தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / ஆர்பாட்டம்

பாலியல் சீண்டலை மறைக்க மத சாயம் பூசும் EFL பல்கலைக்கழகம்

அக் 18 இரவு நடைபெற்ற பாலியல் சீண்டலுக்கு நிர்வாகம் பதிலளிக்க தாமதித்ததால் மாணவர்கள் EFL பல்கலைகழகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக நின்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது நிர்வாகம் மத சாயல் பூசுவதாக போராடும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் குரல் எழுப்ப தொடங்கியிள்ளனர்.

News Image

Author: Pughazh Selvi PK

Published: October 27, 2023

ஹைதராபாத்தில் உள்ள ஆங்கில மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைகழகத்தில் (EFLU) மாணவிக்கு நடைபெற்ற பாலியல் சீண்டலைத் தொடர்ந்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மாணவியின் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டதாவது, கடந்த அக் 18 தேதி இரவு 10 மணிக்கு, ஆசிரியர் குடியிருப்பின் 3வது நுழைவாயில் அருகே நடந்து செல்கையில் 2 ஆண்கள் அம்மாணவியை தாக்கி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கினர்.

தற்போது, பல்கலைக்கழக நிர்வாகம் பாலியல் சீண்டலை திசைத்திருப்ப முற்றிலும் தொடர்பற்ற ஒரு கலந்துரையாடலைச்  சுட்டிக்காட்டி போராடும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது ‘மத சாயத்தைப்’ பூசுவதாக, நிர்வாகத்தின் மீது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

‘முடியை இழுத்து தாக்கினர்’
பல்கலைக்கழகத்தில் பாலியல் சீண்டல் விழிப்புணர்வு, தடுப்பு மற்றும் மறுவாழ்வு குழுவான ‘ஸ்பார்ஷ்’ (SPARSH - Sensitisation, Prevention and Redressal of Sexual Harassment Committee) குழுவை அமைக்க வலியுறுத்தி மாணவர்கள் 26 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மறுநாள் தான் அம்மாணவி பாலியல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அக் 16 ஆம் தேதி ‘ஸ்பார்ஷ்’ குழுவை அமைக்க போராட்டம் நடந்தநிலையில் அக் 17 மாணவர்களை உள்ளடக்கி உள்புகார் குழுவை (ICC) அமைக்க நிர்வாகம் ஒப்புக்கொண்டது. ஆனால் அப்போது சுற்றறிக்கை வெளியிடவில்லை.

பாதிப்பட்டவர் பேசுகையில், கருப்பு உடையணிந்த இரண்டு ஆண்கள் அவரை தாக்கியுள்ளனர். மேலும் அவர் போராட்டத்தில் பங்கேற்றது பற்றி குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர் கூறியதாவது, “திடீரென யாரோ எனது முடியை பிடித்து இழுத்தனர், ‘இன்று உன்னை பார்த்தோம். இதுபோல் இனி நடக்க கூடாது’  என்றனர். அவர்கள் போராட்டம் பற்றிதான் குறிப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். பழைய மருத்துவ கூடம் பக்கம் என்னை இழுத்து சென்றனர். அதன் பின் என்னை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினர். இதற்கிடையில் நான் என் நண்பர்களுக்கு கால் செய்த போது எனது மொபைலை பறித்தனர்” என்று கூறினார். அதை தொடர்ந்து அங்கு பணிபுரியும் மருத்துவ உதவியார்களின் பொறுப்பற்ற நடத்தை பற்றி கூறினார். அவர் கூறியதாவது, “ எனது நிலையைப் பார்த்தும் அவர்கள் உதவ விருப்பமின்றி, இரக்கமின்றி (எனக்கு) உதவ தயங்கினர்” என்று வேதனை தெரிவித்தார். 


