தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / அரசியல்

ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

அக் 3 ஆம் தேதி ‘நியூஸ் கிளிக்’ ஊடகத்தின் ஆசிரியர் டெல்லி காவல்துறையினரால் ‘உபா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சென்னையிலும் அக் 7 - 12 வரை பல்வேறு அமைப்புகளால் போராட்டங்கள் நடைபெற்றது. கைது நடவடிக்கையை எதிர்த்து அக் 18 உச்சநீதி மன்றத்தில் ‘நியூஸ் கிளிக்’ சார்பாக மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அக் 25 வரை சிறைக்காவலில் இருக்க உத்தரவு.

News Image

Author: Pughazh Selvi PK

Published: October 23, 2023

கடந்த 20 நாட்களாக இந்தியா முதல் உலகில் பல இடங்களில் பேசுபொருளாக உள்ளது ‘நியூஸ் கிளிக்’ ஊடகத்தின் ஆசிரியர் மீதான கைது நடவடிக்கை. அக் 3 ஆம் தேதியில் ‘நியூஸ் கிளிக்’ எனும் இணையவழி முற்போக்கு ஊடகத்தின் ஆசிரியர் திரு. பிரபீர் புர்கயஸ்தா, மனிதவள துறை தலைவர் திரு. அமித் சக்கரவர்த்தி மற்றும் ‘நியூஸ் கிளிக்’ ஊடகத்தைச் சார்ந்த 70 செய்தியாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் இல்லங்களில் டெல்லி காவல்துறையினர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் 300 க்கும் மேற்பட்ட லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து பிரபீர் புர்கயஸ்தா மற்றும் அமித் சக்கரவர்த்தி, ஆகிய இருவரும் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் இருந்து ‘நியூஸ் கிளிக்’கிற்கு பணம் வருவதாக ‘நியூ யார்க் டைம்ஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக்கு பின்பு இந்த ரைய்டு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நியூ யார்க் நகரம் முதல் இந்தியாவில் பல இடங்களில் ‘நியூஸ் கிளிக்’ செய்திக்கும் ஊடக சுதந்திரத்திற்கும் ஆதரவாக ஆர்பாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக அக் 7 ஆம் தேதி சென்னையில் இந்திய பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு சார்பாகவும் அக் 11 ஆம் தேதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையில் திக, திமுக உள்ளிட்ட  பல கட்சிகள் ஒன்றிணைந்தும் அக் 12 அனைத்து பத்திரிக்கையாளர் சங்கங்கள் - அமைப்புகளின் கூட்டமைப்பு (சென்னை) சார்பிலும் கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற்றது.

அக் 7 ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட பத்திரிக்கையாளர்கள் பேசியவைகள் பின்வருமாறு:

மூத்த  பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், ‘நியூஸ் கிளிக்’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது, டெல்லியில் இருக்கும் இவர்கள் ஊடகங்களைக் கண்டு பயப்படுகிறார்கள். அரசாங்கம் பல தவறுகளைச் செய்கிறது, அந்த தவறுகளைச் செய்யும் நபர்களைச் சுட்டிக்காட்ட ஊடகங்கள் செயல்படவில்லை, அவைகளை திருத்தவே ஊடகவியல் இருக்கிறது. இங்குள்ள அரசாங்க அமைப்பில் தவறு இருக்கிறது, தனி நபர்கள் மீதல்ல. அரசர்கள் காலத்தில், அரசனிடம் கேள்வி கேட்க கூடாது என்பர், இன்று பிரதமர் நரேந்திர மோடி தன்னை அரசனாக நினைக்கிறார். ஆகவே தான், கீழ்படிதலை தாண்டி மற்ற எந்த விதமான கருத்து சுதந்திரத்தையும் ஏற்க மறுக்கிறார். அப்படி பயப்படாமல் கேட்பவர்களை சிறையில் அடைக்கிறார்” என்று கூறினார்.

மூத்த பத்திரிக்கையாளர் ஷஷி குமார் ‘நியூஸ் கிளிக்’ ஊடகத்திடம் பேசுகையில், “‘நியூஸ் கிளிக்’ ற்கு எதிரான இந்த நடவடிக்கை ஊடக சுதந்திரத்தை மிரட்டும் தோரணையில் உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையேயான பனி போர் - 2 யில் ‘நியூஸ் கிளிக்’ சிக்கி கொண்டுள்ளதோ என்று தோன்றுகிறது. வெளிநாட்டு ஊடகம் இங்கு (இந்தியாவில்) நடப்பதை தவறாக சித்தரிக்கிறார்கள் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் அவர்களின் செய்தியை வைத்து இங்குள்ள செய்தியாளர்களைக் கடுமையான சட்டமான ‘உபா’ வின் கீழ் கைது செய்கிறார்கள், இன்னொருபுறம் சீனாவுடனான வெளியுறவு, வணிகம் சீராகவே உள்ளது. இதற்கு பின்னால் இருக்கும் அரசியலைப் புரிந்துகொள்வது தேவை. கேள்வி கேட்கும் ஊடகங்கள் மீதான தாக்குதலே இதன் பின்னால் இருக்கிறது, அதற்கு ‘நியூஸ் கிளிக்’ ஒரு எடுத்துக்காட்டாகிறது” என்று கூறினார்.

