- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ஆந்திரா - தெலுங்கானா : புத்தாண்டு முதல் ஒன்றிணைக்கப்பட்ட 2 கிராம வங்கிகள்!
தெலுங்கானாவில் உள்ள ஆந்திர பிரதேச கிராம விகாஸ் வங்கியானது, 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் தெலுங்கானா கிராம வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: January 2, 2025
தெலுங்கானாவில் 493 கிளைகள் கொண்ட ஆந்திர பிரதேச கிராம விகாஸ் வங்கியானது (Andhra Pradesh Grameena Vikas Bank - APGVB) தெலுங்கானா கிராம வங்கி (Telangana Grameena Bank - TGB) ஆகிய இரண்டு வங்கிகளும் இந்த ஆண்டு (2025) இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இது இந்தாண்டு ஜனவரி 1 முதல் செயல்பாட்டுக்கு வரும் எனவும் கூறப்பட்டது.
தெலுங்கானா கிராம வங்கி (TGB) தலைவர் ஒய். ஷோபா ஆந்திரா பிரதேச கிராம விகாஸ் வங்கி (APGVB)-க்கு சொந்தமான தெலுங்கானா மாநிலத்தின் 493 கிளைகளும் 2025, ஜனவரி 1 முதல் தெலுங்கானா கிராம வங்கிகளுடன் இணைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதன் மூலம், ஆந்திராவில் இயங்கும் 278 ஆந்திர பிரதேச கிராம விகாஸ் வங்கி கிளைகளும், ஆந்திர பிரதேச கிராம விகாஸ் வங்கி (APGVB) என்ற பெயரிலேயே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா கிராம வங்கி 435 கிளைகளை கொண்டுள்ளது. இணைப்புக்கு பிறகு TGB-ன் மொத்த கிளை எண்ணிக்கை 928ஆக உயரும்.
இந்த வங்கி இணைப்பு நடவடிக்கையானது மத்திய நிதியமைச்சகத்தின் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இப்படி இரண்டு வங்கிகளை இணைப்பதன் மூலம் கிராமப்புற வங்கிகளின் செயல்திறனை மேம்படுத்தவும், அதன் செலவுகளை குறைக்கவும் முடியும் என கூறப்படுகிறது.
இது குறித்து கனல் செய்தி நிறுவனத்திற்கு தெலுங்கானா கிராம வங்கி அதிகாரி ஒருவர் ஒருவர் அளித்த பேட்டியில் “என்னுடைய பார்வையில், இது ஒரு முழுமையான ஒருங்கிணைப்பாகவே தெரிகிறது. இரு வங்கிகள் இணைப்பதால் வங்கியின் பெயர் மாற்றமடையவில்லை, மேலும் இயக்குநர் வாரியத்தின் (Board of Directors) அமைப்பிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பொதுவாக, ஒரு கட்டமைப்பு ஒருங்கிணைக்கப்படும் போது புதிய பெயர் மற்றும் வாரியத்தை உருவாக்கும். ஆனால், இந்த ஒருங்கிணைப்பில் தற்போதைய அமைப்பே நீடிக்கிறது.
தெலுங்கானாவில் உள்ள APGVB-இன் அனைத்து கிளைகளிலும் உள்ள ஊழியர்களும் இனிமேல் TGB-யின் ஊழியர்களாக செயல்படுவார்கள். TGB-வின் பெயர் மற்றும் அடையாளம், ஸ்டேஷனரி, இணையதளம், MIS மற்றும் பாதுகாப்பு ஆவணங்களில் பயன்படுத்தப்படும். தற்போதைய TGB தலைவர் தனது பதவியில் தொடர்வார்” எனவும் அவர் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு
டெபிட் கார்டு மாற்றம் :
- மேற்கண்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் புதிய டெபிட் கார்டுகளைப் பெற, வாடிக்கையாளர்கள், ஜனவரி 1, 2025க்கு பிறகு தங்கள் வங்கி கிளைகளுக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
மொபைல் வங்கி பயன்பாடு :
- ஆந்திர கிராம வங்கி மொபைல் சேவை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தெலுங்கானா கிராம வங்கி மொபைல் சேவையான “TGB Mobile Banking” ஆப்பைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
காசோலைகள் மற்றும் டிடி (DD):
- கடந்த ஆண்டு 2024 டிசம்பர் 31 வரை வழங்கப்பட்ட APGVB காசோலைகள் மற்றும் டிடிக்கள் 2025 மார்ச் 31 வரை செல்லும்.
- வாடிக்கையாளர்கள் ஜனவரி 1, 2025 முதல் புதிய தனிப்பட்ட காசோலை புத்தகங்களைப் பெற வேண்டும்.
உதவிக்கான தொடர்புகள் :
- வாடிக்கையாளர்கள் www.tgbhyd.in இணையதளத்தில் சென்று அல்லது அருகிலுள்ள கிளையினை தொடர்பு கொண்டு இந்த இணைப்பு நடவடிக்கை பற்றிய மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
வாடிக்கையாளர்களுக்கான அறிவுரைகள் :
1.தலைமையக மாற்றங்கள்:
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முன்னாள் APGVB கிளை வாடிக்கையாளர்கள், தங்களின் ATM கார்டுகளை மாற்றிக்கொள்ளவும், மொபைல் வங்கி, இணைய வங்கி மற்றும் யூபிஐ சேவைகளுக்கு மீண்டும் பதிவு செய்ய தங்கள் கிளைகளை நேரடியாக அணுக வேண்டும்.
2.வழங்கப்படும் சேவைகள்:
புதிய வங்கி அமைப்பின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவைகள் வழங்கப்படும்.
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய வங்கி சேவைகளை இடைநிறுத்த காலத்திற்கு முன்பே திட்டமிட வேண்டும் என வங்கி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.