- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
SIP என்றால் என்ன? எப்படி முதலீடு செய்வது? சிறந்த திட்டங்கள் இதோ…
SIP எனும் Systematic Investment Plan முதலீடு திட்டம் பற்றியும், அதில் எவ்வாறு முதலீடு செய்வது, பொருளாதார ஆலோசகர்கள் ஆய்வின் படி எந்தெந்த முதலீடு திட்டங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பது பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணாலாம்.

Author: M Manikandan
Published: April 24, 2025
சேமிப்பு என்பது நமது நிதி நிலையை மேம்படுத்தி எதிர்கால நிதி இலக்குகளை அடைவதற்கு அத்தியாவசியமான ஒரு சேமிப்பு பழக்கமாகும். அந்த சேமிப்பு(முதலீட்டில்) மிக பிரபலமாகி உள்ள SIP எனும் Systematic Investment Plan (SIP) மூலம் தொடர்ந்து சிறு தொகையை முதலீடு செய்வது என்பது பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களை சமாளிக்க பெரிதும் உதவுகிறது. இது சராசரி பங்குச்சந்தை முதலீட்டு ரிஸ்க்கை குறைத்து, பொருளாதார ரீதியாக பாதுகாப்பை உறுதி செய்கிறது. இதனால் SIP இன்றைய முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல சேமிப்பு (முதலீடு) திட்டமாக மாறியுள்ளது.
SIP என்றால் என்ன?
SIP என்றால் முறையான முதலீட்டுத் திட்டம் (Systematic Investment Plan). இது ஒரு எளிய மற்றும் பயனுள்ள முதலீட்டு முறை என்று கூட சொல்லலாம். ஏன் அப்படி சொல்கிறோம் என்றால் இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு நிலையான தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறீர்கள். குறைந்தபட்சம், மாதம் ரூ.100-ஐ கூட முதலீடு செய்யலாம்.

இது உங்களை ஒழுக்கமாக பணத்தை சேமிக்கவும், நீண்ட காலத்தில் செல்வத்தை வளர்க்கவும் உதவுகிறது. பெரிய தொகையை ஒரே முறை முதலீடு செய்ய முடியாதவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். SIP-ன் முக்கிய நன்மை என்னவென்றால், சந்தையின் ஏற்ற இறக்கங்களை சமாளிக்க உதவுகிறது. சந்தை குறையும்போது அதே பணத்திற்கு அதிக யூனிட்கள் கிடைக்கும், சந்தை உயரும்போது குறைவான யூனிட்கள் கிடைக்கும். இதனால் உங்கள் முதலீட்டின் சராசரி செலவு குறைகிறது. மேலும், நீண்ட காலத்தில் கூட்டு வட்டி மூலம் உங்கள் பணம் பல மடங்கு வளரும். எளிமையாகச் சொன்னால், SIP என்பது சிறு சேமிப்பை பெரிய செல்வமாக மாற்றும் ஒரு ஸ்மார்ட் வழி என பொருளாதர வல்லுனர்களால் கூறப்படுகிறது.
எவ்வாறு இயங்குகிறது?
SIP (முறையான முதலீட்டுத் திட்டம்) என்பது ஒரு எளிய, ரோபோர்ட் முதலீட்டு முறை. நீங்கள் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, மாதம் அல்லது வேறு கால இடைவெளியில் எவ்வளவு பணம் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்கிறீர்கள். உதாரணமாக, மாதம் ரூ.5000 முதலீடு செய்யலாம். இந்தத் தொகை உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து தானாக எடுக்கப்பட்டு, தேர்ந்தெடுத்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்படும்.
இதனால், உங்களுக்கு ஒவ்வொரு முறையும் நேரடியாக பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு முதலீட்டின் போதும், அந்த நாளின் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டின் மதிப்பு (NAV) அடிப்படையில் உங்களுக்கு யூனிட்கள் கிடைக்கும். எளிமையாகச் சொன்னால், NAV என்பது ஒரு யூனிட்டின் விலை. உதாரணமாக, நீங்கள் ரூ.5000 முதலீடு செய்கிறீர்கள், NAV ரூ.50ஆக இருந்தால், உங்களுக்கு 100 யூனிட்கள் (5000 ÷ 50) கிடைக்கும். அடுத்த மாதம் NAV ரூ.40 ஆகக் குறைந்தால், அதே ரூ.5000-க்கு 125 யூனிட்கள் (5000 ÷ 40) கிடைக்கும்.
இப்படி சந்தை ஏற்ற இறக்கங்களைப் பயன்படுத்தி, நீங்கள் சராசரியாக அதிக யூனிட்களைப் பெறலாம். இதற்கு ரூபாய் செலவு சராசரி என்று பெயர். SIP தொடங்க, முதலில் KYC ஆவணங்களை சமர்ப்பித்து, வங்கியில் தானியங்கி பணப்பரிமாற்றத்தை அமைத்தால் போதும். பிறகு, உங்கள் வங்கி கணக்கில் இருந்து தானாக பணம் எடுத்துக்கொள்ளப்படும்.

