- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
இந்திய எதிர்காலத்திற்கு நம்பிக்கை தருகிறது பொதுத்துறை வங்கிகள் : மத்திய நிதி அமைச்சகம் பாராட்டு!
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்களுக்கு திட்டமிட்டு வரும் அதே சூழலில், நடப்பு நிதியாண்டில் அவை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் பாராட்டியுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: November 15, 2024
நடப்பு நிதியாண்டில் இந்திய பொதுத்துறை வங்கிகள் (PSB - Public Sector Bank) சிறப்பாக செயல்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு பாராட்டியுள்ளது.
FY2024-25 நிதியாண்டின் முதல் பாதியில் பொதுத்துறை வங்கிகளின் (PSB) நிகர லாபம் 26% அதிகரித்துள்ளது எனவும், செயல்படாத சொத்துகள் (NPAs) குறைக்கப்பட்டு வங்கிகள் வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன என்றும் நிதி அமைச்சகம் நவம்பர் 12ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தது.
நிதியமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்கள் :
(FY25 முதல் அரையாண்டு கணக்கீட்டின் படி)
- ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட 12 பொதுத்துத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
- பொதுத்துறை வங்கியின் மொத்த வணிகம் ரூ.236.04 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 11% ஆண்டு வளர்ச்சியை குறிக்கிறது.
- கடன் அளவு 12.9% வளர்ச்சியடைந்து ரூ.102.29 லட்சம் கோடியாக உள்ளது. அதே போல டெபாசிட் அளவு 9.5% வளர்ச்சியடைந்து ரூ.133.75 லட்சம் கோடியாக உள்ளது.
- முதல் அரையாண்டில் செயல்பாட்டு லாபம் (Operating Profit) ரூ. 1,50,023 கோடியாக உள்ளது. இது 14.4% ஆண்டு வளர்ச்சியை குறிக்கிறது. அதேபோல, நிகர லாபமானது 25.6% வளர்ச்சியடைந்து ரூ. 85,520 கோடியாக உள்ளது.
- மொத்த மற்றும் நிகர NPAகள் (செயல்படாத சொத்துக்கள்) 3.12% மற்றும் 0.63%ஆக இருந்துள்ளது. இது ஆண்டுக்கு 108 bps மற்றும் 34 bps சரிவை சந்தித்துள்ளது.
நிதியமைச்சகம் பாராட்டு :
இந்த அறிக்கை மூலம் பொதுத்துறை வங்கிகள், பல சவால்களை எதிர்கொண்டு, ஒழுக்கமான கடன் நடைமுறை, சொத்து தீர்மானம், பொறுப்பாக கடன் வழங்கும் முறை, நிர்வாகம், வங்கிக்கான நிதி சேமிப்பு, புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்ட செயல்பாடு என குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கணடுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், AI தொழில்நுட்பம், கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டு செயல்படுவதன் மூலம் PSBகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை மூலம் எடுத்துரைத்துள்ளது. வலுவான இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி, வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Say No to Privatisation:
பொதுத்துறை வங்கிகளின் முன்னேற்றத்தை குறிப்பிட்டும், நிதி அமைச்சகம் வெளியிட்ட ஆய்வறிக்கை குறித்தும் அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தினர் (AIBEA) தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சியானது இந்திய எதிர்காலத்திற்கான எரிபொருள் என்றும், இந்திய எதிர்காலத்திற்கு நம்பிக்கையை தருகிறது என்றும் குறிப்பிட்டு, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அதில், நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களை குறிப்பிட்டு, வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு கருத்துக்களையும் (Say no to Privatisation) பதிவிட்டு இருந்தனர்.
தனியார்மயமாக்கல் :
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கை என்பது கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்தே கூறப்பட்டு வருகிறது. அப்போது முதலே மத்திய நிதியமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு விவாதத்தில் இருந்து வந்தாலும், அந்த திட்டம் செயல்படுத்தபடாததற்கு காரணம் வங்கி ஊழியர்களின் தொடர் எதிர்ப்பே ஆகும்.
வங்கி ஊழியர்களின் தொடர் எதிர்ப்பு, பல்வேறுகட்ட போராட்டங்கள் என பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு குரல் வலுத்தத்தால் இன்னும் இந்த திட்டம் நடைமுறைபடுத்தாமல் இருந்து வருகிறது.
தனியார்மயமாக்கல் பேச்சுக்கள் எழுந்து வரும் சூழலுக்கு மத்தியிலும்,பொதுத்துறை வங்கிகளின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது, ‘தொடர் லாபத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளை எதற்காக தனியார்மயமாக்க வேண்டும்?’ என்ற கேள்விகளை எழுப்புகிறது.