தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / வங்கியியல்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகளின் சாதிய பாகுபாடுகளும்.., நிர்வாக முறைகேடுகளும்…

இந்தக் கட்டுரையானது IOB-யில் நிலவும் நிர்வாக முறைகேடு, தேவையற்ற பணி அழுத்தம் மற்றும் சாதிய அடிப்படையிலான அவமானங்கள் போன்ற சம்பவங்களை விவரிக்கிறது, இவை குறித்து BEFI-ன் அகில இந்தியத் தலைவர் S.S.அனில் கூறிய கருத்துக்கள் இதில் பதிவிடப்பட்டுள்ளன.

News Image

Author: S S Anil

Published: February 22, 2025

கேரளாவில், தென்னிந்தியாவை மையமாகக் கொண்ட பொதுத்துறை வங்கியான IOB-யில் பல உயர் பதவிகள் தற்போது வட இந்தியாவைச் சேர்ந்த அதிகாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அத்தகைய ஒரு அதிகாரி திருவனந்தபுரம் பிராந்திய அலுவலகத்தின் தலைமையில் உள்ளார். இந்த பிராந்தியத்தின் பிராந்திய மேலாளர் சமீபத்தில் வங்கி ஊழியர்களுடனான ஒரு வீடியோ கலந்துரையாடலின் போது ஒரு உத்தரவை பிறப்பித்தார். 

அதில், அலுவலக நேரங்களில் குறைந்தது ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கக் கடன் வாடிக்கையாளர்களைப் பெறுமாறு எழுத்தர் (Teller) பொறுப்பில் உள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார், தவறினால் அவர்கள் அந்தந்த கிளைகளுக்குத் திரும்பி வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டனர். இந்த அதிகாரி பேச்சின் வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இது வங்கி ஊழியர்களிடையே பரவலாக சர்ச்சையை தூண்டியது.

IOB-ல் சாதிய ஆதிக்கம் :

IOB வங்கியின் எர்ணாகுளம் பிராந்திய மேலாளர் நிகழ்த்திய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பட்டியல் சாதியைச் சேர்ந்த ஜூனியர் லெவல் அதிகாரி ஒருவரை, தலைமை பிராந்திய மேலாளரான நிதிஷ் குமார் சின்ஹா ​​மற்றும் அவரது துணை அதிகாரியான காஷ்மீர் சிங் ஆகியோரால் பலமுறை சாதிய ரீதியில் அவமானப்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அலுவலக நேரங்களில் இந்த மூத்த அதிகாரிகளுக்கு தேநீர் மற்றும் மருந்துகளை வாங்கி கொண்டு வருவது, அதிகாரிகளின் உறவினர்களுக்கு வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்வது, அலுவலக செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போன்ற தனிப்பட்ட பணிகளைச் செய்ய ஜூனியர் ஊழியர் கட்டாயப்படுத்தப்பட்டார். ஆரம்பத்தில், அவர் இந்த உத்தரவுகளுக்கு இணங்கினார். இருப்பினும், ஆகஸ்ட் 07, 2024 அன்று, காஷ்மீர் சிங் மீண்டும் பொது மேலாளருக்கும் தனக்கும் தேநீர் கொண்டு வருமாறு கேட்டபோது,​​ஊழியர் மறுத்துவிட்டார், 

இந்த வேலைகள் எனக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளின் ஒரு பகுதி இல்லை என்று மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த காஷ்மீர் சிங், பின்னர் அந்த ஊழியரை உடல் ரீதியாகத் தாக்கி, சாதிய ரீதியில் திட்டி அவமானப்படுத்தியுள்ளார், அதில் அவரை "கீழ்த்தரமான மனிதர்" மற்றும் "ஒரு காலணி தயாரிப்பாளரின் மகன்" என்று அழைத்தார். 

சாதிய அடிப்படையிலான பாகுபாட்டின் இந்த அப்பட்டமான செயல் கேரளாவில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கியில் வெளிப்படையாக நடந்தது. தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மேலும், உள்ளூர் காவல் நிலையத்தில் இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும் சில சம்பவங்கள் : 

செப்டம்பர் 2024-ல், நிதிஷ் குமார் IOB மேலாளர்களின் கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்தின் போது, ​​அதிகபட்ச புதிய வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்படாவிட்டாலோ, வணிகம் அதிகரிக்காவிட்டாலோ IOB தனியார்மயமாக்கப்படும் என்று அவர் மிரட்டினார். கோழிக்கோட்டைச் சேர்ந்த ஒரு மேலாளர், அதிக வாடிக்கையாளர்களை வெற்றிகரமாக ஈர்க்க அவசர மென்பொருள் சிக்கல்களுக்கு தீர்வு தேவை என்று சுட்டிக்காட்டினார். நிதிஷ் குமார் கூட்டத்தை திடீரென முடித்து, அதிகாரிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வழிமுறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் எந்த பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் எச்சரித்தார்.

மறுநாள், மென்பொருள் பிரச்சினையை எழுப்பிய அதிகாரி எர்ணாகுளம் பிராந்திய அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். பள்ளியில் கொடுக்கப்படும் தண்டனைபோல, காலை முதல் மாலை வரை துணை பொது மேலாளரின் அறைக்கு வெளியே அவர் உட்கார வைக்கப்பட்டார். பாலக்காடு மற்றும் திருச்சூரைச் சேர்ந்த இரண்டு மேலாளர்கள் இந்த காத்திருப்பு நடவடிக்கை குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தபோது, அதற்கு, மூத்த அதிகாரிகளை கேள்வி கேட்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதன் விளைவாக, மூன்று அதிகாரிகள் வட இந்தியாவிற்கு மாற்றப்பட்டனர். கேரளா போன்ற முற்போக்கான மாநிலத்தில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கியில் இந்த அநீதி நிகழ்ந்தது. 

