- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
முழுதாக தனியார்மயமாகும் IDBI வங்கி? “இடஒதுக்கீட்டை பாதிக்கும் நடவடிக்கை” ஊழியர்கள் கவலை!
IDBI வங்கியின் தனியார்மயமாக்கல் நடவடிக்கை இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பங்குதாரர்கள் பலரும் தங்களுடைய கவலைகளை தெரிவித்து வருகிறார்கள்.

Author: Kanal Tamil Desk
Published: January 29, 2025
ஐடிபிஐ (IDBI) வங்கியின் தனியார்மயமாக்கல் நடவடிக்கை குறித்து தற்போது பெரிய விவாதம் நடைபெற்று வருகிறது. ஏனென்றால், இந்த வங்கியில் சுமார் 20 ஆயிரம் நிரந்தர ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் சுமார் 50% பேர் இடஒதுக்கீடு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இந்த தனியார்மயமாக்கல் நடவடிக்கை என்பது இந்த இடஒதுக்கீட்டு பிரதிநிதித்துவத்தையும், அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வங்கி பற்றி…
IDBI வங்கி முதலில் 1964-ஆம் ஆண்டு "இந்திய தொழில் வளர்ச்சி வங்கி" (Industrial Development Bank of India) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் முழுமையான உரிமைக்குள் இயங்கியது. பின்னர் 2004-ஆம் ஆண்டு வணிக வங்கியாக (தனியார்) மாறியது. தற்போது, பொதுத்துறை நிறுவனமான LICயானது IDBI வங்கியின் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கின்றன.
இடஒதுக்கீடு - வேலைவாய்ப்பு பாதிப்பு
IDBI வங்கியில் SC/ST, OBC மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடங்கிய மக்களுக்கு முன்னுரிமை அளித்து வேலை வழங்கும் நடைமுறை தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால், தனியார்மயமாக்கல் நடவடிக்கையால் இந்த இடஒதுக்கீடு தொடருமா என்பது சந்தேகமாகி உள்ளது. ஏனென்றால், தனியார் நிறுவனங்களில் பொதுவாகவே இடஒதுக்கீடு நடைமுறையில் இல்லை. இதனால், பலர் வேலைவாய்ப்பை இழக்க நேரிடுமோ என்ற பதற்றத்தில் உள்ளனர்.
தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு :
அகில இந்திய SC/ST/OBC ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் IDBI அதிகாரிகள் சங்கத்தின் (AIIDBIOA) பொதுச்செயலாளர் ரத்னாகர் வான்கடே, "தனியார்மயமாக்கலால், சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படும். புதிய ஆட்சேர்ப்புகளில் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படலாம். இது ஒட்டுமொத்த சமூகத்திற்கே பாதிப்பை உண்டாக்கும்" என்று கூறியுள்ளனர்.
2003-ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அரசில், நிதியமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங், "IDBI வங்கியின் 51% பங்குகள் அரசாங்கத்திடம் இருக்கும்" என்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார். ஆனால், தற்போது அரசாங்கம் தனியார்மயமாக்கலை துரிதப்படுத்தி வருகிறது. இது ஊழியர்களிடையே எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது.
ஊழியர்களின் தற்போதைய நிலை :
IDBI வங்கியில் தற்போது 6,000–8,000 SC/ST ஊழியர்கள், 4,000 OBC ஊழியர்கள் மற்றும் 485 மாற்றுத்திறனாளிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வேலை பறிபோகுமா, இல்லையா என்ற நிலைமை அவர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. பல தொழிற்சங்கங்கள், "தனியார்மயமாக்கல் நடவடிக்கையால் வங்கிகளில் வேலை பாதுகாப்பு குறையும்" என்று ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தொடரும் போராட்டங்கள் :
IDBI தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிரேக்கா தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில வாரங்களாக, டெல்லி ஜந்தர் மந்தரில் பல தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்த விஷயத்தை மீண்டும் எடுத்து வைத்து, அரசின் முடிவை மாற்ற முயற்சித்து வருகிறார்கள்.
எதிர்காலம் எப்படி இருக்கும்?
தனியார்மயமாக்கல் மூலம், IDBI வங்கியின் நிலைமையும், அதன் ஊழியர்களின் எதிர்காலமும் எப்படி இருக்கும் என்பதற்கான தெளிவான தீர்வு இன்னும் இல்லை. இருப்பினும், பங்குதாரர்கள், ஊழியர்கள், மற்றும் சமூக நீதிக்காக போராடுபவர்கள், இந்த முடிவு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என IDBI நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.