- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
‘வருமானவரி சட்டங்கள் நியாயமானவை’ வங்கி ஊழியர்களின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்!
குறிப்பிட்ட வருமானவரி சட்டங்கள் வங்கி ஊழியர்களுக்கு அதிக வரிச்சுமையை தருவதாக தொடரப்பட்ட வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: January 22, 2025
வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான வருமானவரி சட்டத்தின் வங்கி ஊழியர்களுக்கு குறிப்பிட்ட வரிச்சலுகை அளிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை பொருட்டு, பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பானது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
அதில், வருமான வரிச் சட்டத்தில், 1961 (ITA) நிதிச் சட்டம், குறிப்பாக,2007-ல் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, ITA பிரிவு 17(2) க்கு கீழே உள்ள வருமான வரித்துறை சட்ட விளக்கங்கள் வங்கி ஊழியர்களுக்கு கூடுதல் வரிச்சுமையை அளிக்கின்றன என வழக்கில் குறிப்பிடப்பட்டது.
இந்த வழக்கானது, மும்பை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதி எம்.எஸ்.சோனக் மற்றும் நீதிபதி ஜிதேந்திர ஜெயின் ஆகியோர் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது வங்கி ஊழியர்கள் தரப்பில் வாதிடுகையில், மேற்குறிப்பிட்ட வருமானவரித்துறை சட்டங்கள் அதிக சம்பளம் பெரும் வங்கி ஊழியர்களுக்கு கூடுதல் வரிச்சுமைகளை அளிக்கின்றன என்றும்,2007-ல் கொண்டு வரப்பட்ட திருத்தங்களில் 1 மற்றும் 4ஆம் பிரிவு விளக்கங்கள் ஊழியர்களின் வருமான வரி கணக்கீடுகளை வெகுவாக பாதிக்கிறது என வாதிட்டனர்.
ஆனால் நீதிமன்ற அமர்வு வங்கி ஊழியர் தரப்பு வாதங்களை முற்றிலுமாக நிராகரித்தது. வரி செலுத்துவதில் கஷ்டங்கள், வரிவிதிப்பில் சமத்துவமின்மைகள் ஏற்பட்டாலும், இதனை குறிப்பிட்டு வருமானவரித்துறை சட்டத்தில் தலையிட முடியாது என்று வலியுறுத்தினர்.
மேலும், அதிக சம்பளம் வாங்கும் வங்கி ஊழியர்கள் வருமான வரித்துறைபடி அதிக வரிச்சுமையைஎதிர்கொள்வதால், ஊழியர்களுகுள்ளேயே ஏதேனும் விரோதப் பாகுபாடு இருப்பதாகவோ, வருமான வரி திருத்த சட்டத்தில் தன்னிச்சையான தன்மை இருப்பதாகவோ அர்த்தம் இல்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
ஊழியர்களின் சம்பள நிலைகள் போன்ற பொருளாதார காரணிகளின் அடிப்படையில் வருமானவரி வகைப்பாடுகள் சட்டத்தில் முன்னதாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும், இந்தச் சட்டத் திருத்தங்கள், ஊழியர்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ற வகையில் வரி விதிப்புகளைப் பயன்படுத்தி கொள்வதை நோக்கமாகக் கொண்டதால், வருமானவரி சமத்துவக் கொள்கைகளை மீறவில்லை என்று நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.
வரிச் சட்டங்கள் அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக மட்டும் விதிக்கப்படவில்லை. அதன் மூலம் சமூகத்தின் பொருளாதார நிலையை ஒழுங்குபடுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த வரி விதிப்புகள் பாரபட்சமானவை அல்ல என்றும் நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் வங்கிகள் தங்கள் ஊழியர்களின் சார்பாக அவர்களுக்கு விதிக்கப்டும் வருமான வரிகளுக்கு பொறுப்பேற்க முடியுமா என்ற கேள்வியையும் நீதிமன்ற அமர்வு எழுப்பியது.
இறுதியாக, மும்பை உயர்நீதிமன்றம், வருமான வரி திருத்த சட்டத்தின் திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை தள்ளுபடி செய்து, வருமான வரிச் சட்டத்திருத்தங்கள் நியாயமானவை என்றும் அது தன்னிச்சையானவை அல்ல என்றும் உறுதிசெய்தது.