பாதிக்கப்பட்ட அதிகாரிகள் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகினர், அதன் பின்னர் இந்த தன்னிச்சையான இடமாற்ற உத்தரவுகளை ரத்து செய்தது. பின்னர் இடமாற்ற உத்தரவுகளை மீண்டும் வெளியிட காஷ்மீர் சிங் மூலம் சட்ட ஆலோசனையை நாடிய நிதிஷ் குமாருக்கு இது ஒரு பெரிய சிக்கலாக அமைந்தது. 

சாதிய ரீதியில் அவமானங்கள் : 

சாதிய ரீதியில் பணியிடத்தில் பாதிக்கப்பட்ட ஜூனியர் ஊழியர் மீது வங்கி ஆவணத்தை கசியவிட்டதாக கூறி குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அவருக்கு எதிராக நிர்வாக ரீதியில் குற்றப்பத்திரிகையும் இடைநீக்க (சஸ்பெண்ட்) உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. நிதிஷ் குமார் தனது அலுவலகத்தில் ஊழியரிடம் நேரடியாக அவர்மீதான நிர்வாக குற்றப்பத்திரிகையை அளித்தார். அப்போது, ​​நிதிஷ் மீண்டும் சாதிய ரீதியில் அவதூறு கூறி, அந்த ஊழியரை தனது கால்களைத் தொடும்படி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. வங்கியில் இருந்த சிசிடிவி காட்சிகள் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.

இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நிர்வாக ரீதியிலான விசாரணையைத் தொடர்ந்து, ஊழியர் மீதான குற்றச்சாட்டுகள் பணிநீக்கம் செய்யப்பட்ட அளவிற்கு உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில் 11 ஆண்டுகளுக்கு சம்பள உயர்வு குறைப்பு மற்றும் மேலும் நான்கு ஆண்டுகள் பதவி உயர்வு தடை. 11 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றிய ஒரு அதிகாரிக்கு 15 ஆண்டு நிதி அபராதம். கூடுதலாக, அவருக்கு அகமதாபாத்திற்கு (குஜராத்) இடமாற்றம் வழங்கப்பட்டது. இடமாற்ற உத்தரவை வழங்கும்போது, ​​நிதிஷ் குமார், அந்த ஊழியரை கேலி செய்துஅவமானப்படுத்தினார் என்றும் கூறப்படுகிறது. நிதிஷ் " அந்த ஊழியர் உயர் சாதி மக்களிடம் எவ்வாறு சரியாக நடந்துகொள்வது என்பது குறித்து அகமதாபாத்தில் பயிற்சி பெறுவார்" என்று கூறியுள்ளாராம்.

ஊழியரின் புகாரின் அடிப்படையில் காவல்த்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர், கேரள காவல்துறை சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் கேரள முதல்வரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இருப்பினும், காஷ்மீர் சிங்கைப் பாதுகாக்கும் முயற்சியாக, வங்கி அவரை சென்னைக்கு மாற்றியது. வங்கியின் மூத்த அதிகாரிகளின் ஆதரவுடன் நிதிஷ் குமாரும் விரைவில் கேரளாவை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாதிய பாகுபாடுகள் எதிர்க்கப்பட வேண்டும் 

இந்த சம்பவங்கள் ஒரு தனிமனித ஊழியருக்கு நேர்ந்தது அல்ல. அனைவருக்கும் சமத்துவத்தை உறுதி செய்யும் அரசியலமைப்பால் ஆளப்படும் ஒரு நாட்டில், நிதிஷ் குமார் போன்ற தனிநபர்களின் உயர் சாதி ஆதிக்கத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. மற்றொரு மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்தில் ஜாலி மதுவின் துயர மரணத்தைத் தொடர்ந்து சமீபத்தில் இச்சம்பவம் அம்பலமாகியுள்ளது.

தொழிற்சங்கங்கள் மெத்தனமாகி, எதிர்ப்பு தெரிவிக்கத் தவறினால், ஊழியர்கள் மீதான நிர்வாகத்தின் தாக்குதல்கள் மேலும் தீவிரமடையும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நவீன யுகத்திலும் கூட, சாதி அடிப்படையிலான பாகுபாட்டை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சிகள் நாட்டில் மீண்டும் வெளிப்படுகின்றன. IOB-ல் நடந்தது அந்த ஊழியரை பாதிக்கும் ஒரு பிரச்சினை மட்டுமல்ல. இது உயர் சாதி ஆணவத்தால் கண்மூடித்தனமாக இருக்கும் அதிகாரிகளால் நிலைநிறுத்தப்படும் மிகப்பெரிய பிரச்சினையாகும். 

இந்த அநீதிகளை எதிர்க்கவும், இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக வலுவான போராட்டங்களையும் ஏற்பாடு செய்யவும் அனைத்து தொழிற்சங்கங்களும், மற்ற சமூக அமைப்புகளும் ஒன்றிணைய வேண்டும்.

[பொறுப்பு துறப்பு : இந்த கட்டுரை  BEFI-ன் அகில இந்தியத் தலைவர் S.S.அனில்  எழுதிய ஒரு கருத்துப் பகுதியாகும். இது கனல் மீடியாவின் பார்வையோ அல்லது நாங்கள் வெளிப்படுத்திய கருத்துக்களோ அல்ல. இக்கருத்துக்கள் மேற்கண்ட ஆசிரியரின் கருத்துக்கள் மட்டுமே.]

Tags:Caste DiscriminationIndian Overseas BankIOBErnakulam