No Excuse For Abuse - போராட்டத்தில் ஒட்டப்பட்ட வாசகம்   

சக மாணவிக்காக திரண்ட மாணவர்கள்
பாலியல் சீண்டல் நடந்த சில மணி நேரங்களிலேயே மாணவிக்காக நீதி கேட்டு குற்றவாளிகளைக் கைது செய்ய கோரி சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இரவு 10.30 மணிக்கே பாலியல் சீண்டல் நடந்ததாக ஒழுங்கு நடவடிக்கை கண்காணிப்பாளருக்கு தெரிந்திருந்தும் அவர் விசாரணையைத் தொடங்கவில்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். விசாரணையை தொடங்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவி நம்ப கூடிய 2 ஆசிரியர்களை விசாரணை குழுவில் இணைக்க வேண்டும், சிசிடிவி காணொளி காட்சிகளை விசாரணையில் இணைக்க கோரியும் கண்காணிப்பாளர் டி. சாம்சன் வீட்டின் முன்பு காலை 11 மணி வரை 6 மணி நேர தொடர் போராட்டம் நடைபெற்றது.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவியையும் அவரது நண்பர்களையும் ஓஸ்மானியா காவல்துறை மிரட்டியுள்ளதாக மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். நிர்வாகத்தின் அலட்சியத்தால், தொழில்நுட்ப கோளாறால், மோசமான சிசிடிவியால், தெருவில் விளக்கில்லாததால் சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை, மேலும் நிர்வாகமும் விசாரணையை திட்டமிட்டே தொடங்காமல் இருப்பதாக மாணவர்கள் நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டுகின்றனர். தாக்குதல் நடைபெற்று 7 மணி நேரம் கழித்தும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், கண்காணிப்பாளர் வீட்டின் முன்பு மாணவர்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி போராடினர். 


போராட்டத்தில் மாணவர்கள் 

தொடரும் பாலியல் சீண்டல்கள் 
பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவர்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது முதல்முறை இல்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிகழ்வை தொடர்ந்து, பல மாணவ மாணவிகள் தாங்களும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் பாலியல் (தொடுதல் மற்றும் வார்தை வழி) ரீதியான சீண்டல்களுக்கு உள்ளாகி இருக்கிறோம் என்று குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர். 

அக் 26 ஆம் தேதி வெளியான டெக்கன் க்ராநிகல் செய்தியின் அடிப்படையில் பல மாணவர்கள் தங்களது துறை சார்ந்த ஆசிரியர்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளான அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. அவர்கள் வசிக்கும் விடுதி அறைவிட்டு வெளிவர கூட பயப்படுவதாக சிலர் கூறியுள்ளார்கள்.

போராட்டத்தை திசைதிருப்பும் நிர்வாகம்
பெயர்சொல்ல விரும்பாத மாணவர் ஒருவர் பேசுகையில், “பாலியல் சீண்டலுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை நிர்வாகம் மத ரீதியான போராட்டமாக மாற்ற முயன்றது. பாதிகப்பட்டவருடன் இருக்கும் நண்பர்கள், ஆசிரியர்களை குறிவைத்தே இது நடந்தது. மேலும் ICC அமைக்க போராடிய மாணவர்களையும் குறிவைத்தனர்” என்று கூறினார்.

பாலியல் சீண்டல் நடப்பதற்கு முன்பு, மற்றொரு அதிர்ச்சி நிகழ்வு அங்கே நடந்துள்ளது. பாலஸ்தீன் குறித்து ‘Palestine: Perspectives on Literary Resistance’ எனும் தலைப்பில் புதிய அகாடெமிக் கட்டிடம் அருகே ஒரு கலந்துரையாடலை முஸ்லீம் மாணவர் சங்கம் (MSU) சார்பில் திட்டமிட்டுள்ளனர். நிகழ்வுக்கு சில மணிநேரம் முன்பு எப்போதும் மாணவர்கள் இருக்கும் அந்த கட்டிடத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. உடனடியாக அங்கு அனைத்து மாணவர்களும் கேள்விகேட்டு கூட்டத்தை தொடங்க நினைத்தபோது, துணை கண்காணிப்பாளர் அங்கு வந்து முன்னனுமதி இல்லாமல் நிகழ்வு நடப்பதாக கூறினார். மேலும் இந்த நிகழ்வு மூலம் ‘வகுப்புவாத மோதல்கள்’ உருவாகும் என்றும், அதனால் இதை நிறுத்த காவல்துறை மற்றும் புலனாய்வுத்துறை நிர்வாகத்திடம் கூறியதாக சொல்லியிருக்கிறார். இதையடுத்து காவல்துறையும் கல்வி வளாகத்திற்குள் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகம் சார்பில் அக் 19 ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது, அதில் கலந்துரையாடலும், பாலியல் சீண்டலும் வெவ்வேறான நிகழ்வு என்று குறிப்பிட்டு இருந்தாலும், இந்த கலந்துரையாடலை காரணம் கூறி போராடிய மாணவிக்காக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 


