2025-ல் எந்த துறையில் முதலீடு செய்வது பயனளிக்கும்? தனியார் நிறுவன ஆய்வு தகவல்கள்…
AI தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மேம்பாட்டு திட்டங்களுக்கான BFSI-களின் தேவை ஆகியவை ஐடி துறையின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும், மற்ற துறைகளின் வளர்ச்சி குறித்தும் StoxBox நிறுவனம் ஆய்வு செய்து தகவல் வெளியிட்டுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: December 18, 2024
அடுத்த ஆண்டில் (2025) இந்திய IT நிறுவனங்கள், குறிப்பாக AI டிஜிட்டல் தொழில்நுட்ப துறைகள் மற்றும் BFSI எனும் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு துறையின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என StoxBox நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்து இருக்கிறது.
மேலும், கடந்த திங்கள் கிழமை இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. குறிப்பாக Sensex மற்றும் Nifty 50 குறியீடுகள் 1% மேல் சரிந்தன. இதற்கு மிகவும் முக்கியமான காரணமே வங்கிகள், தகவல் தொழில்நுட்பம் (IT), உலோகங்கள், கார்கள் மற்றும் FMCG துறைகளில் விற்பனைக்கான அழுத்தம் அதிகமாக இருந்தது தான் எனவும் கூறப்படுகிறது.
இவ்வளவு குறுகிய கால வீழ்ச்சிக்கு மத்தியிலும், 2024 என்பது இந்திய பங்குச் சந்தைக்கு 12%க்கு மேலான வளர்ச்சியை கொடுத்த ஒரு வருடமாக அமைந்துள்ளது. இச்சூழலில், 2025-க்கான வளர்ச்சி வாய்ப்புகள் பல துறைகளில் குவிந்து காணப்படுகின்றன எனவும் மேற்கண்ட துறைகளில் முதலீடு செய்யலாம் எனவும் StoxBox நிறுவனம் ஆய்வில் தெரிவித்துள்ளது.
StoxBox கணிப்பு :
அடுத்த ஆண்டு எந்தெந்த துறைகள் அதிகமான வளர்ச்சியை கண்டிருக்கும் எந்த துறைகளில் முதலீடு செய்தால் அதிகம் பயனடையலாம் என்பது பற்றி StoxBox நிறுவனம் கொடுத்த தகவலை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
வங்கித்துறை :
வங்கித்துறை 2025-ல் தனது கவனத்தை சுய மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எனவே, அடுத்தகட்டமாக கடன் வளர்ச்சியை அதிகரிக்க வங்கி துறை முனையும். இதன் காரணமாக, வங்கிகள் கடன் மறுசீரமைப்பு குறித்த பல திட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளதால் வட்டி விகிதக் குறைப்பு இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதன் காரணமாக வங்கித்துறை அடுத்த ஆண்டு இந்த ஆண்டு இருப்பதை விட அதிக வளர்ச்சியை பெறலாம் என StoxBox தெரிவித்துள்ளது.
வேதியியல் துறை :
2024-இல் ஏற்பட்ட உற்பத்தி தடங்கல் மற்றும்தேவை அதிகரிப்பு, விலை அழுத்தத்திலிருந்து விடுபட்டு, வேதியியல் துறை 2025-ல் மீட்சி பெறும் என்றும், ஆராய்ச்சி, புதுமையான வேதியியல் வழிமுறைகள் மற்றும் இந்திய நிறுவனங்களின் செலவு கட்டுப்பட்டு திறன்களால் இந்திய நிறுவனங்கள் உலக சந்தையில் போட்டியிடும் வலிமையை அடையும். எனவே, இந்த துறை 2025இல் வளர்ச்சி பெரும் என StoxBox நிறுவனம் கணித்துள்ளது.
சிமெண்ட் துறை :
அரசின் மெகா உள்கட்டமைப்பு திட்டங்கள், ஊரக சீரமைப்பு மற்றும் தனியார் ரியல் எஸ்டேட் வளர்ச்சி ஆகியன சிமெண்ட் துறையின் வளர்ச்சிக்கு துணைபுரியும். வருடாந்திர உற்பத்தி 550-600 மில்லியன் டன் அளவுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அடுத்த ஆண்டு சிமெண்ட் தேவை அதிகரிப்பதால் அதில் முதலீடு செய்யலாம் என StoxBox நிறுவனம் கூறுயுள்ளது.
FMCG (நுகர்வோர் பொருட்கள்) :
கிராமப்புறங்களின் அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரிப்பு, நல்ல பருவமழை, விவசாய வருமானம் மற்றும் துரித வணிக தளங்களின் வளர்ச்சி ஆகியவை FMCG துறைக்கு 2025ல் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என StoxBox தெரிவித்துள்ளது.
IT துறை :
IT துறை, 2025-ல் AI டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் BFSI துறையில் தொழில்நுட்ப மேம்படுத்துதல் ஆகியவை அசுர வளர்ச்சியில் வளர்ந்து வருகிறது. குறைந்து வரும் பணிநீக்கம் மற்றும் பொதுவான திறன் மேம்பாடு போன்றவை ஐடி துறையில் நன்மைகளை அதிகரிக்க உதவுகின்றன. எனவே, இதனுடைய வளர்ச்சியும் அடுத்த ஆண்டு அதிகமாக இருக்கும் என StoxBox நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருந்து துறை :
மருந்து துறையில் US ஜெனரிக் மருந்து சந்தை, நிலையான விலை மாற்றங்கள், தொடர் சிகிச்சை தேவைகள் ஆகியன மருந்து துறை வளர்ச்சிக்கு துணைபுரியும் என்றும், உற்பத்தியை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மருந்து நிறுவனங்கள் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வருவதாலும் இத்துறையில் முன்னேற்றம் இருக்கும் என StoxBox ஆய்வு தெரிவித்துள்ளது.
முக்கிய குறிப்பு :
2025-இல் முன்னேறும் என கணிக்கப்பட்ட துறைகளில், குறிப்பிட்ட நிறுவனங்களின் புது யுக்திகள், தீவிரமான செயல்பாடுகள் மற்றும் அந்நிறுவனங்களின் நீண்ட கால திட்டமிடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, மேற்கண்ட துறைகள் சார்ந்த நிறுவனங்களில் ஒருவர் முதலீடு செய்ய நினைத்தால் அதற்கு முன்னதாக பங்குச்சந்தை நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது மிக அவசியம் என்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
No comments yet.