எவ்வாறு முதலீடு செய்வது?
பொதுவான வழிமுறைகள் :
- முதலீடு செய்யும் முன் அதற்கான தளங்களை தேர்வு செய்ய வேண்டும். Groww, AngelOne போன்ற புரோக்கர் ஆப்களில் முதலில் KYC செய்ய வேண்டும்.
- இதற்கு பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் உள்ளீட வேண்டும், ஏனெனில் இவை உங்கள் அடையாளத்தை சரிபார்க்க பயன்படுத்தப்படுகின்றன.
- ஆதார் இணைப்பு மூலம் e-KYC செய்யலாம், இதற்கு OTP (ஒரு தடவை கடவுச்சொல்) உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும்.
- பான் சரிபார்ப்பு மூலம் உங்கள் வரி பற்றிய தகவல் மற்றும் முதலீட்டு வரலாறு இணைக்கப்படும்.
- புகைப்படம் மற்றும் முகவரி சான்று சில தளங்களில் கேட்கப்படலாம்.
- நீங்கள் உள்ளீடு செய்த தகவல்கள் சம்பந்தப்பட்ட தளங்களில் சரிபார்க்கப்பட்டு, 24 முதல் 72 மணி நேரத்தில் KYC அங்கீகரிக்கப்படும்.
- KYC நிறைவடைந்ததும் SIP தொடங்கலாம்.
- இந்திய பங்கு சந்தை விதிமுறைகளின்படி, ரூ.10,000க்கு மேல் முதலீடு செய்ய KYC அவசியம்.உங்கள் ஆதார் மற்றும் பான் விவரங்களை பாதுகாப்பாக பகிரவும். பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆப்களை மட்டுமே பயன்படுத்தவும்.
SIP முதலீடு…, (உதாரணமாக Groww ஆப்)
- Groww ஆப்பை திறந்து, முகப்பு பக்கத்தில் 'Mutual Funds' பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
- மேலே உள்ள 'Explore' பொத்தானை கிளிக் செய்து, நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் மியூச்சுவல் ஃபண்டைத் தேடவும் அல்லது தேர்வு செய்யவும்.
- 'Start SIP' என்பதை கிளிக் செய்து, மாதாந்திர முதலீட்டு தொகையை உள்ளிடவும் (குறைந்தபட்சம் ரூ.100 முதல் கூட தொடங்கலாம் அது நீங்கள் தேர்வு செய்யும் பங்கை பொறுத்து).
- SIP தேதியை (மாதம் ஒரு முறை தொகை பிடிக்கப்படும் நாள்) தேர்வு செய்து, UPI அல்லது நெட்பேங்கிங் மூலம் பணம் செலுத்தவும்.
- எதிர்கால தவணைகளுக்கு AutoPay அமைப்பை OTP மூலம் செயல்படுத்தவும். SIP மாதந்தோறும் தானாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு முதலீடு செய்யப்படும்.
- முதல் மற்றும் இரண்டாவது தவணைக்கு இடையே குறைந்தபட்சம் 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

சிறந்த SIP திட்டங்கள் (2025) :
சிறந்த முதலீடு திட்டங்கள் என இங்கே கொடுக்கப்பட்டிருப்பது சில தனியார் நிதி ஆய்வு நிறுவனங்கள் அளித்த தகவல்கள் அடிப்படையில் மட்டுமே. இதனை தேர்வு செய்வது உங்கள் தனிப்பட்ட விருப்பம். நீங்கள் சுயமாக நிதி ஆய்வு செய்து உங்களுக்கு ஏற்ற ரிஸ்க் குறைவு, லாபம் அதிகம் உள்ளிட்டவை கொண்டு முதலீட்டு தேர்வை தேர்வு செய்வதே சிறந்தது.
ICICI Prudential Bluechip Fund
இது ஒரு லார்ஜ்-கேப் ஃபண்ட் ஆகும், பெரிய மற்றும் நிலையான நிறுவனங்களில் முதலீடு செய்கிறது (எ.கா., HDFC Bank, ICICI Bank). நீண்டகால வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. 2025 ஜனவரி 10 வரை 3 ஆண்டு சராசரி வருமானம் (annualised returns) அடிப்படையில் இது சிறப்பாக செயல்பட்டுள்ளதாக ICICI Bank மற்றும் Groww போன்றவை குறிப்பிடுகின்றன. இதன் மீதான ரிஸ்க் மிதமானது என கூறப்படுகிறது.
