தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / வங்கியியல்

இவருக்கு இதுதான் வேலை...பெண் வங்கி ஊழியர்களுக்கு வாட்ஸ் அப்பில் கிஸ் ஸ்மைலி, ஹார்டின்: ஏ.ஜி.எம்-ன் அத்துமீறிய செயல்!

தமிழ்நாடு கிராம வங்கி பெண் ஊழியர்களிடம், அவ்வங்கியின் சேலம் மாவட்ட உதவி பொது மேலாளர் கண்ணியமற்ற முறையில் நடந்துகொள்வதாகவும், வங்கியின் வாட்ஸ் அப் குழுக்களில் வரம்பு மீறி கருத்துக்கள் மற்றும் இமோஜிகளை பகிர்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து மேற்கொள்ளபட்ட விசாரணையின் கூடுதல் விவரங்கள் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

News Image

Author: Dayana Roselin

Published: July 31, 2024

சேலம் மாவட்டம் தமிழ்நாடு கிராம வங்கியின் உதவி பொது மேலாளராக பணியாற்றி வருபவர் டேவிட் விஜயகுமார், இவர் மீதுதான் பெண் வங்கி ஊழியர்கள் பலர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். பெண் ஊழியர்களுக்கு வங்கியின் வாட்ஸ் அப் குழுவில் அநாகரீகமாக மெசெஜ் செய்வது, அவர்களிடம் கண்ணியம் அற்ற முறையில் நடந்துகொள்வது உள்ளிட்ட பல அறம் அற்ற செயல்களைச் செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்களிடம் கேட்டபோது, பல்வேறு ஆதாரப்பூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த வகையில், வங்கியின் துணை பொது மேலாளர் பதவி மட்டும் இன்றி, திட்டமிடுதல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த துறையின் தலைமை பொறுப்பாளராகவும் டேவிட் விஜயகுமார் பணியாற்றி வருகிறார் எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், வங்கிக்கான டெப்பாசிட் வாடிக்கையாளர்களைப் பிடிப்பது, வங்கிக் கடன் வழங்குதலை ஊக்குவிக்கத் தேவையான திட்டமிடல்களை மேற்கொள்வதுபோன்ற பணிகளையும் இவர் கவனித்து வருகிறார். இதற்காக வங்கி மேலாளர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் அடங்கிய வாட்ஸ் அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வாட்ஸ் அப் குழுவில் வங்கி ஊழியர்கள் தாங்கள் பிடித்த டெப்பாசிட்  விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அந்த வாட்ஸ் அப் குழுவில் உள்ள பெண் வங்கி ஊழியர்கள் அந்த விவரங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில்தான் சமீபத்தில் வங்கியின் பெண் மேலாளர் ஒருவர் டெபாசிட் குறித்த விவரங்களை அந்த வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த டேவிட் விஜயகுமார், உடனே அந்த குழுவில், அந்த பெண் வங்கி மேலாளரைப் பாராட்டுகிறேன் என்ற விதத்தில் கிஸ் ஸ்மைலியுடன் fabulous என எழுதப்பட்டுள்ள ஸ்டிக்கரை பகிர்ந்துள்ளார். இந்த செயலானது ஒருவகையில் பெண்களுக்கு எதிரான வக்கிரமான மனநிலையைக் காட்டுகிறது என்றே கருதலாம். இதுபோன்று ஏற்கனவே வங்கியின் பல குழுக்களில் டெப்பாசிட் பிடித்த ஊழியர்களை Toper எனவும், பிடிக்காத ஊழியர்களை floper எனவும் குறிப்பிட்டு மன உளைச்சலுக்கும் ஆளாக்கியுள்ளார் டேவிட்.

