- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
சென்னையில் போராடிய ஆசிரியர்கள்; வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறையினர்
சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம், அரசு பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடிய ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர் சென்னை காவல்துறையினர். உண்ணாநிலை போராட்டத்தில் பங்கெடுத்த 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் இன்னும் நீடிக்கிறது.

Author: Pughazh Selvi PK
Published: October 5, 2023
சென்னை: கடந்த செப் 28 ஆம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் 3 பிரிவுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 300 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று, 8வது நாள் போராட்டத்தின் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசரியர்களுக்கு பணி கோரி, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டி உட்பட பல்வேறு கோரிக்கைகளோடு 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்கள் போராடிய நிலையில் பலகட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு, பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தற்காலிகமாக போராட்டத்தை திரும்ப பெற்றுள்ளனர்.
3 பிரிவை சேர்ந்த ஆசிரியர்களின் போராட்டம்
சென்னையில் செப் 25 முதல் பகுதி நேர ஆசிரியர்களும், செப் 28 முதல் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றோர் நல சங்கமும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தனர், அதில் பிரதானமாக பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரியும், இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் கோரியும், 2013 ஆம் ஆண்டு டெட் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு அரசு பணி கோரியும் போராட்டம் நடைபெற்றது.பள்ளி கல்வித்துறை வளாகத்தில் போராடும் ஆசிரியர்கள்.
இந்த போராட்டத்தில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்படியான சூழலில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி உட்பட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பலர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஐந்து கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு, நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சம வேலைக்கு சம ஊதியம் கோரும் கோரிக்கைக்காக 01.01.2023 அமைக்கப்பட்ட மூவர் குழுவிற்கு 3 மாத அவகாசம் வழங்கி அறிக்கை சமர்பிக்க கூறியிள்ளார். பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.10,000 ஆக இருந்த மாத தொகுப்பூதியத்தை ரூ. 12,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலாக 10 லட்சம் வரை மருத்துவ காப்பீடும் 10 ஆண்டுகளாக தற்காலிகமாக வேலை செய்யும் 171 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரமும் வழங்க கோரி அரசாணை வெளியிடப்படும் என்று கூறினார்.
மேலும் அவர் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பணி நாடுனர்களுக்கு வயது வரம்பை உயர்த்தியுள்ளார் பொது நூலகத்துறையில் இருக்கும் 446 காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில், ஊர்புற நூலகர்கள் 446 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று கூறினார்.
வலுகட்டாய கைது நடவடிக்கை
அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து, தங்களது கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற கோரி போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர். இந்த நிலையில், பேராசிரியர் அன்பழகனார் வளாகம் அருகே அதிகாலை 4 மணியளவில் இருந்தே காவல்துறையினர் குவிக்கப்பட்டதாகவும், வலுகட்டாயமாக தங்களை தூக்கி சென்றதாகவும் தெரிவித்தனர். மேலும் காலை 9 மணி வரை போராட்டக்கார்களை அப்புறபடுத்தும் வேலை நடைபெற்றதாகவும் களத்தில் இருந்த ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்தனர்.போலீசால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்படும் ஆசிரியர்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கூறுகையில், ‘எந்த ஒரு தீர்வும் இல்லாமல், காலவரையறையுமின்றி, அரசின் மீது நம்பிக்கை வைத்து கலைந்து செல்லுங்கள் என்று மட்டுமே கூறியது பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது’, என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், 'இப்படி கைது செய்வது குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதிக்கிறது, ஒரு குழந்தையின் கண் முன்னே அவர்களது அம்மா, அப்பாவை இழுத்து செல்லும் போது யாருக்குமே பயம் இருக்குமே. ஒரு குழந்தை கதறி அழும் வீடியோவை நம்மால் பார்க்க முடிகிறது’.
ஆசிரியர்களின் கைது நடவடிக்கையை கண்டித்து அதிமுக பொதுசெயலாளர் திரு. எடப்படி பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு. கே. பாலகிருஷ்ணன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போன்ற பல கட்சி தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். போராட்டம் நடைபெறும் போது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் போராட்டக்காரர்களை நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார்.இடதுபுறம் போராட்டகளத்தில் மயங்கிய ஆசிரியர்; வலதுபுறம் பெற்றோரை கைது செய்யும் போது அழுத குழந்தை.
தொடரும் போராட்டம்
2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உருவான 6 வது ஊதிய குழுவில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்யக்கோரி இடைநிலை ஆசிரியர்களும், 2013 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வேலை வேண்டியும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிரந்த பணி வேண்டியும் 10 ஆண்டுகளுக்கு மேலாக போராடுகின்றனர்.
தற்போது கடந்த 10 நாட்கள் நடந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக பகுதி நேர ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றோர் நல சங்கத்தை பொறுத்தவரை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர், மேலும் தற்போதைய போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கைதான பின்பும் 8 வது நாளாக உண்ணாநிலை போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் அமைப்பான இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தை சார்ந்த 2,000 ஆசிரியர்கள் தாங்கள் கைதான இடங்களில் போராட்டத்தை தொடர்கின்றனர்.