பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம்! காரணம் என்ன?
அனைத்திந்திய பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIPNBOF) டிசம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

Author: Kanal Tamil Desk
Published: December 22, 2024
அகில இந்திய பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தவுள்ளனர். இந்த பெரிய போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த டிசம்பர் 18 அன்று கருப்பு பேட்ஜ் போராட்டத்தை வங்கி அதிகாரிகள் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இப்போராட்டத்திற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி பார்ப்போம்..
போராட்டம் :
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) அதிகாரிகள் கூட்டமைப்பு (AIPNBOF) 2024, டிசம்பர் 18 அன்று கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் முதற்கட்ட போராட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கம் வங்கி மேலாண்மையின் பாகுபாடுகளை வெளிப்படுத்துவது மற்றும் வங்கி அதிகாரிகளின் நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்துவதாகும். வரும் டிசம்பர் 26, 27 தேதிகளில் நாடு முழுவதும் நடக்கவுள்ள இரண்டு நாள் வேலை நிறுத்தத்திற்கு முன்னோடியாக, கருப்பு பேட்ஜ் போராட்டத்தை AIPNBOF தொடங்கியது.
போராட்டத்தின் காரணம் :
இந்த போராட்டத்திற்கான முக்கியமான காரணமாக கூறப்படுவது, வாரத்தில் ஐந்து நாள் பணிநாளை (Five-Day Work Week) அனைத்து அரசு வங்கிகளிலும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதாகும்.
வாரத்தில் 5 நாள் வேலை :
வங்கி ஊழியர்களின் வாழ்க்கை-பணி சமநிலையை மேம்படுத்த இது முக்கிய கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறையை சரிசெய்தல் :
கிளைகளின் வேலைப்பளுவை சமநிலைப்படுத்துவதற்கும் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
ஓய்வூதிய தேர்வு சுதந்திரம் : NPS திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு தங்கள் ஓய்வூதிய நிதித் தேர்வை செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும்.
அனைத்து சங்கங்களுக்கும் சமமான அணுகுமுறை : அனைத்து சங்கங்களுக்கும் இடையிலான பாகுபாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இடமாற்றங்கள் கோரிக்கைகள் : அதிகாரிகளின் நலன்களை கருத்தில் கொண்டு நியாமான இடமாற்ற கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.
வங்கி துறையின் ஆதரவு
இந்த போராட்டத்துக்கு, PNB அதிகாரிகள் மட்டுமல்லாது மற்ற அரசு வங்கிகளின் ஊழியர்களிடமும் பெரும் ஆதரவு கிடைத்தது. குறிப்பாக, ஐந்து நாள் பணிநாள் கோரிக்கைக்காக AIPNBOF எடுத்துக்கொண்ட உறுதியான நிலைப்பாட்டுக்கு மற்ற சங்கங்களின் சார்பாக பாராட்டுக்களும் கிடைத்தன என AIPNBOF தெரிவித்துள்ளது. .
அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் (AIBOA), AIPNBOF-இன் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தம், அனைத்து வங்கி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வங்கி மேலாண்மையை கட்டாயப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
சமரசக் கூட்டம்
இந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மண்டல தொழிலாளர் ஆணையர், PNB மேலாண்மை பிரதிநிதிகளையும், இந்திய வங்கி சங்கத்தின் (IBA) தலைவரையும், நிதி சேவைகள் துறையின் (DFS) செயலாளரையும் AIPNBOF தலைவர்களுடன் டிசம்பர் 20-ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள சமரசக் கூட்டத்திற்கு அழைத்துள்ளனர்.
இந்த கூட்டம், AIPNBOF எதிர்பார்க்கும் மாறுதல்களை கொண்டு வருவதற்கான ஒரு முக்கிய அமர்வாக கருதப்படுகிறது.இந்த கூட்டத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இருப்பினும், இந்த போராட்டங்கள், அதிகாரிகள் சங்கங்களின் நிலைப்பாட்டையும், வங்கி ஊழியர்களின் ஒற்றுமையையும் வெளிப்படுத்துகின்றன. AIPNBOF இந்த போராட்டங்களை வெற்றிகரமாக மாற்றி, மேலாண்மை மற்றும் அரசு அதிகாரிகளின் கவனத்தை பெற்று அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் AIPNBOF சங்கத்தினர் சார்பாக என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments yet.