டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றம் அல்ல - சென்னை உயர்நீதிமன்றம்
இது போன்ற அமைதியான போராட்டங்களில் பங்கேற்கக்கூடிய ஒவ்வொரு தனிநபருக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்தால் அது ஜனநாயகத்திற்கு எதிரானது - நீதிபதி பி.வேல்முருகன்

Author: Santhosh Raj KM
Published: June 16, 2025
டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் 'மக்கள் அதிகாரம்' அமைப்பினர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 'மக்கள் அதிகாரம்' அமைப்பினர் கடலுர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போரட்டம் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டதாவும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாகவும் கூறி மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த முருகானந்தம், மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது சேத்தியாத்தோப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து சிதம்பரம் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகானந்தம் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் இந்த வழக்கின் இன்று நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்.
உள்ளுர் பகுதி மக்களின் நலன் கருதியே போராட்டம் அமைதியான முறையில் நடந்ததாகவும், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதாகவும் போரட்டத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாத நிலையில், யாரும் புகார் கொடுக்காத நிலையில் போலீஸாரே தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளதாக வாதிட்டார்.
காவல்துறை தரப்பு வழக்கறிஞர் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையில் எந்த அனுமதியும் பெறப்படாமல் போரட்டம் நடைபெற்றதாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் வாதிட்டார்.
நீதிபதியின் தீர்ப்பு
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, குடியிருப்பு பகுதிகளில் இயங்கும் மதுபானக்கடைகள் ஏற்படுத்தும் சமூகப் பிரச்சினை குறித்து பொதுமக்கள் குறிப்பாக அப்பகுதி பெண்களுக்கு நியாயமான கவலைகளை எழுப்பும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அமைதியான போரட்டங்களை குற்றச்செயலாக கருதமுடியாது.ஆட்சியில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களின்போது டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதாக வாக்குறுதிகளை அளித்தாலும் உண்மையில் இந்தக் கடைகளை மூடப்படுவதற்கு பதிலாக வேறு இடத்திற்கு மாற்றப்படுவதால் முக்கிய பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.
Advertisement
இதுபோன்ற அமைதியான போராட்டங்களில் பங்கேற்கும் ஒவ்வொரு தனிநபருக்கும் எதிராக காவல்துறை குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்தால், அது ஜனநாயக உரிமைக்கு எதிரானதாகும், இதுபோன்ற நடவடிக்கைகள், தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் இதேபோன்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பெண்கள் மீதும் வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்படும்.
அமைதியான போராட்டம், குறிப்பாக பொது சுகாதாரம் மற்றும் சமூக நலனைப் பாதிக்கும் விஷயங்களில், அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும் என தெரிவித்துள்ள நீதிபதி, போராட்டங்கள் அமைதியாகவும் வன்முறையற்றதாகவும் தொடர்ந்தால், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும் அரசிடமிருந்து உரிமைகளை கேட்கவும் முடியும் என தெரிவித்து, சிதம்பரம் நடுவர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
No comments yet.
