- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
வங்கி பணிகளில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்.., குரல் கொடுத்த AIBEA!
வங்கிகளில் பெண்களுக்கு மோசமான பணிச்சூழல்கள் நிலவி வருவதாக குறிப்பிட்டு AIBEA கவலை தெரிவித்துள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: February 17, 2025
நாட்டின் பொருளாதரத்தின் முக்கிய பங்காற்றுவதில் வங்கிகள் முதன்மை இடத்தில் உள்ளன. இப்படி இருந்தும் கூட வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணிரீதியில் அழுத்தம், டார்கெட் என பல சவால்களை சந்திப்பதை பார்த்திருப்போம். அதனை விட அதிகமாக வங்கிகளில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் பணியில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்கிறார்கள் என AIBEA குரல் எழுப்பியுள்ளது.
அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) சமீபத்தில் வங்கிகளில் பெண்கள் எதிர்கொள்ளும் மோசமான பணிநிலைகள் குறித்து தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. பெண்கள் வேலை செய்யும் இடத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமை, பணிச்சுமை அதிகம் இருப்பது, பாகுபாடு போன்ற பிரச்சனைகள் அதிகமாக உள்ளன என குறிப்பிட்டுள்ளது. இது குறித்து விரிவாக காணலாம்.
பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள்
கழிப்பறை வசதி :
சில வங்கிக் கிளைகளில் பெண்களுக்காக தனிப்பட்ட கழிப்பறை வசதி இல்லாமை இருப்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. அதிலும், குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கிராமப்புற வங்கி கிளைகளில் இந்த பிரச்சனை மிக மோசமாக உள்ளது. பெண்கள் நீண்ட நேரம் கழிப்பறை வசதியின்றி பணியாற்ற வேண்டிய நிலை உருவாகிறது. இது அவர்களின் உடல்நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பணிச்சுமை :
சமீப காலமாக வங்கிகள் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துவதால் பணியாளர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு அதிக பணிச்சுமையுடன், குறிப்பிட்ட பணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய வேண்டிய நிலையும் உருவாகிறது. பல இடங்களில் பாதுகாப்பு வசதிகள் இல்லாத நிலையில், பெண்கள் இரவு நேர பணிகளில் ஈடுபடும் ஒரு சிக்கலான நிலையும் உள்ளது. இதனாலும் அவர்கள் பணி அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள்.
பதவி உயர்வு பிரச்சினைகள் :
வங்கியில் வேலை செய்யும் பல பெண்கள் தகுதியும் திறமையும் உள்ளவர்களாக இருந்தாலும், பதவி உயர்வுக்கு தகுந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. பெண்கள் மேலதிகார பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதில் வேறுபாடு காட்டப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. குடும்பப் பொறுப்புகள் காரணமாக அலுவலக நிர்வாகம் அவர்களை பின்தள்ளும் சூழல் உருவாகிறது.
பாலியல் தொல்லைகள் :
வங்கிகளில் பெண்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. சில இடங்களில் பாலியல் தொல்லைகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, பிரபல செய்தி நிறுவனமான Business Standard வெளியீட்டு இருந்த தகவலின் படி, ICICI வங்கி – FY24-ல் 133 புகார்கள், FY23-ல் 43 புகார்கள்.
HDFC வங்கி – FY24-ல் 77 புகார்கள், FY23-ல் 68 புகார்கள். Axis வங்கி – FY24-ல் 36 புகார்கள், FY23-ல் 34 புகார்கள் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே, இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கிறது.
குரல் கொடுத்த AIBEA :
மேற்கண்ட இந்த பிரச்சினைகளை முன் வைத்துள்ள அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) இதற்கு தீர்வு கிடைத்து ஆகவேண்டும் என குரல் கொடுத்துள்ளது. அது மட்டுமின்றி இதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வங்கி நிர்வாகத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
- பெண்களுக்கான கழிப்பறை வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.
- பெண்களுக்கு பாதுகாப்பான பணிசூழலை ஏற்படுத்தி தர வேண்டும்.
- அதிக வேலைச்சுமையை குறைத்து, குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் பணியை முடிக்க வழிவகுக்க வேண்டும்.
- பதவி உயர்வுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும்.
- பாதுகாப்பு முறைகளை அதிகரிக்க வேண்டும்.
மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, AIBEA நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. வங்கி பணியாளர்களின் நலனை உறுதி செய்ய, குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பான வேலைநிலை ஏற்படுத்த, AIBEA தங்களின் போராட்டங்களை தொடர உள்ளனர்.
போராட்டங்களின் விவரம்
போராட்ட விவரங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், நம்பதக்க செய்தி நிறுவனங்களில் இருந்து கிடைத்த தகவலின் படி, இந்த கோரிக்கைளையும் முன்னிறுத்தி AIBEA மற்றும் United Forum of Bank Unions (UFBU) சார்பில் மார்ச் 24, 25, 2025 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் வலியுறுத்தப்படும் என கூறப்படுகிறது.