- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
வங்கி ஊழியர்களின் 2 நாள் ஸ்ட்ரைக் ஏன் நடைபெறவில்லை? சுருக்கமான விவரம் இதோ…
மத்திய நிதியமைச்கம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்துடனான பேச்சுவார்த்தையில் ஆதரவான முடிவுகள் எட்டப்பட்டதை அடுத்து மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலைநிறுத்த போராட்டமானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Author: M Manikandan
Published: March 24, 2025
இந்தியாவின் வங்கித் துறையில் மிகப்பெரிய தொழிற்சங்கக் கூட்டமைப்பான UFBU சங்கமானது மார்ச் 24 (இன்று) மற்றும் 25, 2025 ஆகிய தேதிகளில் 2 நாள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தன. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள், வாக்குறுதிகளை அடுத்து இந்த போராட்டத்தை தற்காலிகமாக UFBU ஒத்திவைத்துள்ளது.
இந்த முடிவானது, மார்ச் 21, 2025 அன்று நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையின் போது மத்திய நிதியமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவற்றிடம், வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு சாதகமான உறுதிமொழிகள் கிடைத்ததை அடுத்து எடுக்கப்பட்டது.
வேலைநிறுத்தத்தின் பின்னணி :
UFBU என்பது AIBOC, AIBEA, BEFI, INBOC, AIBOA, NCBE, INBEF, NOBW மற்றும் NOBO என முக்கிய வங்கி ஊழியர் சங்கங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பாகும். இதில் சுமார் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பிரதிநிதிகளாக உள்ளனர். பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், பிராந்திய ஊரக வங்கிகள் (RRB) மற்றும் கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த ஊழியர்களும் இதில் அடங்குவர். இந்த வேலைநிறுத்தம், வங்கி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் சில முக்கிய கோரிக்கைகளில் சில…
- ஆட்சேர்ப்பு: வங்கிக் கிளைகளில் பணியாளர் பற்றாக்குறையை சரிசெய்யும் நோக்கில் தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
- பணி நிரந்தரம் : நீண்ட காலமாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும்.
- வாரத்தில் 5 நாள் வேலை : வங்கித் துறையில் வாரத்தில் 5 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இது ரிசர்வ் வங்கி மற்றும் அரசுத் துறைகளில் ஏற்கனவே பின்பற்றப்படுகிறது.
- PLI திட்டத்தை திரும்பப் பெறுதல் : வேலை பாதுகாப்பை பாதிக்கும் என்று கருதப்படும் செயல்திறன் அடிப்படையிலான ஊதியம் போன்ற அரசின் சமீபத்திய உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, UFBU மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்திற்கு (IBA) இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, மார்ச் 18 அன்று டெல்லியில் உள்ள மத்திய தொழிலாளர் ஆணையர் (Chief Labour Commissioner) அலுவலகத்தில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தில் வேலைநிறுத்த போராட்டம் குறித்த முடிவு உறுதி செய்யப்பட்டது.
வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
மார்ச் 18-ஐ அடுத்து மார்ச் 21, 2025 அன்று மத்திய தொழிலாளர் ஆணையர் தலைமையில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையில், மத்திய நிதியமைச்சகம் மற்றும் IBA பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், UFBU-வின் கோரிக்கைகள் குறித்து ஆக்கப்பூர்வமான உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, வாரத்தில் 5 நாள் வேலை திட்டம் அமல்படுத்துவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு மற்றும் IBA தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆட்சேர்ப்பு மற்றும் செயல்திறன் ஊதியத் திட்டம் ரத்து குறித்து மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து, UFBU தங்கள் வேலைநிறுத்த அறிவிப்பை ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகள் ஏப்ரல் 22, 2025 அன்று நடைபெறும் என்றும், அப்போது IBA தனது முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முதன்மை தொழிலாளர் ஆணையர் தெரிவித்துள்ளார்.
UFBU-வின் இந்த முடிவு, நிதியாண்டு முடிவுக்கு முன்னதாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிவாரணத்தை அளித்திருக்கும். இருப்பினும், வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படுவதற்கு அரசு மற்றும் IBA-வின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முக்கியமானதாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள், வங்கித் துறையில் நீண்டகால சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.