- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
விலைவாசிக்கேற்ப உயராத வருமானம்! தொடர் போராட்டத்தில் வாடகை வாகன ஓட்டுநர்கள்
ஒருபுறம் விலைவாசி உயர்வு மறுப்புறம் கிடைக்கும் 100 ரூபாயில் 30 ரூபாய் ஓலா ஊபர் நிறுவனங்களுக்கு சேவை கட்டணமாகிறது. இவ்விரண்டிற்குமிடையில் திண்டாடும் வாடகை வாகன ஓட்டுநர்கள், தமிழக அரசிடம் 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

Author: Pughazh Selvi PK
Published: October 18, 2023
அக் 16 முதல் 18 வரை மூன்று நாட்களுக்கு வாடகை வாகன ஓட்டுநர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 8 அம்ச கோரிக்கைகளோடு நடைபெறும் இந்த தொடர் வேலை நிறுத்தம் தமிழகம் எங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போராட்டம் துவங்கியது முதல் 10% வாகனங்களே இயங்கியுள்ளதாக போராட்டக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஓலா, ஊபர் போன்ற செயலிகளை முறைப்படுத்த, பைக் டாக்சியை தடை செய்ய உள்ளிட்ட கோரிக்கைகளோடு இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி, மதுரை மற்றும் கோவையில் நேற்று (அக் 17) போராட்டம் நடைபெற்றது. இன்றைய காலகட்டத்தில், மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கை இந்திய அளவில் பல வாகன ஓட்டுநர்களிடையே எழுந்துள்ளது. சமீபமாக புனேவில் அக் 9 ஆம் தேதி ஓலா, ஊபர் ஓட்டுநர்களும் மீட்டர் கட்டண உயர்வை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்தத்திற்கான காரணங்களை கண்டறிய பல வாடகை வாகன ஓட்டுநர்களிடம் உரையாடினோம்.
மீட்டர் கட்டணம்
கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம், கால் டாக்ஸிகளுக்கும் மீட்டரின் அடிப்படையில் கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது. மேலும், இதை அமலாக்க தமிழக தலைமை செயலாளர் மற்றும் போக்குவரத்து துறை ஆணையரை வலியுறுத்தி இருந்த நிலையில், அதை அரசு அமலாக்க வேண்டும் என்று போராட்டக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணம் பற்றி கனலிடம் ஆட்டோ ஓட்டுநர் திரு. சதீஷ்பாபு கூறியதாவது, “நான் 2013 முதல் ஆட்டோ ஓட்டுகிறேன் அன்றைக்கு இருந்த பெட்ரோல் விலை 60 ரூபாய். அன்று இருந்த ஆட்டோ மீட்டர் கட்டணம் 1.8 கிலோ மீட்டருக்கு 25 ரூபாயும் அதற்கு மேல் இருக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 12 ரூபாயும் என்று அரசு நிர்ணயம் செய்தது. இன்றும் இதே கட்டணம் தான் இருக்கிறது, இடையில் இந்த பத்தாண்டுகளில் எந்த ஒரு மாற்றமும் முன்னேற்றமும் இல்லை”, என்று கூறினார்.
ஓய்வெடுக்கும் வாடகை வாகன ஓட்டுநர்
Photo credits - Cartoq
வாடகை வாகனம் ஓட்டுநர் மற்றும் உரிமை குரல் தொழிற்சங்கத்தின் சென்னை மற்றும் பாண்டிச்சேரி மண்டல செயலாளராக இருக்கும் திரு. ஆரோக்கியதாஸ் அவர்கள் கனலிடம் பேசுகையில், “ஒரு கிலோ மீட்டருக்கு 13 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை கிடைக்கும் ஆனால் அது எப்போது தருவார்கள் என்று தெரியாது. 4 முதல் 40 கிலோ மீட்டர் வரை மினி காரில் சவாரி வரும், திரும்பி வரும்போது வண்டி காலியாக வரும் சூழலாகும். ஆனால் அதற்கு எந்த நிறுவனமும் பணம் தந்ததில்லை. பெரிய பைகளோடு வெளி ஊரில் இருந்து வருபவர்கள் ப்ரைம் காருக்கு பதிலாக மினி காரையே தேர்வு செய்வார்கள் ஆனால் நாங்கள் பெரிய காரில் சென்றுதான் கூட்டி வர இயலும். ஆனால் கிடைக்கும் கட்டணமோ மினி காருக்கானதாக இருக்கும்” என்று கூறினார்.
மேலும் பாஸ்ட் டிராக், ரெட் டாக்ஸி போன்ற நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர்களின் பணி அட்டையை முடக்கி வைத்துள்ளதாகவும், அதற்காகவும் மீண்டும் போராடும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
உரிமை குரல் தொழிற்சங்கத்தின் கோவை மாவட்ட பொருளாளர் திரு. விஜய் திலகர் மீட்டர் கட்டணம் குறித்து பேசுகையில், “எந்த செயலியாக இருந்தாலும், கட்டணத்தில் 30% அந்நிறுவனமே எடுத்துக்கொள்ளும், அதனால் ஓட்டுநர்களுக்கு எந்த பயனும் இல்லை. இதே நேரம் சென்னை போன்ற தொழிற்நிறுவனங்களும் மக்கள் தொகையும் கோவையில் இருந்தாலும் பயண கட்டணம் குறைவாகவே இருக்கிறது. தஞ்சை, மதுரை போன்ற ஊர்களிலும் கட்டணம் மாறுபடுகிறது”
“கார்பரேட் நிறுவனங்களை பொறுத்தவரை ஒரு 40 நாட்களுக்கு தர வேண்டிய தொகையை நிறுத்திவைப்பர். காரணம் அந்த வாகனம் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக. மேலும், ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 10 ரூபாய் தான் வழங்கப்படுகிறது. இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும், அது நிலையான வருமானம் என்பதால் அங்கே வேலை செய்கின்றனர்” என தெரிவித்தார்.
