- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
சாதிய பாகுபாடு., உடல் ரீதியான தாக்குதல்கள்! IOB உயர் அதிகாரிகள் மீது அதிகாரி பரபரப்பு புகார்!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் உதவி பொது மேலாளர் மற்றும் கிளை தலைமை மேலாளர், ஒரு அதிகாரியை சாதிய ரீதியில் திட்டியதாகவும், உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கேரளா மாநிலம் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் பதியப்பட்டுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: February 5, 2025
பொது இடத்தில் ஒருவரை அவர் சார்ந்த சாதிப்பெயர் கூறி திட்டுவதே பெருங்குற்றமாக பார்க்கப்படும் சூழலில் இக்கொடிய சாதிய வன்கொடுமை சம்பவம் வங்கி ஊழியருக்கு அவரது உயர் அதிகாரிகளால் நடந்துள்ளது என்பது பலரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை ஒன்றில் வேலை செய்து வரும் வங்கி அதிகாரி ஒருவர், எர்ணாகுளம் பகுதி முலாவுகாட் காவல் நிலையத்தில் முதலில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து அந்த புகார் எர்ணாகுளம் மத்திய காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இப்புகாரின்படி, வங்கி கிளையில் பணியாற்றிய உதவி பொது மேலாளர் (AGM) காஷ்மீர் சிங் மற்றும் தலைமை பிராந்திய மேலாளர் நிதிஷ் குமார் சின்ஹா ஆகியோர் வங்கி கிளையில் பணியாற்றும் அதிகாரி பொறுப்பில் இருக்கும் ஊழியரை அவர் சார்ந்த சாதிய ரீதியில் திட்டி, உடல் ரீதியாகவும் தாக்கியுள்ளனர். மேலும், தொழில்முறை பழிவாங்களிலும் அவர்கள் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட ஊழியர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக..,
துணைப் பொது மேலாளர் காஷ்மீர் சிங், அந்த அதிகாரி பொறுப்பில் உள்ள சக அதிகாரியை தனது வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனை ஊழியர் செய்ய மறுத்ததால், துணைப் பொது மேலாளர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அந்த அதிகாரி தனது அறையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அவரது முதுகில் அடித்து உடல் ரீதியாகவும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, அதிகாரி எர்ணாகுளத்தில் உள்ள பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த மருத்துவப் பதிவுகள் காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டன. இருப்பினும், தான் மேலும் பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் மேற்படி சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கியதாக பாதிக்கப்பட்ட ஊழியர் கூறியுள்ளார்.
இருந்தும், தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தப்பட்டு, ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக இந்த புகார் பதிவு செய்யப்பட்டது. இருந்தும் நிதிஷ் குமார் சின்ஹா, தான் கைது செய்யப்படுவதை தவிர்க்க தொடர்ந்து தலைமறைவாக இருந்துள்ளார். இதற்கிடையில், உதவி பொது மேலாளர் காஷ்மீர் சிங் சென்னையில் உள்ள IOB மத்திய அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அதற்கான உரிய காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
பணியிடத்தில் அச்சுறுத்தல்கள் :
போலீசில் புகார் அளித்த பிறகு, தனக்கு மிரட்டல்கள் மற்றும் பணி ரீதியாக தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக புகார்தாரர் மேலும் குற்றம் சாட்டினார். நவம்பர் 01, 2024 அன்று, மாலை 7:30 மணிக்குப் பிறகு,வங்கி உயர் அதிகாரி அவருக்கு ஒரு இடைநீக்கக் கடிதத்தை (Suspension Order) வழங்கினார். அதில் புகார் அளித்தது அதிகாரியின் வாழ்வின் "மிகப்பெரிய தவறு" என்று குறிப்பிட்டார். அதில் வங்கி சட்ட ஆலோசனை ஆவணத்தை கசியவிட்டதற்காக இந்த இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், வங்கி நிர்வாகம் சார்பில் கூறப்படும் ஆவண கசிவிற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று புகார்தாரர் மறுத்தார்.
