- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
IOB வங்கியில் சாதிய பாகுபாடு! தலித் ஊழியருக்கு நேர்ந்த கொடுமை!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் எர்ணாகுளம் மண்டல அலுவலத்தில் உயர் அதிகாரிகள், தலித் ஊழியர் ஒருவரை சாதிய ரீதியில் பாகுபாடு காட்டி தனிப்பட்ட சில வேலைகளை செய்ய சொல்லி கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: February 19, 2025
கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலத்தில் உள்ள உதவி பொது மேலாளர் (AGM) காஷ்மீர் சிங் மற்றும் தலைமை பிராந்திய மேலாளர் (DGM) நிதிஷ் குமார் சின்ஹா ஆகியோருக்கு எதிராக வங்கி ஊழியர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், பணியிடத்தில் தான் சாதிய ரீதியில் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாகவும், பல்வேறு சாதிய பாகுபாடுகளை எதிர்கொண்டதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
என்ன நடந்தது?
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் எர்ணாகுளம் பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில் கடந்த 6 மாத காலமாக இச்சம்பவம் நடைபெற்றுளளது என தெரிகிறது. அங்கு வேலை செய்யும் வங்கி ஊழியரை (தலித்), துணைப் பொது மேலாளர் காஷ்மீர் சிங் மற்றும் பிராந்திய பொது மேலாளர் நிதின் குமார் சின்ஹா ஆகியோருக்கு சில தனிப்பட்ட வேலைகளை செய்யும்படி வற்புறுத்தியுள்ளனர்.
அந்த ஊழியரை மற்றவர்களுக்கு தேநீர் வாங்கி தர கூறுவது, மருந்து பொருட்களை வாங்க சொல்வது முதல் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற சொல்வது வரையில் பல வேலைகளை செய்யச்சொல்லி மேலதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர். இதற்கு அந்த ஊழியர் மறுப்பு தெரிவித்தால் சாதிய ரீதியில் பாகுபாடு காட்டி அவரை திட்டவும் சில சமயம் உடல்ரீதியாக தாக்குதல் நடத்திய சம்பவங்களும் அரங்கேறியதாக கூறப்படுகிறது. மேற்கண்ட அதிகாரிகள் கூறும் வேலைகளை செய்ய மறுத்த காரணத்தால் அந்த ஊழியர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ‘இந்த வேலையே நீ செய்யவில்லை என்றால் உன்னுடைய இடத்தை மாற்றிவிடுவோம்’ என எச்சரித்துள்ளனர் எனத் தெரிகிறது. இவ்வாறு பல்வேறு அச்சுறுத்தல்களால், தான் கொடுத்த புகாரையே அந்த ஊழியர் வாபஸ் பெற்றுள்ளார். ஆனால், அந்த ஊழியர் வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்ய உத்தரவு பெற்ற பிறகு, மீண்டும் காவல்துறைக்கு புகார் அளித்திருக்கிறார்.
காவல்துறை நடவடிக்கை:
இந்த சம்பவம் தொடர்பாக முலாவுகாடு காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால், முதலில் காவல்துறையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதன்பிறகு இந்த விவகாரம் பெரிய அளவில் எதிர்ப்புகள் எழுந்த பிறகு, சாதி அடிப்படையிலான பாகுபாடு கட்டப்பட்டதாக புகார் பதிவு செய்யப்பட்டது.
காவல்துறை பதில்:
காவல்துறை தரப்பில் கொடுக்கப்பட்ட தகவலின் படி, சம்பவத்தில் ஈடுபட்ட காஷ்மீர் சிங்கும் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு எதிராக சாதி அடிப்படையில் துஷ்பிரயோக நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிக்கப்பட்டுள்ளது. இந்த புகார்களை அடுத்து பிராந்திய தலைமை மேலாளர் நிதிஷ் குமார் சின்ஹா உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
BEFI தர்ணா போரட்டம் :
IOB வங்கி ஊழியருக்கு நேர்ந்த சாதிய ரீதியிலான கொடுமைகள் குறித்து அறிந்த இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (BEFI) களத்தில் இறங்கி எதிர்ப்பு குரலை பலமாக பதிவு செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 17ஆம் தேதியன்று 500க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் எர்ணாகுளம் IOB மண்டல அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
IOB வங்கி நிர்வாகம் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்கும் நோக்கில் நடந்து கொள்வதாக BEFI தலைவர் அனில்குமார் குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீர் சிங் எனும் அதிகாரியை பாதுகாக்கும் விதமாக அவரை வங்கி நிர்வாகம் சென்னைக்கு இடம் மாற்றம் செய்துள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட பிறகும் கூட, இந்தப் பிரச்சனை சம்பந்தமாக அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் சங்கமோ, எஸ்சி எஸ்டி நலச் சங்கமோ எந்தப் புகாரும் அளிக்காததால், இந்த செய்தி நம்பத் தகாதது என கூறி, ஊடகங்கள் இதனை செய்தியாக்க வேண்டாம் என்று IOB நிர்வாகம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அரசு நடவடிக்கை :
கேரள முதல்வர் பினராயி விஜயன், இச்சம்பவம் குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிடக் கோரி கடிதம் எழுதி உள்ளார்.