வாரம் 5 நாள் வேலை : ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை! தற்போதைய நிலை என்ன?
வாரத்தில் 5 நாள் வேலை என்ற கோரிக்கையை அமல்படுத்துவது தொடர்பாக அரசிடம் இருந்து எந்த அறிகுறியும் இல்லாததால், அனைத்து வங்கி ஊழியர் சங்கத்தினரை ஒருங்கிணைத்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். - AIBOC பொதுச்செயலாளர் ரூபம் ராய்.

Author: Kanal Tamil Desk
Published: December 17, 2024
வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள ‘வாரத்தில் 5 நாள் வேலை’என்பது இன்னும் ஊழியர்களுக்கு எட்டா கனியாகவே இருந்து வருகிறது. தற்போது, வங்கிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்பட்டு வருகின்றன. 2ஆம் மற்றும் 4ஆம் சனிக்கிழமைகள் விடுமுறை என்பது நடைமுறையில் உள்ளது.
வங்கி ஊழியர்களின், ‘வாரத்தில் 5 நாள் வேலை’ என்ற கோரிக்கை விரைவில் நிறைவேற்றம் செய்யப்படும் என மத்திய அரசு சார்பில் அவ்வப்போது தகவல்கள் கிடைத்தாலும், இன்னும் அதற்கான செயலாக்கம் பற்றிய அறிகுறிகள் தென்படவில்லை.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கண்ட கோரிக்கை தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு டிசம்பர் மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்தது.
IBA - UFBU பேச்சுவார்த்தைகள் :
இந்திய வங்கிகள் கூட்டமைப்பு (IBA) மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கம் (UFBU) பல மாதங்களாக ஐந்து நாள் வேலை வாரத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. உலக அளவில் பின்பற்றப்படும் வங்கி நடைமுறைகளுடன் இந்திய வங்கி நடைமுறை கலாச்சாரத்தை ஒப்பீடு செய்து, ஊழியர்களின் நலனை மேம்படுத்தவும், அதன் மூலம் வங்கி திறனை அதிகரிக்கவும் இந்த கோரிக்கை முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
சமீபத்திய நடவடிக்கைகள் :
கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில், இந்திய வங்கிகள் சங்கமும் (IBA), வங்கி ஊழியர்கள் சங்கமும், ஓரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 2024 மார்ச் 8 அன்று, கையெழுத்திட்ட அந்த ஒப்பந்தத்தில், ஒரு வாரத்தில் சனிக்கிழமைகளும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறையாக இருக்க வேண்டும் என்றும், மீதம் உள்ள ஐந்து நாட்கள் வேலை நாட்கள் எனும் கோரிக்கையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இன்னும் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசு சார்பில் இருந்து வந்தபாடில்லை.
சவால்கள் :
சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில், நேரடியாக வங்கி சேவைகளை அதிகம் பயன்படுத்துவோருக்கு இந்த நடைமுறை சிரமமாக இருக்கும் என்ற கூற்றுகளும்,
இதனால் வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரம் அதிகரிக்கும், வேலைப்பளு அதிகரிக்கும் என்ற கூற்றுகளும் இதனை நடைமுறைப்படுத்துவதில் சவால்களாக உள்ளன எனக்கூறப்படுகிறது.
இந்த சவால்களை எதிர்கொள்ள வார வேலை நாட்களின் வங்கி செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்படும் என கூறப்படுகிறது.
அரசின் ஒப்புதல் :
மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி (RBI) ‘வாரத்தில் 5 நாள் வேலை’ என்ற மாற்றத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும், இந்திய வங்கி சேவையை பராமரிக்க இது பெரும் முயற்சி என்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் கூறுகின்றன.
ஊழியர்களின் பணிநேர மாற்றம் மற்றும் வங்கி ஊழியர்கள் பாதுகாப்பு தொடர்புடைய விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற வேண்டும் என்றும் வங்கி ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
AIBOC பொதுச்செயலாளர் ரூபம் ராய் நியூஸ் 18 எனும் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "தற்போது வரை வாரத்தில் 5 நாள் வேலை என்ற கோரிக்கையை அமல்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்திடம் இருந்து எந்த அறிகுறியும் இல்லை. இதனால் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தையும் ஒருங்கிணைத்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்." என தெரிவித்துள்ளார்.
No comments yet.