- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
மண்டல ஊரக வங்கிகளை டிஜிட்டல் மயமாக்கலும் அதன் சவால்களும்
ஊரக வங்கிகள், தங்களது நிச்சயிக்கப்பட்ட பணிகளான கிராமப்புற பொருளாதாரம், சிறு குறு விவசாய தொழிலாளர்கள், கைவினைஞர்களுக்கு கடன் வசதி ஆகியவற்றை தொடர்வதும், தனியார் மயமாதலை நோக்கி நகராமல் டிஜிட்டல்மயமாக்கலை ஊக்குவிப்பதும் தேவையான ஒன்றாக வங்கி ஊழியர்களும் கருதுகின்றனர்.

Author: Keerthana
Published: October 3, 2023
மண்டல ஊரக வங்கிகளை நிதி ரீதியாக நிலையானதாக மாற்றுவதற்காக, வாடிக்கையாளர்களுக்கு இணைய வங்கி சேவைகளை வழங்குவது உட்பட டிஜிட்டல்மயமாக்கலை துரிதப்படுத்துவதை நோக்கி நகருமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
கிசான் ரின் போர்டலை(செப்டம்பர் 19,2023) துவங்கி வைத்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மண்டல கிராமப்புற வங்கிகளில் டிஜிட்டல் மயமாக்களின் மெதுவான முன்னேற்றம் குறித்தும், டிஜிட்டல் மயமாக்கல் துரிதமாக செயல்பட வேண்டும் என்றும் கிராமப்புறங்களில் கடன் விநியோகத்தை வலுப்படுத்துவதற்கான செயல்முறையை அதிகரிக்குமாறும், ஆர்.ஆர்.பி நிர்வாகத்தை வலியுறுத்தினார். அதன் சவால்களை காண்போம்.
ஆர்.ஆர்.பி வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள் சட்டத்தின் படி அரசு நிதி உதவியுடன் பிராந்திய அடிப்படையிலான கிராமப்புற கடன் வழங்கும் நிறுவனங்களாக அமைக்கப்பட்டன. ஊரக வளர்ச்சி வங்கிகளின் முக்கிய நோக்கம், கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக சிறு, குறு விவசாய தொழிலாளர்கள், கைவினைஞர்கள் போன்றவர்களுக்கு கடன் மற்றும் பிற சேவைகளை வழங்குவதாகும். மற்ற நாடுகளுடன், குறிப்பாக நிதி துறையில் இணைவதன் மூலம் டிஜிட்டல் கட்டண முறையின் புரட்சியை மிகவும் வேகமாக தொடங்கிய வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
கிராமப்புற மக்களின் பெரும்பாலான தேவைகள் ரொக்கப் பரிவர்த்தனைகளை சார்ந்துள்ளன. மேலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்ற கருத்தை மேம்படுத்துவது மிகவும் சவாலான பணியாகும். ஏனெனில்,கிராமப்புற பொருளாதாரம் பெரும்பாலும் முறைசாரா அல்லது ஒழுங்கமைக்கப்படாமல் உள்ளது. தனிநபர் வருமானம் தேசிய வருமானத்தை விட கணிசமாக குறைவாக உள்ளது. இதனால் கிராமப்புற மக்களுக்கு அடிப்படை தேவைகள் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையே மிகப் பெரிய டிஜிட்டல் பாகுபாடும் இடைவெளியும் நீடிக்கிறது. ஆகையால், கிராமப்புறங்களில் குறைந்த அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளே மக்களால் மேற்கொள்ள முடிகிறது. டிஜிட்டல் பிளவு (டிஜிட்டல் பாகுபாடும் இடைவெளியும்) குறைக்கப்பட்டால் மட்டுமே இந்த அறிவிப்பு பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவின் மிகப்பெரிய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கூட கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வங்கி சேவைகளை வழங்க சிரமப்படுகின்றன.
ஆண்டோ கௌல்பர்ட், தமிழ்நாடு கிராம வங்கி தலைவர் கனலிடம், "2019ல் பாண்டியன் மற்றும் பல்லவன் கிராம வங்கிகளை ஒன்றிணைத்து தமிழ்நாடு கிராம வங்கி உருவான பின்பும் வங்கிகள் தொழில்நுட்ப பயன்பாட்டில் பின்தங்கி இருந்தது. எனவே வங்கிகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என பலமுறை கோரிக்கையை வைத்தோம். ஆனால் அதனை அரசு நிறைவேற்றவில்லை. இப்போது அரசாங்கம் டிஜிட்டல் மயமாக்களை துரிதப்படுத்துகிறது. இதனை நாங்கள் வரவேற்கிறோம், இது வாடிக்கையாளர்களுக்கான சேவையை அதிகரிக்கும். அதே சமயம் இதில் தனியார் மயமாக்கல் போன்ற வேறு ஏதாவது நோக்கம் இருந்தால் அதனை எதிர்க்கிறோம்”, என்றார்.
