- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிக நிறுத்திவைப்பு
செப் 28 முதல் தொடர்ந்து 9வது நாளாக ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையோடு சென்னையில் போராடி வந்த இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தை (SSTA) சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள், நண்பகல் 12 மணிக்கு நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தை திரும்ப பெற்றனர்.

Author: Pughazh Selvi PK
Published: October 6, 2023
சென்னை: கடந்த செப் 28 முதல் அக் 5 ஆம் தேதி வரை 8 நாட்களாக, சென்னையில் இருக்கும் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்களை, அன்று (அக் 5) அதிகாலை 4 தொடங்கி காலை 9 மணியளவில் சென்னை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து கைதான சமூகநல கூடங்களிலேயே போராடியவர்களை நள்ளிரவு முதல் அவர்களது ஊர்களுக்கு அனுப்பிவைத்து போராட்டத்தை குலைக்க காவல்துறை முயற்சிப்பதாக இடைநிலை ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர்.
தற்போது தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை செயலாளரோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.
‘எங்களை ஏமாற்றுவது ஏற்புடையதல்ல’
அக் 4 ஆம் தேதி மாலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியோடு ஆசிரியர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் தீர்வு எட்டாமல் போராட்டத்தை மேலும் தொடர்ந்தனர். நேற்று கனலிடம் பேசிய இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் (SSTA) மாநில பொதுசெயலாளர் திரு. ராபர்ட், ‘2009 இல் இந்த பிரச்சினை ஆரம்பித்தது, அன்றில் இருந்து 2011, 2013, 2018 ஆகிய ஆண்டுகளில் ஒவ்வொரு குழு அமைக்கப்பட்டு இறுதியாக 1.1.2023 இல் மீண்டும் ஒரு குழு அமைக்கப்பட்டது. அப்போதே நாங்கள், குழுக்களுக்கு மாற்றாக அரசே முடிவெடுங்கள் என்று கூறினோம். ஏற்கனவே 14 ஆண்டுகளை இழந்த நிலையில் மேலும் குழு அமைத்து எங்களை ஏமாற்றாதீர்கள் என்று கூறினோம். ஆனாலும் மாதங்கள் கடந்தது தற்போதும் அதுவே நடக்கிறது. இது எங்களுக்கு ஏமாற்றமாகவே உள்ளது. இதற்கு மேலும் எங்களை ஏமாற்றிக்கொண்டே இருப்பது ஏற்புடையதல்ல’ என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், ‘1.1. 2024 முதல் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துவிட்டால் நாங்கள் எங்கள் போராட்டத்தை திரும்ப பெறுகிறோம்’ என்று கூறினார். தற்போது 2000த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராடுகின்ற நிலையில் மேலும் ஆயிரக்கணக்கில் ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கெடுக்க உள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார்.
சென்னையில் கைதான ஆசிரியர்களுக்கு ஆதரவாக கள்ளகுறிச்சி ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பை புறகணித்தபோது
அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள்
கைதான ஆசிரியர்களை சென்னையில் பல்வேறு இடங்களில் வைத்திருந்த நிலையில் அவர்கள் தங்கி இருக்கும் இடத்தின் நிலை பற்றி கனலிடம் SSTA அமைப்பை சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவர் கூறியதாவது, ‘மண்டபத்தில் மின்சாரம் தாக்குகிறது, தண்ணீர் தேங்கி நிற்கிறது, கழிப்பறை இல்லை, இடிந்து விழும் நிலையில் கட்டிடங்கள் இருக்கிறது, எந்த அடிப்படை வசதிகளும் இல்லை நாங்கள் அந்த மண்டபத்திற்குள் செல்ல மாட்டோம் என்று கூறி பேருந்திலேயே அமர்ந்திருந்தோம் ', என்றார்.
ஆசிரியர்கள் தங்கி இருந்த இடம்
தொடர்ந்து கைதான இடங்களில் ஆசிரியர்கள் போராடுகையில் பலர் மயக்கமடைந்து உள்ளனர். இதை பற்றி மாநில பொதுசெயலாளரிடம் நமது நிருபர் கேட்டபோது, 'குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் எல்லாம் இருக்கும் நிலையில், அங்கு 108 ஆம்புலன்ஸ் மட்டுமே இருப்பதாகவும் முதல் உதவிக்கு மருத்துவர் (அ) செவிலியர் யாரும் இல்லை', என்று கூறினார்.
போராட்டத்தில் மயங்கிய நிலையில் ஆசிரியர்கள்
நள்ளிரவில் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள்
இந்த சூழலில் தான் ஆசிரியர்களை அவர்களது ஊர்களை நோக்கி செல்லுமாறு காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். மேலும், நள்ளிரவில் ஆசிரியர்களின் அனுமதியின்றி பேருந்துகளில் ஏற்றி சென்றுள்ளன்னர். ஆசிரியர்கள் நள்ளிரவில் பேருந்துகளில் சட்டைகளை பிடித்து ஏற்றப்படும் காட்சிகளும், பேருந்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆசிரியர்கள் பயணிப்பதும், ‘சிறுநீர் கழிக்க’ அனுமதிகேட்க்கும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை சேலத்தில் காவல்த்துறை இறக்கிவிட்டபோது
இதை பற்றி பெண் இடைநிலை ஆசிரியர் கனலிடம் பேசுகையில், ‘சென்னையிலிருந்து பேருந்தில் ஏற்றி நள்ளிரவு கடந்தும் திண்டிவனம், விழுப்புரம் என நெடுந்தொலைவு கொண்டு சென்று தவிக்கவிடுவதுதான் சமூகநீதியா?’, என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர் பேசுகையில் உண்மையிலேயே அச்சமாக இருக்கிறது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆசிரியர்கள் மரியாதை குறைவாக நடத்தப்பட்டுள்ளனர் என்று வேதனை தெரிவித்தார்.
அரசோடு பேச்சுவார்த்தையில் இடைநிலை ஆசிரியர்கள்
இன்று (அக் 6) காலை 10.30 மணியளவில் இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் போராட்டத்தை மேலும் தொடரும் என்று தகவல் வெளியானது. எண்ணும் எழுத்தும் திட்டம் மற்றும் வகுப்புகளை புறக்கணிப்போம் என்று கூறி இருந்தநிலையில், நண்பகல் 12 மணியளவில் தலைமை செயலகத்தில், பள்ளி கல்வித்துறை செயலாளரோடு இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அந்த பேச்சுவார்த்தையில் சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை பரிசீலித்து மூன்று மாத காலத்திற்குள் சம்பள முரண்பாட்டை சரி செய்வதாக அரசு கூறியதாலும், மாணவர்களின் நலன் கருதியும் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பாக கூறியுள்ளனர்.
(Photo credits - SSTA)