மறுநாள், புகார்தாரர் உள் விசாரணை தொடர்பான ஆவணங்களை சேகரிக்க தான் பணிபுரியும் வங்கியின் பிராந்திய அலுவலகத்திற்கு சென்றபோது, தலைமை பிராந்திய மேலாளர் நிதிஷ் குமார் சின்ஹா மேலும் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்த அதிகாரி தனது உயர் மட்ட நிர்வாக தொடர்புகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட ஊழியரின் வாழ்க்கையையே கெடுத்து விடுவதாக எச்சரித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
மேலும் துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டாம் என்றால், புகார்தாரர் "தனது கால்களைத் தொட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றும் நிதிஷ் குமார் சின்ஹா கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் ஒழுங்கு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்ட நபர் அகமதாபாத்திற்கு மாற்றப்படுவார் என்று அவருக்கு வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
உள் விசாரணைக்குப் பிறகு, புகார்தாரர் IOB-யில் 11 ஆண்டுகள் பணியாற்றியிருந்தாலும், 15 சம்பள உயர்வுகளைக் குறைத்தது உட்பட கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொண்டார். கூடுதலாக, அவர் அகமதாபாத்திற்கு இடம் மாற்றப்பட்டார். பணியிட அநீதிக்கு எதிராக குரல் எழுப்பியதற்காக தண்டனையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபர் கூறுகிறார்.
சாதி பாகுபாடு குற்றச்சாட்டுகள் :
மேலும், AGM மற்றும் CRM இரண்டிலும் சாதி ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்களை அதிகாரி மீண்டும் மீண்டும் விவரித்தார். இரு அதிகாரிகளும் தன்னை " தாழ்ந்த சாதியினரின் மகன்” மற்றும் "நீச்சே ஆத்மி" (தாழ்த்தப்பட்டவர்கள்) போன்ற சாதிய அவதூறுகளை அடிக்கடி பயன்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். வட இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதியினர் துப்புரவுப் பணிகளுக்கு மட்டுமே தகுதியானவர்கள் என்றும், வங்கியில் உயர் சாதி அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றக்கூடாது என்றும் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டதாக பாதிக்கப்பட்ட நபர் கூறினார்.
காவல்துறை புகாரைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்வது "அவரது வாழ்க்கையின் மிக மோசமான முடிவு" என்றும், இதற்கு ஒரு பாடமாக அவர் அகமதாபாத்திற்கு மாற்றப்படுவார் என்றும் AGM புகார்தாரரை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
தொழிற்சங்கம் நடவடிக்கைக்கு அழைப்பு :
புகார்தாரருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் (BEFI) அகில இந்தியத் தலைவர் எஸ்.எஸ்.அனில், இந்த சம்பவத்தை கண்டித்துள்ளார். அவர் கனலிடம் பேசியதில், "சாதி பாகுபாடு மற்றும் அவமானம் புகார்தாரரை முற்றிலுமாக மனமுடைய செய்துவிட்டது. உடல் ரீதியான துன்புறுத்தல் சம்பவத்தை எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டம் மற்றும் ஊழியர் உரிமைகள் ஆகிய இரண்டின் கண்ணோட்டத்திலும் விசாரிக்க வேண்டும். இந்த வெட்கக்கேடான சம்பவம் சமீப காலங்களில் வங்கித் துறையில், குறிப்பாக கேரளாவில் கேள்விப்படாத ஒன்று. மேலும், இந்த சம்பவம் இந்தியாவின் பழமையான தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான IOBயின் பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது. நிர்வாகம் இதில் விரைவாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
உடனடி கோரிக்கை :
இந்தப் புகார் ஊழியர் சங்கங்களுக்குள் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இந்த விவகாரம் வங்கித் துறையில் பணியிட பாகுபாடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சாதி அடிப்படையிலான துன்புறுத்தல் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, நீதியை உறுதி செய்வதற்கும், மேலும் பாகுபாடு மற்றும் மிரட்டல் சம்பவங்களைத் தடுப்பதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்களும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளனர்.