- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
திருப்பூர்-கோவையில் ஓடாத 2 லட்சம் விசைத்தறிகள்
நவ 5 முதல் நடைபெறும் உற்பத்தி நிறுத்த போராட்டம். மின்சார கட்டணம் குறைப்பு பற்றிய கோரிக்கை நிறைவேறினாலும், பஞ்சு விலையை கட்டுப்படுத்த தொடரும் போராட்டம். இந்த சூழலில் ஜவுளி துறையில் இருக்கும் உண்மையான நெருக்கடி வெளிவர தொடங்குகிறது.

Author: Pughazh Selvi PK
Published: November 15, 2023
20 நாட்களுக்கு தொடர் உற்பத்தி நிறுத்தத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நவ 5 முதல் 25 வரை திருப்பூர் கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டத்தை துவங்கி உள்ளனர். உடனடி கோரிக்கையாக மின் கட்டணம் குறைப்பு, பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த செய்ய கோரி போராட்டம் நடைபெறுகிறது.
இந்த 20 நாட்கள் உற்பத்தி நிறுத்தத்தில் விசைத்தறி தொழிலாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆகிய மூன்று தரப்பினர் பங்கேற்றுள்ளனர்.
முழுமையாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகள்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின்சார நிலைக் கட்டணத்தை தமிழக அரசாங்கம் கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி உயர்த்தியது. இதை தொடர்ந்து 6 அம்ச கோரிக்கைகளோடு போராட்ட அறைகூவல்கள் விடுக்கப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் செப் 23 ஆம் தேதி மின் கட்டணம் தொடர்பான கோரிக்கைகளில் மூன்றை பரிசீலித்து அமலாக்க உத்தரவு பிறப்பித்தார். இருப்பினும் அவர்களது கோரிக்கைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படாததால் செப் 25 ஆம் தேதி திட்டமிட்டபடி உற்பத்தி நிறுத்தம் நடந்தது.
தற்போது இந்த 20 நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் 6 நாட்களைக் கடந்துள்ள நிலையில், நவ 11 ஆம் தேதி ‘பரபரப்பு நேர’ மின் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஆனாலும் உற்பத்தியாளர்களின் மற்றொரு பிரதான கோரிக்கையான பஞ்சு விலை கட்டுப்பாட்டையும், துணிகள் இறக்குமதி கட்டுப்பாட்டையும் முன் நிறுத்தி மேலும் உற்பத்தி நிறுத்த போராட்டம் 10 நாட்களுக்கு மேலாக தொடர்கிறது.
படம் - மின்சார நிலை கட்டணத்தை இரத்து செய்யகோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடந்தபோது.
Photo courtesy - The Hindu
'மீண்டும் மஞ்சப்பை’
ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களது போராட்டத்தின் கோரிக்கைகளை மேலும் விவரித்து கூறியுள்ளனர். கோரிக்கைகளை பற்றி ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சகத்தின் விசைத்தறி வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்ட சபை (Powerloom Development & Export Promotion Council - PDEXCIL) எனும் அமைப்பின் துணை தலைவர், சக்திவேல் கனலிடம் பேசுகையில், “தொடர்ச்சியாக நடக்கும் வியாபார நெருக்கடியால், இந்த முறை வேறு வழியின்றி உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த பிரச்சனையை சரிசெய்ய அரசிடம் சில தீர்வுகளை முன்வைக்கிறோம்” என்று கூறினார்.
அவர் முன்வைக்கும் தீர்வுகளாவது, “குறு நெசவாளர்களை காக்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்தது. இதனால் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு முழுவதும் பருத்தி பைகளானது. கடந்த 6 மாதங்களாக மீண்டும் பருத்தி பைகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது. அதே போன்று சூரத்தில் இருந்து வர கூடிய ரோடோ காட்டன், பாலிஸ்டர் துணிகள் மீதான கட்டுப்பாடும் இல்லாமல் போய்விட்டது. ஆகவே அரசாங்கம் இதை தீவிரமாக அமலாகினால் ஏதேனும் மாற்றங்கள் வரும். ஒன்றிய அரசை பொறுத்தவரை அதிகபடியான துணிகள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும்”, என்று கோரிக்கைகளை முன்வைத்தார்.
