- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ஓலா ஊபரை முறைப்படுத்த வாடகை வாகன ஓட்டுநர்கள் தமிழக அரசிடம் வலியுறுத்தல்
சென்னை மாநகரையே சம்பிக்கவைத்த வாடகை வாகன ஓட்டுநர்களின் போராட்டம் இன்று இறுதி நாளை எட்டியது. 40,000 வாகனங்கள் இந்த மூன்று நாட்களில் இயங்கவில்லை என்று போராட்டக் குழுவினர் தெரிவிகின்றனர்.

Author: Pughazh Selvi PK
Published: October 18, 2023
இன்று (அக் 18) சென்னை எழும்பூரில் வாடகை வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக் 16 முதல் 18 வரை 2 நாட்கள் ஓட்டுநர்களின் வேலை நிறுத்தமும் ஒரு நாள் போராட்டமும் நடைபெற்ற நிலையில், இன்று உள்துறை செயலாளரை சந்தித்து 20 கோரிக்கைகள் கொண்ட மனுவை கொடுத்துள்ளனர்.
அனைத்திந்திய சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சமேளனம் (AIRTWF), சிஐடியு, சிகரம் உட்பட பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கி அனைத்து கூட்டமைப்பு சங்கங்கள் தமிழ்நாடு சார்பாக இன்றைய போராட்டம் நடைபெற்றது. ஒற்றுமையே ஓட்டுநர்களின் பலம் என்கிற பதாகைகளோடு 1000 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த மூன்று நாள் போராட்டத்தில் 20,000 ஆட்டோக்களும், 20,000 கார்களும் இயங்கவில்லை என்றும், 15 சங்கங்களை சேர்ந்த 24,000 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் நேரடியாக போராட்டக்களத்தில் இருந்தனர் என்றும் போராட்டத்தை ஒருங்கிணைத்த கூட்டமைப்பின் சார்பில் தகவல் தெரிவித்தனர்.
போராட்டத்தில் வாடகை வாகன ஓட்டுநர்கள்
படம் - கவாஸ்கர் (தீக்கதிர்)
இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சமேளனத்தின் மாநில செயலாளர் திரு. வி. குப்புசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“கடந்த 16 மற்றும் 17, இரண்டு நாட்கள் தமிழகத்தில் உள்ள அத்தனை தொழிற்சங்கங்களும், பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், ஒற்றுமையே பலம் போன்ற டெலிகிராம் குழுக்களும் இணைந்து இந்த ஓலா, ஊபர், போர்டர் போன்ற எந்தவிதமான சட்டவரையறைக்குள்ளும் வராத செயலிகளை கண்டிக்க வேண்டும், அதேபோல் அக்ரிகேடர் முறையை அமலாக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு வேண்டுகோள்விடுக்கின்ற வகையிலே கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு தளங்களில் நாங்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டோம். இன்றைக்கு இந்த போராட்ட களத்திற்கு வந்துள்ளோம். உள்துறை அமைச்சரை சந்திக்க எங்களது கோரிக்கைகளை தயார் செய்துள்ளோம். குறிப்பாக, இணையவழி அபராதம், ஓலா ஊபர் கமிஷன் தொகை குறைக்க வேண்டும், அக்ரிகேடர் முறையை தமிழக அரசு அமலாக்க வேண்டும் என்கிற உடனடி கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் எனும் நோக்கத்தோடு இந்த போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம்” என்று கூறினார்.
போராட்ட மேடையில் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சமேளனத்தின் மாநில செயலாளர் திரு. வி. குப்புசாமி உரையாற்றுகிறார். மற்ற 15 அமைப்பின் தலைவர்கள் மேடையில் உள்ளனர்.
படம் - புகழ்ச்செல்வி
மேலும் செய்தியாளர்களின் ஓலா ஊபர் போன்ற இணையவழி செயலிகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “இணையவழி செயலிகளை அரசாங்கமே எடுத்து நடத்தினால் ஏற்போம். போக்குவரத்துத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் பேசும்போது, ‘தமிழக அரசு செயலியை தொடங்கும்’ என்று கூறினார், ஆனால் அந்த தொடக்க வேலைகளுக்கான எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை செய்திருப்பதாக தெரியவில்லை. எனவே, எங்களது கோரிக்கைகளில் இதுவும் ஒன்று. அப்படி அரசு செய்வது எங்களுக்கு சாதகமானதே. ஏனெனில், தற்போதுள்ள ஓலா, ஊபர் நிறுவனங்கள், பயணிக்கு கார் கதவை திறந்துவிடவில்லை என்கிற காரணத்திற்காக கூட ஓட்டுநர்களை பணி நீக்கம் செய்கின்றனர். இதுவே அரசின் செயலியாக இருந்தால், தனியார் நிறுவனங்கள் வாங்கும் கமிஷன் குறையும், ஓட்டுநர்களுக்கு மாநில காப்பீடு (ESI), வருங்கால வைப்புநிதி (PF) போன்ற நலத்திட்டங்கள் கிடைக்கும்” என்று கூறினார்.
அதை தொடர்ந்து மீட்டர் கட்டணம் மற்றும் ஓட்டுநர்களின் சிரமங்கள் குறித்து அவர் பேசுகையில், “காலையைவிட இரவு நேரங்களில் கட்டணம் அதிகமாக இருக்க, முறையான கட்டண வரையறை இல்லாததே. ஆகவே, எந்த நேரமாக இருந்தாலும், வாகனமாக இருந்தாலும், அரசாங்கமே ஒரு கட்டணத்தை நிர்ணயித்து அதை அமலாக்க வேண்டும். அதே போல, எங்கும் ஒழுங்கான வாகனம் நிறுத்தும் வசதியில்லை. காவல்துறையினர் ஆங்காங்கே நின்றுக்கொண்டு இணையவழி அபராதம் விதிகின்றனர். ‘ஆன்லைன் ஃபைன் 1000 ரூபாய் வேணுமா இல்ல ஐயாவ கவனிச்சிட்டு (கையூட்டு) போறியா’ இது போன்று சென்னை உயர்நீதி மன்றத்திற்கு அருகே நடக்கிறது, சென்னை முழுவதும் இதை உங்களால் பார்க்க இயலும். தமிழக அரசிற்கு கெட்ட பெயர் தருகிறவர்களையும் அரசு கண்காணிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கான அரசு என்று சொல்கின்ற இந்த அரசை நம்பி நாங்கள் காத்திருக்கிறோம்” என்று கூறினார்.
Also read - https://thekanal.in/en-IN/details/652cf45df146df00132fc8b0
Also read - https://thekanal.in/en-IN/details/652f748ff146df00132ffabe