இது அவர் தற்போது செய்த செயல், ஆனால் இது முதல் முறை அல்ல என்பது பலகட்ட விசாரணைக்குப் பிறகுதான் தெரியவந்தது. அவர் இதற்கு முன்னதாக பணியாற்றிய கோயம்புத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெண் ஊழியர்களை வார்த்தையால், பார்வையால், செயலால் எனப் பல வழிகளிலும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் எனக்கூறப்படுகிறது. “இது குறித்து தலைமை நிர்வாகத்திடம் பல முறை புகார்களும் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர்கள் சங்கத் தலைவர் அண்டோ கால்பட் கூறியுள்ளார். விடுப்பு எடுக்க வேண்டும் என்றால் அதற்கு மருத்துவ சான்றாக எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் டேவிட் விஜயகுமார் கேட்கும் சூழலில், மாதவிடாய் நாட்களில் கூட வங்கி பெண் ஊழியர்கள் விடுப்பு எடுக்க முடியாத சூழல் உருவாகி இருப்பதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

அது மட்டும் இன்றி, குடும்பச் சூழல் காரணமாக வங்கி ஊழியர்கள் இடமாற்றம் கேட்டு டேவிட் விஜய் பணியாற்றும் கிளைக்குச் சென்றால், "புருஷன் கூட இருக்கனும்னு தான ட்ரேன்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்த ஒழுக்கமா வேலையை செய்யி" என ஒருமையில் திட்டுவது, பெண் ஊழியர்களின் வேலை நேரம் முடிந்த பிறகும் வேலை செய்யச் சொல்லி டார்சர் செய்வது உள்ளிட்ட பல இடைஞ்சல்களையும் கொடுத்துள்ளார்.

இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம், பல்வேறு குற்றச் செயல்களுக்கு உடந்தையாகவும் இருந்துள்ளார் டேவிட் விஜயகுமார். அதில் ஒன்று கோவையில் நடந்த நகை திருட்டு சம்பவம். அங்கு அவர், வங்கி மேலாளராக பணியாற்றியபோது, அவருக்கு நெருக்கமான ஊழியர் மணிகண்டன் என்பவர் வாடிக்கையாளரின் 2.5 கிலோ தங்கத்தைத் திருடி உள்ளார். அந்த குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட போதும்கூட மணிகண்டனுக்கு ஆதரவாகவே டேவிட் குரல்கொடுத்துள்ளார். அதற்குப் பிறகு மணிகண்டனை போலீஸார் கைது செய்துள்ளனர். இப்படிப் பல குற்றச் செயல்களுக்கும், அறம் அற்ற நடத்தைக்கும் முழு உருவமாக இருக்கும் டேவிட் விஜயகுமார், அரசுக்கு மட்டும் அல்ல சமூகத்திற்கும் சீர்கேடு ஏற்படுத்தும் நபராகவே உள்ளார் என்ற குற்றச்சாட்டு சக ஊழியர்களால் முன்வைக்கப்படுகிறது.

தமிழ்நாடு கிராம வங்கி என்பது பொதுமக்களுக்காக இயங்கும் ஒரு ஊரக வங்கி. இங்கு சுமார் 50 விழுக்காட்டிற்கு மேல் பெண் ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், வேலியே பயிரை மேயும் கதையாகத் தலைமை பொறுப்பில் உள்ள டேவிட் விஜயகுமார் போன்ற நபர்களால் அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஊழியர்களுக்கு வங்கி சார்பில் அலுவலகப்பணிக்காக மொபைல் ஃபோன் வழங்கப்படாத நிலையில், தங்களின் தனிப்பட்ட செல்ஃபோன்களையே ஊழியர்கள் வங்கிக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் டேவிட் விஜயகுமார் வாட்ஸ் அப்பில் அநாகரீகமான மெசேஜ்களை பதிவிடுவதால், ஊழியர்களின் குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடு, குழந்தைகளுக்குப் பெற்றோர் மேல் தவறுதலான எண்ணம் ஏற்படுதல் போன்ற பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு உள்ளதையும் தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

அரசு உடைமைக்கு உரிய வங்கியில் பணியாற்றும் தலைமை பொறுப்பில் உள்ள நபர்கள், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருப்பது மட்டும் இன்றி பெண் ஊழியர்களின் தேவை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்பவர்களாகவும் இருக்க வேண்டும். ஆனால் இங்கு, இவர் பெண் ஊழியர்களின் கழுத்தை நெரிப்பதுபோல், அவர்களின் உரிமைகளைப் பறிக்க முயற்சிப்பது, கிண்டல், கேலி பதிவுகளை வாட்ஸ் அப்பில் பதிவிடுவது, தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகித்துப் பேசுவது போன்ற பல செயல்களைச் செய்து வரும் நிலையில், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.

Tags:TNGBTNGB Workers Union