இந்திய பெண் ஊடகவிலாளர்கள் கூட்டமைப்பு (NWMI) சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துக்கொண்டபோது Photo Courtesy - NWMI 

அக் 11 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திமுக தலைமைக்கழக செய்தித் தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச்செயலாளர் மு. வீரபாண்டியன், மதிமுக பொருளாளர் மு. செந்திலதிபன் மற்றும் ஹைசர் முகமது (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), இளஞ் சேகுவேரா (விசிக), மூத்த பத்தி ரிகையாளர் நக்கீரன் கோபால், கவிதா முரளிதரன், சபீர் அகமது பி.எஸ்.டி. புருஷோத்தமன்(தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் - டியுஜெ) , ஹாசிப் (மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மன்றம்), வி. மணிமாறன் (மெட்ராஸ் யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்), டி.எஸ்.ஆர். சுபாஷ் (டியுஜெ) ஆகியோர் கண்டன உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகை மாலி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை உட்பட பல அரசியலாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கெடுத்துள்ளனர்.

 

அனைத்துக் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்பாட்டத்தில் வீரமணி, கே. பாலக்கிருஷ்ணன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் ‘நக்கீரன்’ கோபால், சபீர் அகமது உள்ளிட்ட பத்திரிக்கையாளர்களோடு பொதுமக்கள் ஈடுபட்டபோது.

ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்ட பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் பேசுகையில், “2021-இல் அமலாக்கத்துறை சோதனை நடத்தும் போது, ‘நியூஸ் கிளிக்’ ஆசிரியர் டெல்லி உயர்நீதி மன்றத்தை அணுகி, சீன நிதி விஷயத்தில் தன்னை கைது செய்யக் கூடாது என நீதிமன்ற பாதுகாப்பை பெற்றுள்ளார். எனவே, தற்போது ‘உபா’ என்ற கொடூரமான சட்டத்தைப் பயன்படுத்தி அவரை கைது செய்துள்ளனர்” என்பதை குறிப்பிட்டார். மேலும், “தற்போதைய சோதனையின் போது 300-க்கும் மேற்பட்ட  லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். பீமா கோரேகான் வழக்கில், இதுபோன்ற லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி, இரண்டு செயல்பாட்டாளர்களை வழக்கில் சிக்க வைக்கும் வகையில், போலீசாரே அந்த லேப்டாப்களில் ஆதாரங்களை விதைத்தார்கள். இது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. அதுபோல் இப்போதும் ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்தின் மீதும் நடக்கக் கூடும். இதையெல்லாம் பார்க்கும் போது, வழக்கை விசாரிப்பவர்களே அந்த நிறுவனத்திற்கு எதிராக ஆதாரங்களை உருவாக்குவார்கள் என்றால், நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது” என்றார். 

மேலும் அவர் பேசுகையில், “அமெரிக்காவைச் சேர்ந்த நெவில் ராய் சிங்கம் என்பவர் மூலம்தான் சீனாவின் நிதி இந்த நிறுவனத்திற்கு வந்துள்ளதாக குற்றச்சாட்டு. ஆனால் ராய் சிங்கம் என்பவரின் வழக்கறிஞர், இந்த பணம் எதுவும் சீனாவில் இருந்து வந்ததில்லை என தெரிவித்துள்ளார். அதேபோல ‘நியூஸ் கிளிக்’கானது, அவர்களுக்கு வந்த நிதியை பயன்படுத்தி அரசுக்கு எதிரான சதிகளை செய்தார்கள், தேசத்துரோக செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதுதான் அரசின் குற்றச்சாட்டு. ஆனால் அதுபோன்ற எந்த செய்தியோ, கட்டுரைகளோ இதுவரை ‘நியூஸ் கிளிக்’கில் வெளியிடப்பட்டது இல்லை” என்று சுட்டிக்காட்டினார்.

மூத்த பத்திரிக்கையாளர் ‘நக்கீரன்’ கோபால் பேசுகையில், “’நியூஸ் கிளிக்’ ஊடகத்தின் மீதான தாக்குதல் என்பது மற்ற நிறுவனங்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்பதை மறந்து விடக் கூடாது. பத்திரிகையாளர்கள் வெடிகுண்டு வீசுவதில்லை யாரையும் கொலை செய்வதில்லை. அப்படி இருக்கும் போது பத்திரிகையாளர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிய வேண்டியதன் அவசியம் என்ன? பத்திரிகையாளர் உண்மையை வெளியிடக் கூடாது, தங்களின், எதேச்சதிகாரப் போக்கை மக்களிடம் அம்பலப்படுத்திவிடக் கூடாது என்பதுதான் அவர்களின் (ஒன்றிய ஆட்சியாளர்களின்) நோக்கம். இனிமேலும் இந்த பிரதமரை நாம் (ஆட்சியில்) வைத்திருக்க  வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினர். மேலும், “பத்திரிகையாளர்கள் பாஜக-வின் செய்திகளை புறக்கணிக்க முன்வர வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

கடந்த அக் 13 ஆம் தேதி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ‘உபா’ சட்டத்தின் கீழ் கைதானதை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அம்மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதனை தொடந்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அக் 25 வரை சிறைக்காவலில் இருக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:protestmediaRightRKradhakrishnankavithamuralidharankbbalakrishnanModiNDABJPHCSCNewsclicknewsPressFreedomMediaFreedomCpiDkNakkeeranUAPADelhiPoliceCpimchennaijournalistsJournalistUnion