தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / ஆர்பாட்டம்

மகளிர் உரிமைத் தொகை கோரி மாற்றுத்திறனாளிகள் மனு அளிப்பு போராட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான மகளிர் உரிமைத் தொகை நிரகரிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மனு அளிப்பு போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியரிடம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி மனு கொடுக்கப்பட்டது.

News Image

Author: Muthurani

Published: November 21, 2023

Image - TARATDAC சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மகளிர் உரிமைத் தொகை மனுவை வழங்கிய போது.

மாற்று திறனாளி உதவித்தொகை பெற்று வரும் குடும்பங்களில்  மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை நிராகரிக்கப்படுகிறது. இதை கண்டித்து தமிழ் நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் (TARATDAC) தமிழகம் முழுவதும் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தினர்.

தமிழக அரசு செப்டம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை தகுதி உடைய அனைத்து பெண்களுக்கும் வழங்கி வருகிறது. அதனை பெறுவதற்கு மாற்று திறனாளி பெண்களும் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், ஏற்கனவே மாற்று திறனாளி உரிமை தொகையை பெறுவோர், இரண்டு சிலிண்டர்கள் பயன்படுத்துவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் இணைப்பு சக்கரம் பொருத்திய வாகனங்களை பயன்படுத்துவோர், போன்றவர்களின் விண்ணப்பங்களை அரசு தரப்பில் நிராகரிக்கப்படுகிறது.

எனவே, இவற்றை கண்டித்தும் உரிமை தொகை வழங்கிட வேண்டும் என்று கோரியும் தமிழ் நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் தமிழகம் முழுவதும் வருவாய் கோட்டாச்சியர்  அலுவலகத்தில் நவ 20 ஆம் தேதி காலை மனு கொடுக்கும் இயக்கத்தினை நடத்தினர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேயிடம் சங்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து மனு கொடுத்துள்ளனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த பின்பு  TARATDAC சங்கத்தின் பொது செயலாளரான ஜான்சி ராணி கனலிடம் கூறுகையில் “மாற்று திறனாளி உதவித்தொகையை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகை நிராகரிப்படுவதை கண்டிக்கிறோம். இது தொடர்பாக ஏற்கனவே தமிழக முதல்வரிடம் மனு கொடுத்துள்ளோம். மாற்று திறனாளி ஆணையரை  சந்தித்தும் கோரிக்கை மனுவை அளித்திள்ளோம்”, என்று கூறினார்.

மேலும் அவர்களது கோரிக்கைகள் பற்றி பேசுகையில், “அனைத்து மாற்று திறனாளி குடும்பத்தினருக்கும் நிபந்தனையின்றி மகளிர் உரிமைத் தொகை வழங்கிட வேண்டும் மற்றும் மகளிர் உரிமைத் தொகை பெறாத குடும்பத்தில் மாற்று திறனாளி பெண் இருந்தால் அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கிட வேண்டும்  என்ற இரண்டு கோரிக்கைகளை முன் வைத்து தமிழகம் முழுவதும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நவ 20 கோரிக்கை மனு கொடுப்பது என முடிவு எடுக்கப்பட்டு மனு கொடுக்கும் இயக்கத்தினை நடத்தியுள்ளோம்” என்று ஜான்சி ராணி கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “இது போன்ற காரணங்களை காட்டி மகளிர் உரிமைத் தொகையை நிராகரிப்பது ஏற்புடையது அல்ல. இதனால் பெண்கள் குறைந்த பட்ச உரிமை தொகையை கூட பெற முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். குடும்பத்தில் ஆண் அல்லது பெண் யார் தலைவராக இருந்தாலும் மாற்றுத்திறனாளி மகளிர் இருந்தால், அவர்களுக்கு உரிமை தொகை வழங்கிட வேண்டும். அவர்கள் பயன் பெறும் வகையில் எவ்வித நிபந்தனையின்றி  மகளிர் உரிமைத் தொகையை வழங்கிட வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்துள்ளோம்” என்று கூறினார்.

கர்நாடக மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் மாற்றுத்திறனாளி உதவித்தொகையை பெறும் மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இது போன்று, தமிழகத்திலும் வழங்கினால் இங்குள்ள மாற்று திறனாளி மகளிர் பயன் அடைவார்கள். எனவே, மகளிர் உரிமைத் தொகை வழங்கிட வேண்டும் என்று அவரது எதிர்பார்ப்பைப் பகிர்ந்தார்.

மேலும், தற்போது அளிக்கப்பட்ட மனுவின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என்பதையும் ஜான்சிராணி கனலிடம் கூறினார்.

Tags:protestகோட்டாச்சியார்KalaingarMagalirUrimaiThogaicollectorateவருவாய்TARATDACSubsidiesDifferentlyAbled