுத்தினர். ஒருங்கிணைந்த RRBக்களின் CRAR (Capital to Risk (Weighted) Assets Ratio) ஆனது 2022 நிதியாண்டில் 7.8%ஆக இருந்தது. இது 2024 நிதியாண்டில் 9.4%-ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த NPA (non Performing Assets) 2022 நிதியாண்டில் 25%இல் இருந்து 2024 நிதியாண்டில் 15%ஆக குறைந்துள்ளது.
கிழக்கு பிராந்தியத்தில் உள்ள RRBகள் 2023 நிதியாண்டில் 690 கோடி ரூபாய் நிகர இழப்பை சந்தித்துள்ளன. அதே நேரம், 2024 நிதியாண்டில் ரூ.625 கோடி ஒருங்கிணைந்த லாபத்தை ஈட்டியுள்ளன என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.