அக் 19 பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை

கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பெயரில், போராடிய 11 மாணவர்கள் மீது பின்வரும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. IPC 153, 143, 153a & r/w149 (கலகம் ஏற்பட தூண்டுதல், சட்டவிரோத கூட்டம், மதத்தின் அடிப்படையில் பிரிவினை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் சீன்டலைக் கண்டித்து பல்கலைக்கழக பேராசிரியர்களும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் சார்பாக வெளியிடப்பட்ட கடிதத்தில், நிர்வாகத்தில் இருக்கும் சில அதிகாரிகள் வெளிபடுத்திய அலட்சியத்தை சுட்டிக்காட்டியுள்ளனர். பாதிக்கபட்டவருக்கு துணை நின்று வழக்குப்பதியும்போது, தங்களது சக பேராசிரியர்கள் காவல்துறை துணை ஆணையரால் பிரச்சினைகளையும், அவமானங்களையும் சந்தித்ததாக குற்றம் சாட்டுகின்றனர். நிர்வாகம் நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். கண்காணிப்பாளரின் நடத்தையை கண்டித்த ஆசிரியர்கள், அவர்கள் மற்றும் மாணவர்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதலை நிறுத்தக் கோருகிறார்கள். இறுதியாக மாணவர்கள் மன நலத்தை கருதி, அவர்கள் பயில நல்ல சூழலையும், இந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர வழிவகையும் நிர்வாகம் செய்துதர வலியுறுத்தியுள்ளார்கள்.


ஆசிரியர்கள் சார்பில் வெளியிடப்பட்ட கடிதம்

கல்வியமைச்சகதிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் 
பல்கலைக்கழக மாணர்வகள் போராட்டம் நடைபெறும் போது, கேரள நாடாளுமன்ற உறுப்பினர் A A ரஹீம், டாக்டர். வி. சிவதாசன் மற்றும் ஜான் பிரிட்டோ ஆகியோர் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் இந்திய பெண்கள் ஆணையத்திற்கு உடனடி தீர்வு காண கடிதம் எழுதினார்கள். பல்கலைக்கழக முன்னாள் மாணவர் குடியரசு தலைவர் திரௌபதி முர்முர் க்கு கடிதம் அனுப்பினார். இந்திய மாணவர் சங்கம் மத்தியக்குழு போராடும் மாணவர்களோடு துணை நிற்பதாக கூறியுள்ளனர். மேலும் ஹைதராபாத் பல்கலைக்கழகமும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

தற்போது, பல்கலைக்கழக நிர்வாகம் தசரா விடுமுறையை அக் 29 வரை நீடித்துள்ள நிலையில், கல்வி வளாகத்திற்குள் குறைந்த மாணவர்களே இருக்கின்றனர். ஆகையால், மாணவர்கள் தங்களது போராட்ட வடிவம் குறித்து கலந்துரையாட திட்டமிட்டுள்ளனர்.

(This is a translated version of a report originally published in Kanal, titled EFLU Agitation: Students & Teachers Allege Admin of Using Communal Narrative to Suppress Sexual Assault Case)

Tags:ForeignLanguagesEnglishComplaintsCommitteeInternalharassmentUniversityOsmaniajusticedemandICCPhysicalAbuseSPARSHcommunalnarrativeSexualAssaultSexualHarrasmentStudentsProtestEFLUHyderabadprotestRight