‘ஓலா ஊபர் ஓட்டுநர் தொழிலை நசுக்குகிறது’
படம் - பிரதிநிதித்துவ நோக்கம் மட்டுமே
ஆட்டோ ஓட்டுநர் சதீஷ்பாபு ஓலா ஊபர் குறித்து விரிவாக கனலிடம் கூறுகையில், “ஓலா அறிமுகமான காலகட்டத்தில் எட்டு மணி நேரம் செயலியை செயல்பாட்டில் வைத்திருந்தால் (வண்டி ஓட்ட தேவையில்லை) 100 ரூபாய் ஊக்கத்தொகையாக தந்தனர். மேலும் ஒரு சவாரி எடுத்தால் 30 ரூபாய் ஊக்கத்தொகை தருவார்கள். அப்படி ஒரு நாளில் 10 சவாரி செய்து 300 ரூபாய் நான் பெற்றுள்ளேன். ஆனால், இப்போது செயலி உள்ளே நுழைந்தாலே 25 - 40 ரூபாய் பிடிக்கின்றனர். ஒவ்வொரு சவாரிக்கும் தேவையற்ற, தெரியாத சேவை கட்டணங்களை போட்டு தொழிலாளர்களின் வாயிலும் வயிற்றிலும் அடிக்கின்றனர். இதேநிலை தான் ஊபர் செயலியிலும் உள்ளது” என்று தனது வேதனையை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “நமது தொழிலை, குழந்தைகளை, குடும்ப பொருளாதரத்தைப் பார்க்க வேண்டுமே என்கிற கட்டாயத்தில் தான் ஓட்டுநர்கள் அனைவரும் ஓலா ஊபர் செயலியில் வேலை செய்கின்றனர். ஆட்டோ ஓட்டும் ஒருவரும் மனசாட்சிபடி ஓலா ஊபர் என்னை வாழ வைத்தது என்று கூற மாட்டார்கள். ஓலா ஊபரால் இன்றைக்கு ஓட்டுநர் தொழில் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்று சதீஷ்பாபு தனது ஆதங்கத்தை பதிவு செய்தார்.
கோவையை சேர்ந்த விஜய் திலகர் மேலும் பேசுகையில், “பயணிகளிடம் இருந்து புகார் வந்தால் ஓட்டுநர்களின் தரப்பு விளக்கத்தை கூட கேட்காமல் ஓட்டுநர் மீது அபராதம் விதிப்பார்கள் அல்லது கணக்கை முடக்குவார்கள். மேலும் ஓட்டுநரின் பயண நிராகரிப்பின் (Cancellation) அடிப்படையிலும் குறைந்தபட்சம் 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அந்த ஓட்டுநர் பயணத்தை நிராகரிக்காமல் இருந்தாலும் இதேநிலைதான்” என்று கூறினார். மேலும் அதிகபட்சமாக மூன்று நிரகரிப்புகளே அனுமதிக்கப்படுகிறது, அதன் பின் கணக்கை முடக்கிவிடுவார்கள், அதற்கும் அபராதம் கட்ட வேண்டும் என்று ஓட்டுநர்கள் வேதனை தெரிவத்தனர்.
தமிழக அரசிடம் முறையீடு
தமிழக அரசிடம் ஓட்டுநர்களின் கோரிக்கை பற்றி, வாடகை வாகன ஓட்டுநர் ஆரோக்கியதாஸ் பேசுகையில், “எங்களை கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இந்த கார்பரேட் நிறுவனங்கள் நடத்துகிறது” மேலும் அவர் பேசுகையில், “நாங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தேடுத்தவர்கள் இப்போது சொகுசாக இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் இப்போது மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம். அமைச்சர்கள் முதல் அனைவரும் கால் டாக்சியை பயன்படுத்துகின்றனர், அவர்களின் கவனதிற்காகவே இந்த வேலை நிறுத்தம்”, என்று கூறினார்.
சதீஷ்பாபு கூறுகையில், “நம்மைவிட சின்ன மாநிலம்தான் கேரளா இருப்பினும் அராசங்கமே ஆன்லைன் செயலியை உருவாக்கியுள்ளது. அங்குள்ள ஓட்டுநர்களுக்கும் மக்களுக்கும் பாதிக்காத வகையில் கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர். அப்படி கேரளாவால் செய்யும் போது தமிழ்நாட்டால் செய்ய இயலாதா?”, என்று கேள்வியை எழுப்பினார்.
விஜய் திலகர், சதிஷ்பாபு, ஆரோக்கியதாஸ் உட்பட போராடும் அனைத்து ஓட்டுநர்களும் முன்வைக்கும் பிரதான கோரிக்கை மீட்டர் கட்டணத்தை சீர் செய்ய வேண்டும். ஒரு கிலோ மீட்டருக்கு 25 ரூபாயாக அதை நிர்ணயிக்க வேண்டும். தனியாரிடம் கட்டணத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை வழங்காமல் அரசாங்கமே அதை நிர்ணயிக்க வேண்டும்.