இந்தியாவில் டிஜிட்டல் பிளவு குழந்தைகளின் கற்றல் மற்றும் வளர்ச்சிக்கான திறனை பாதிக்கும். இணைய ஊடுருவல் ஒரு நாட்டின் அதிக சமூக முன்னேற்றத்திற்கு தொடர்புடையது. இது ஒரு நாட்டின் சமூகம் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது.இந்தியாவில் டிஜிட்டல் பிளவு காரணமாக கிராமப்புற மக்கள் தகவல் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். டிஜிட்டல் பிளவு தொழில்நுட்பத்தை வாங்கக் கூடியவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும்.
புள்ளிவிவர அடிப்படையில் 2012 நிதியாண்டில் இந்தியாவின் சுமார் 86.6% பணம் வங்கிக்கு ரொக்கமாக செலுத்தப்பட்டதாகவும் 2012-13 ஆம் ஆண்டின் பொருளாதாரத்தில் 7600 கோடிக்கும் அதிகமாக காணப்பட்டதாகவும் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய புள்ளி விவரங்களின்படி ரொக்கம் இல்லா பொருளாதாரத்தின் தொடக்கம் கொள்கை வகுப்பாளர்கள் இடையே உருவானது. இது பொருளாதாரத்தின் டிஜிட்டல் மையமாக்கலுக்கு வழி வகுத்தது. உலக வங்கியின் அறிக்கையின்படி இந்தியா இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு சந்தையாக உள்ளது.
இந்தியாவின் மொத்த எழுத்தறிவு விகிதம் 77.70% (2021-2022).கிராமப்புறங்களில் பெண்களின் கல்வியறிவு விகிதம் 50.6% ஆக உள்ளது. அதே சமயம் கிராமப்புறங்களில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 74.1% ஆகும். கிராமப்புற மக்களில் 31% பேர் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
அஸ்வந்த், தமிழ்நாடு கிராம வங்கி செயலாளர், "இப்போது அரசு டிஜிட்டல் மயமாக்களை துரிதப்படுத்துகிறது. இதற்கு காரணம் பங்கு சந்தையில் எங்கள் பங்குகளை ஐபிஓ மூலம் விற்க முடிவு செய்துள்ளனர்.அப்படி வங்கிகளை தனியார் மையமாக்கவே இந்த டிஜிட்டல் மயமாக்கல் கொண்டுவரப்பட்டுள்ளது. கிராம வங்கிகளை அரசு தனியார் மயமாக்கல் கூடாது. இன்று கிராம வங்கிகள் தான் இந்தியாவின் உயிர்நாடியாக திகழ்கிறது”என்றார்.
நிதி ரீதியாக பலவீனமான RRB-களுக்கு மறுமூலதனம் அளப்பது உட்பட RRB-களுக்கு ஒரு விரிவான சீர்திருத்தம்,வலுவான மற்றும் நிலையான நிறுவனங்களை உருவாக்க RRB-களை ஒருங்கிணைத்தது போன்ற பெரும்பாலான சீர்திருத்த நடவடிக்கைகளை நாயக் குழு பரிந்துரைத்தது. ஆனால்,இன்னும் அவற்றின் வாராக்கடன் சுமார் 6% உள்ளது. மேலும், எதிர்காலத்திலும் அவர்களின் நடவடிக்கைகளுக்கு மேம்பட்ட மூலதன தேவைகள் மற்றும் ஒழுங்குமுறை நிலைகளின் பின்னணியில் கூடுதல் மூலதனம் தேவைப்படுகிறது. எனவே, அவர்கள் அதிக மூலதனத்தைப் பெறுவதற்கு ஏதுவாக அரசாங்கம் ஆர்.ஆர்.பி திருத்தச் சட்டத்தை (2015) இயற்றியுள்ளது.
“இப்போது 43 கிராம வங்கிகள் உள்ளது. இதனை ஒன்றிணைத்தால் கிராம வங்கி சேவையை இன்னும் எளிதாக மக்களுக்கு வழங்க முடியும்,” என்றார் அஸ்வந்த். மூலதனத்தை அதிகரிப்பது,வங்கி கிளைகளை அதிகரிப்பது மற்றும் அதிக வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என இன்னும் பல தேவைகளை மண்டல கிராம வங்கிகளை மேம்படுத்த கோரிக்கையாக வைத்துள்ளதாக அனோ கூறுகிறார்.