- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
வாரத்திற்கு 5 நாள் வேலை: வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கையும், அதன் பின்னணியும்
ஒரு வாரத்திற்கு 6 நாள் வேலை என்பதை குறைத்து 5 நாட்களாக மாற்ற வேண்டும் என்பதும், வங்கி பணி நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என்பதும் வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இக்கோரிக்கைகளுக்கு பின்னால் இருக்கும் ஊழியர்களின் தற்போதைய நிலை குறித்து இந்த செய்திக்குறிப்பில் காணலாம்.

Author: Kanal Tamil Desk
Published: October 16, 2024
நாடு முழுவதும் 5 நாள் வங்கி சேவையை உறுதி செய்ய வேண்டும், வேலை நேரம் முடிந்தும் பணியாற்றும் சூழலை அகற்ற வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் முன்வைத்துள்ளனர்.
"உனக்கென்னப்பா பேங்க்ல வேல பாக்குற.. அரசாங்க ஊதியம்..ஜாலியா இருக்கலாம்..எங்கள மாரியா" என்ற பேச்சுக்களை கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் இன்றைய காலகட்டத்தில் "பேங்க் வேலையா? ஆமாயா அது நேரம் காலம் பாக்காம வேலை செய்யனும், வர்க் ப்ரஷர் வேற.. வாரத்துல 6 நாள் பேங்க்ல தான் உக்காந்திருக்கனும்.. அந்த பொளப்புக்கு தோட்டத்துல ஜாலியா ஆடு, மாடு மேச்சுட்டு ஃப்ரியா இருந்துடலாம்" என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு மனிதனுக்கு 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் கொண்டாட்டம் என்பதுதான் வாழ்க்கையின் சமநிலை கோட்பாடு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் என யாரும் அதை பொருட்படுத்துவது இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அரசாங்க வேலை வேண்டும், வங்கி ஊழியராக வேண்டும் என நினைத்து பலரும் அதற்காக உழைக்கிறார்கள். ஆனால் அந்த வங்கி ஊழியர் வேலை கிடைத்த பிறகு, "ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம்" என தோன்றும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வங்கி சேவை என்ற நிலை இருந்தது, ஆனால் தற்போது பல்வேறு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் வேலை சுமை காரணமாக 12 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து வங்கி ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது, 10 பேர் வேலை பார்க்க வேண்டிய இடத்தில் 2 முதல் 3 பேர் வேலை செய்யும் நிலை இருப்பதாகவும், இதனால் காலையில் 9 மணிக்கே வங்கிக்கு வந்து இரவு 7 மணி அல்லது 8 மணிக்கு மேல் ஆகும் வரை வேலை பார்ப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
அது மட்டும் இன்றி, இதனால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தன்னால் நேரம் செலவிட முடியவில்லை என வருத்தம் தெரிவித்த அவர், வேலை பழு காரணமாக மன அழுத்தம் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல் மற்றொரு வங்கி ஊழியரிடம் கேட்டபோது, " நான் என் குடும்ப வாழ்க்கைய மறந்து ரொம்ப நாள் ஆச்சு.." என கனத்த இதயத்தோடு பேசினார். மேலும், தனது வங்கி மேலாளர் ஒருமுறை தன்னிடம் " வங்கிக்காக வேல பாக்குறதும், அத முன்னேற வைக்கிறதும்தான் உன்னோட ஒரே நோக்கமா இருக்கனும்" என கூறியதாகவும் தெரிவித்தார். வங்கியின் இந்த இடைவிடாத பணிச்சுமை என்பது, ஊழியர்களின் மனநலம் மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகளை இந்த ‘கனத்த’ வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன.
இந்த சூழலில்தான் நாடு முழுவதிலும் உள்ள 10 லட்சத்தி்ற்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் 5 நாள் வங்கி சேவை மற்றும் 8 மணி நேரம் வரை மட்டும் வேலை பார்க்கும் சூழல் உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அத்தனை நிதி நிறுவனங்களும் 5 நாள் வேலை மற்றும் 8 மணி நேரம் சேவை என்ற அடிப்படையில் இயங்கும்போது அதே மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வங்கி ஊழியர்கள் மட்டும் ஏன் 6 நாட்கள் வேலை மற்றும் அதீத பணி சுமைகளை ஏற்க வேண்டும் என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பல்வேறு நாடுகளில் 4 நாட்கள் மட்டும் வேலை மற்ற நாட்களை அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்காக செலவிடலாம் என்ற நிலையை ஊக்குவிக்கும்போது, இந்தியாவால் மட்டும் ஏன் அதை ஏற்க முடியவில்லை என்ற வினாக்களும் எழுந்துள்ளது.
மேலும், இந்த பணி சுமை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்டவை குறித்து பொதுநல மருத்துவர் சாந்த குமாரிடம் கேட்டபோது, "ஒரு மனிதன் எந்த அளவுக்கு உழைக்கிறானோ அதே அளவுக்கு ஓய்வும், கொண்டாட்டமும் முக்கியம் என குறிப்பிட்டார். அதித வேலை அவர்களின் மனநிலை, உடல் ஆரோக்கியம் உள்ளிட்டவைகளை கடுமையாக பாதித்து அவர்களின் குடும்பம் மற்றும் வாழ்வாதாரத்தை வேகுவாக பாதிக்கும் எனவும் குறிப்பிட்டார்.
அது மட்டும் இன்றி ஓய்வும், மன நிமத்தியும் ஒரு மனிதனை சிறப்பாக பணியாற்ற உதவும் என குறிப்பிட்ட அவர், ஒருவர் மிக சோர்வாக இருக்கும்போது வாங்கப்படும் வேலை அந்த நிர்வாகத்திற்கு பலனளிக்காது எனவும் தெரிவித்தார். அது மட்டும் இன்றி, இன்றைய காலகட்டத்தில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் பலர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்வதும், மாரடைப்பு ஏற்பட்டு ஊயிரிழப்பது என்பதும் அதிகரித்துள்ளதாகவும் இதை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எமர்ஜென்சி நிலையில் உள்ளதாகவும் கூறினார்".
ஒரு நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று அதன் முதுகெலும்பாக செயல்படும் வங்கி ஊழியர்களின் வாழ்க்கை சமநிலையும் முக்கியமாக உள்ளது. இதை கொள்கை ரீதியாக மட்டும் ஏற்றுக்கொள்ளும் மத்திய நிதித் துறை, கோரிக்கையாக ஏற்று எப்போது அதை நடைமுறை படுத்தும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.