தற்போது நடைபெறும் போராட்டத்தால் 2 லட்சம் விசைத்தறியும் 30,000 தானியங்கி தறியும் நிறுத்தப்படுகிறது. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் நாளொன்றிற்கு 50 கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் என்று சக்திவேல் பேசும்போது குறிப்பிட்டார்.
படம் - ஆடை உற்பத்தியில் பணி செய்யும் தொழிலாளர்கள்
இவ்வாறு தான் மற்ற இரண்டு தரப்பான விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடும் சூழல் உண்டானது. விசைதறிக்கு வேலையும் கூலியும் தரும் ஜவுளி உற்பத்தியாளர்கள் போராடுவதால் விசைத்தறி உரிமையாளர்களின் வேலையும் நிறுத்தப்பட்டுள்ளது.
காட்டன் கார்பரேசன் ஆஃப் இந்தியா
பஞ்சு விலை உயர்வால் பாதிக்கப்படும் இவர்களும் இந்த உற்பத்தி நிறுத்தத்தின் வழியாக அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைகின்றனர்.
தமிழ்நாடு விசைத்தறி சம்மேளன தலைவர் பி. முத்துசாமி போராட்டம் குறித்து கனலிடம் பேசுகையில், “அரசு நடத்தும் காட்டன் கார்பரேசன் ஆஃப் இந்தியா தான் பருத்தியை வாங்கி நூற்பாலைக்கு தேவையான அளவு லாபத்தோடு பருத்தி விற்பனை செய்துகொண்டு இருந்தனர். தற்போது அந்த கூட்டுறவே இல்லை. தற்போது தனியார்தான் பருத்தியை வாங்கி, பதுக்கி வைத்து தேவையை உண்டாக்கி விற்பனை செய்கிறது” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “தமிழ்நாடு காட்டன் கார்பரேசன் உருவாக்க வேண்டி கோரிக்கை வைத்துள்ளோம். கோவை, திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் ஜவுளி சந்தை வைக்குமாறு கேட்கிறோம். இப்படியான வழிமுறைகள் மேற்கொள்ளபட்டால் இந்த துறையை பாதுகாக்கலாம் இல்லை என்றால் மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும்” என்று கூறினார்.
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர், இரா. வேலுசாமி கனலிடம் பேசுகையில், “ஒன்றிய அரசு இந்தியா முழுவதும் உள்ள பருத்தி உற்பத்தியை கணக்கில் எடுத்து காட்டன் கார்பரேசன் ஆஃப் இந்தியாவின் மூலம் 10,000 நூற்பு இயந்திரங்கள் கொண்ட சிறிய நூற்பாலைகளுக்கு அனுப்பினால் பஞ்சு விலை கட்டுப்பாட்டில் இருக்கும். இதை கணக்கில் கொள்ளாமல் பஞ்சை ஏற்றுமதி செய்கிறார்கள். அதனால் பஞ்சு தட்டுபாடு ஏற்பட்டு விலை ஏறுகிறது அது தொழிலை கடுமையாக பாதிக்கிறது” என்று கூறினார்.
அடிப்படை காரணம்
மின்சார கட்டண குறைப்பு, பஞ்சு விலை கட்டுப்பாடு என்பவை போராடுபவர்களின் உடனடி கோரிக்கைகளாக இருப்பினும், இந்த போராட்டத்தின் ஆணி வேர், வேறு பிரச்சினையான ‘உபரி உற்பத்தி’ ஆகும்.
விற்பனைக்கு மிஞ்சிய அளவு / அதிகமான அளவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தால் அது உபரி உற்பத்தியாகிறது. சில நேரங்களில் இது விற்பனை தேக்கத்தாலும் ஏற்படும்.
ஆனால், இந்த ‘உபரி உற்பத்தி’ உருவாக காரணம் என்ன? அப்படி உருவாவதால் நடைபெறும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சினைகளின் தீர்வுதான் என்ன? ஆகிய வினாக்களுக்கு விடையை அடுத்த கட்டுரையில் காண்போம்.