Quant Small Cap Fund
இது ஒரு ஸ்மால்-கேப் ஃபண்ட் ஆகும், சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்கிறது, இது அதிக வளர்ச்சி திறனைக் கொண்டுள்ளது. Policybazaar மற்றும் ET Money ஆய்வுகளின்படி, கடந்த 5 ஆண்டு சராசரி வருமானத்தில் இது முன்னணியில் உள்ளது (+32.64% வரை). குறைந்தபட்ச முதலீட்டிற்கு (ரூ.1000) ஏற்றது. வருமானம் எவ்வளவு அதிகமோ அதே அளவு ரிஸ்க் அதிகம்.
Parag Parikh Flexi Cap Fund
இது ஒரு ஃப்ளெக்ஸி-கேப் ஃபண்ட் ஆகும். பல்வேறு அளவிலான நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. தனியார் நிதி ஆய்வாளரின் தரவுப்படி இது 10 ஆண்டுகளில் 5 மடங்கு வளர்ச்சியை அடைந்து. SIP மூலம் 20% ஆண்டு வருமானம் அளித்துள்ளது. இதன் மீதான ரிஸ்க் மிதமானது.
Tata Small Cap Fund
டாடா மியூச்சுவல் ஃபண்டின் இந்த ஸ்மால்-கேப் ஃபண்ட், 5 ஆண்டுகளில் 3 முதல் 4 மடங்கு வளர்ச்சியை அடைந்துள்ளதாக தனியார் நிதி ஆய்வு நிறுவனம் குறிப்பிடுகிறது.ரிஸ்க் சற்று அதிகம்.
ICICI Prudential Infrastructure Fund
இது ஒரு டிமேட்டிக் ஃபண்ட் ஆகும், கட்டுமானம், எரிசக்தி மற்றும் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு துறைகளில் முதலீடு செய்கிறது.
தனியார் நிதி ஆய்வாளர் கூற்றுப்படி கடந்த 5 ஆண்டுகளில் SIP முதலீடுகளில் இது அதிக வருமானம் அளித்த டாப் 5 ஈக்விட்டி ஃபண்டுகளில் ஒன்று.
குறைந்தபட்ச முதலீடு ரூ.500 ஆகும். இதில் ரிஸ்க் சற்று அதிகம் ஆகும்.
Kotak Debt Hybrid Fund Direct-Growth Plan
இது ஒரு ஹைப்ரிட் ஃபண்ட் ஆகும். டெப்ட் மற்றும் ஈக்விட்டி சொத்துகளில் முதலீடு செய்கிறது. Policybazaar கூற்றுப்படி இது நிலையான வருமானத்தையும் மூலதன வளர்ச்சியையும் வழங்குகிறது. இதன் மீதான ரிஸ்க் சற்று மிதமானது.
பாதுகாப்பாக முதலீடு செய்ய எளிய வழிமுறைகள்:
- இலக்கு முக்கியம்: எதற்காக முதலீடு செய்கிறீர்கள் (எ.கா., வீடு, ஓய்வு)? எவ்வளவு காலம் முதலீடு செய்ய முடியும்? இதை முதலில் முடிவு செய்யுங்கள்.
- ரிஸ்க் இருக்கு : அதிக ரிஸ்க் எடுக்க முடியுமா (ஷேர் மார்க்கெட் ஃபண்ட்) அல்லது குறைவான ரிஸ்க் வேண்டுமா (டெப்ட் ஃபண்ட்)? என உங்களுக்கு பொருத்தமான ஃபண்டைத் தேர்ந்தெடுக்வேண்டும்.
- நல்ல ஃபண்டை தேர்வு செய்க : முன்பு நன்றாக செயல்பட்ட ஃபண்ட், குறைவான செலவு விகிதம் (expense ratio), நம்பகமான ஃபண்ட் மேலாளர் உள்ள ஃபண்டை ஆராய்ந்து தேர்வு செய்யுங்கள்.
- நீண்ட காலம் முதலீடு : SIP-ல் 5-10 ஆண்டுகள் முதலீடு செய்தால், கூட்டு வட்டி மூலம் அதிக லாபம் கிடைக்கும். அது வரை பொறுமையாக இருக்கலாம்.
- அவ்வப்போது கண்காணிப்பு : உங்களுடைய SIP எப்படி செயல்படுகிறது என்பதை ஆண்டுக்கு ஒருமுறை பார்த்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் ஃபண்டைகூட நீங்கள் மாற்றி கொள்ளலாம். ஆனால் அடிக்கடி மாற்ற கூடாது.
- கால்குலேட்டர் : SIP கால்குலேட்டர் உபயோகித்து, மாதம் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு திரும்ப கிடைக்கும் என திட்டமிட்டுவிட்டு அடுத்ததாக முதலீடு செய்ய முடிவு எடுங்கள்.
- எடுத்துக்காட்டு: மாதம் ரூ.5000 முதலீடு செய்து, 8% வருடாந்திர லாபம் கிடைத்தால், 10 ஆண்டுகளில் உங்களுடடைய முதலீடு சுமார் ரூ.8.8 லட்சமாக வளரலாம்
No comments yet.