- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
வங்கிகளில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லைகள்! IBA-க்கு கடிதம் எழுதிய AIBEA!
வங்கிகளில் பெண் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகள் குறித்தும், பல்வேறு இடங்களில் பாலியல் தொல்லைகள் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்கள் அதன் மீதான நடவடிக்கைகள் குறித்தும் AIBEA சங்கத்தினர் IBA-க்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Author: Kanal Tamil Desk
Published: February 20, 2025
பிரபல செய்தி நிறுவனமான Business Standard வெளியிட்ட ஆய்வு முடிவுகளின் படி, 2023-24 (FY24) மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளில் ICICI வங்கியில் FY24-ல் 133 புகார்கள், FY23-ல் 43 புகார்கள். HDFC வங்கியில் FY24-ல் 77 புகார்கள், FY23-ல் 68 புகார்கள். Axis வங்கியில் FY24-ல் 36 புகார்கள், FY23-ல் 34 புகார்கள் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே, இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கிறது.
இப்படியான குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் கூட வங்கி நிர்வாகத்திடம் இருந்து இந்த புகார்களை திரும்ப பெறவேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மிரட்டல் கொடுப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA), வங்கிகளில் உள்ள உள் புகார் குழுக்களின் (ICCs) செயல்பாடு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து இந்திய வங்கிகள் சங்கத்திற்கு (IBA) கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.
AIBEA கடிதத்தில்..,
வங்கிகளில் ICCs (வங்கிகளில் உள்ளக புகார் குழுக்கள்) செயல்படும் விதத்தில் பல குறைபாடுகளை அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். பல சந்தர்ப்பங்களில், இந்தக் குழுக்கள் முறையாக செயல்படவில்லை, ஏனெனில் ICCs அதிகாரிகளின் அடிக்கடி இடமாற்றங்கள் அல்லது ஓய்வு காரணமாக அவற்றில் சரியான நடவடிக்கைகள் இல்லை. இதன் காரணமாக,பல பெண் ஊழியர்களுக்கு குழு உறுப்பினர்கள் யார் என்பது தெரியாத நிலை உள்ளது. இதனால் தேவைப்படும்போது உதவியை கேட்பதற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
பெண் வங்கி ஊழியர்கள் எழுப்பிய கவலைகள்
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) தங்களிடம் பெண் ஊழியர்கள் பல கவலைகளை கூறியதாக கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
விழிப்புணர்வு இல்லாமை: வங்கிகளில் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் புகார் அளிக்கும் பெண் ஊழியர்களுக்கு ICCs உறுப்பினர்கள் யார் என்று தெரியவில்லை. அந்த குழுக்கள் முறையாக செயல்பட்டு இருந்தால் இது போன்ற பிரச்சினைகள் நடக்காது.
புகார்களைத் திரும்பப் பெற அழுத்தம் : பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் ஊழியர்கள் புகார் அளித்தாலும் கூட பல சந்தர்ப்பங்களில் புகார்களை திரும்ப பெற நிர்வாக தரப்பில் இருந்து மிரட்டல் வருவதாகவும் பெண்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.
இடமாற்றங்கள் : அதைப்போல இப்படியான சம்பவங்கள் குறித்து புகார் அளிப்பது தெரிந்தால் உடனடியாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, சில வங்கிகள் புகார்தாரர்களை வெவ்வேறு கிளைகளுக்கு மாற்றுவதால் இது பெண் ஊழியர்களுக்கு மேலும் வேதனையை கொடுக்கிறது.
விருது ஊழியர்களுக்க்கு சரியான மதிப்பு இல்லை : வங்கிகளில் உள்ள ICCs பெரும்பாலும் பெண் அதிகாரிகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை என பெண்கள் கவலை தெரிவித்ததாக AIBEA தெரிவித்துள்ளது.
AIBEA-ன் கோரிக்கைகள் :
கடந்த பிப்ரவரி 8, 9ஆம் தேதிகளில் அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய மகளிர் வங்கி ஊழியர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின்படி, வங்கிகள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தங்கள் ICCs-களை மேம்படுத்த வேண்டும் என்று AIBEA கோரிக்கை வைத்துள்ளது.
- ICCs செயலில் இருப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து பதவிகளும் தொடர்ந்து நிரப்பப்பட்டு புதுப்பிக்கப்பட வேண்டும். இப்படியான பிரச்சினைகள் நடந்தது என்றால் உடனடியாக எங்களிடம் புகார் கொடுங்கள் என விழிப்புணர்வு கொடுக்கவேண்டும். ICCs உறுப்பினர்கள் இவர்கள் தான் என்கிற தகவல்கள் அனைத்து ஊழியர்களுக்கும் எளிதாக தெரியவேண்டும்.
- இப்படியான புகார்கள் கொடுக்கும் புகார்தாரர்களின் புகார்களுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக அவர்களை இடமாற்றம் செய்யக்கூடாது. அதற்கு பதிலாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களை தான் இடமாற்றம் செய்யவேண்டும்.
- பொதுத்துறை வங்கிகளில் உள்ள 2.1 லட்சம் பெண் ஊழியர்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் விருது பணியாளர் (சிறந்த பணியாளர்) பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், தொழிற்சங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்சம் ஒரு விருது பணியாளர் பிரதிநிதியாவது ICCsகளில் சேர்க்கப்பட வேண்டும். என இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என AIBEA வலிறுத்தியுள்ளது.

IPA நடவடிக்கை எடுக்க வலிறுத்தல் :
இந்திய வங்கிகள் சங்கம் (IBA) அனைத்து வங்கிகளுக்கும் ஒரு ஆலோசனையை வெளியிட வேண்டும் என்றும், இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் ICCs-களை மிகவும் பயனுள்ளதாக மாற்றவும் அறிவுறுத்த வேண்டும் என்றும் AIBEA எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது. நியாயமான மற்றும் வெளிப்படையான புகார் முறையை உறுதி செய்வது பெண் ஊழியர்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை வழங்கவும் உதவும் என்று AIBEA நம்புகிறது.

பெண்களுக்கு AIBEA-ன் அறிவுரைகள் :
வங்கித் துறை அதிக எண்ணிக்கையிலான பெண்களைப் பணியமர்த்துகிறது. எனவே, பெண்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டது என்றால் பெண்கள் நிச்சயமாக சமரசம் செய்யவே கூடாது. முன்வந்து புகார்கள் அளிக்கவேண்டும். அப்போது தான் இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் AIBEA வலியுறுத்துகிறது.
மேலும், பணியிடப் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு ஊழியரின் அடிப்படை உரிமையான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. எனவே, வங்கிகளில் பெண் ஊழியர்கள் பாதுகாப்பு கேள்விகுறியான ஒரு விஷயமாக பார்க்கப்படும் நிலையில், அவர்களுடைய குரலாக குரல் கொடுத்துள்ள AIBEA-வின் இந்த முயற்சி வங்கிகள் தங்கள் உள் புகார் குழுக்களை வலுப்படுத்தி, பெண் ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசரத் தேவையை எடுத்துரைக்கிறது.