- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
சென்னை ஷாப்பிங் மாலில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கத் தடை! நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Author: Santhosh Raj KM
Published: March 31, 2025
சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த முதல் ஒரு மணி நேரத்துக்கு 50 ரூபாயும், அடுத்தடுத்த ஒவ்வொரு மணி நேரங்களுக்கும் தலா 30 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து, சென்னை சேர்ந்தவர் அருண்குமார் என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் (நுகர்வோர் நீதிமன்றம் ) புகார் மனு தாக்கல் செய்திருந்தார்
மனுதாரர் தாக்கல் செய்த மனுவில்..,
தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகள்படி வணிக வளாகங்களில் போதுமான வாகன நிறுத்துமிட வசதி செய்து தர வேண்டியது அவசியம் எனவும், இதற்காக தனியாக கட்டணம் வசூலிக்க முடியாது எனவும், தன்னிடம் பார்க்கிங் கட்டணம் வசூலித்தது நியாயமற்ற வர்த்தகம் என்பதால், ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் வணிக வளாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்
வணிக வளாகம் தரப்பில்..,
தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில், வணிக வளாகங்களில் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது எனக் கூறப்படவில்லை என வணிக வளாகம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால் அதை நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் (நுகர்வோர் நீதிமன்றம்) நிராகரித்தது.
நீதிமன்ற உத்தரவு :
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட ஆணையர், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கலாம் என்பது தொடர்பான விதிகள் எதையும் வணிக வளாக நிர்வாகம் தாக்கல் செய்யாததை சுட்டிக்காட்டிய ஆணையம், திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகம், வாடிக்கையாளர்களிடம் இருந்து வாகனங்களை நிறுத்துவதற்காக கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது; பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்க வணிக வளாகத்துக்கு உத்தரவிட்டார்.