- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் வாடகை வாகன ஓட்டுநர்கள்
ஓலா, ஊபரை முறைப்படுத்த, கட்டண நிர்ணயம் செய்திட, பைக் டாக்ஸிகளை தடை செய்ய கோரி தமிழ்நாடு முழுவதும் வாடகை வாகன ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் அக் 16 தொடங்கி 18 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

Author: Pughazh Selvi PK
Published: October 16, 2023
இன்று (அக் 16) முதல் அக் 18 வரை சென்னையில் ஓலா, ஊபர் மேலும் வாடகை வாகன ஓட்டுநர்கள் 3 நாள் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓலா, ஊபர், பாஸ்ட் டிராக் போன்ற வாடகை கார் நிறுவனங்களை முறைப்படுத்த, பைக் டாக்சிகளை தடை செய்ய கோரி, காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சிஐடியு, உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம், உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட வாடகை ஓட்டுநர்கள் சங்கங்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இணைய செயலிகள் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் இயங்குகிறது அவைகள் இந்த 3 மூன்று நாட்களும் இயங்காது என்று போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.
பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களின் கோரிக்கைகளாவன;
2019 ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை அமலாக வேண்டும், ஆட்டோக்களின் மீட்டர் கட்டத்தை உயர்த்த வேண்டும், அநியாய ஆன்லைன் அபராதங்களை கைவிட வேண்டும், ஓலா, ஊபர், ரெட் டாக்ஸி மற்றும் பாஸ்ட் டிராக் போன்ற செயலிகளில் இயங்கும் நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும், ஆட்டோக்களை போன்று கால் டாக்சிகளுக்கும் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், சொந்த பயன்பாட்டுக்கு இருக்கும் வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும், பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும், தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சவடிகளை அகற்ற வேண்டும் என்பனவாகும்.
சென்னை சின்னமலையில் நடைபெற்ற போராட்டத்தில் ஓட்டுநர்கள்
8 அம்ச கோரிக்கைகளோடு நடைபெறும் இந்த போராட்டம் பற்றி உரிமை குரல் அமைப்பின் பொது செயலாளர், திரு. ஜாஹீர் உசைன் கனலிடம் பேசுகையில், “இந்த மூன்று நாள் போராட்டம் எங்களை வாழ்வாதார ரீதியாக பாதிக்கிறது இருப்பினும், எங்களது கோரிக்கைகளை சமந்தப்பட்ட நிறுவனங்களும் அரசாங்கமும் புரிந்துகொள்ளும் வரை போராட்டம் தொடரும். போராடும் ஓட்டுநர்கள் மீது போர்டர் நிறுவனம் நடவடிக்கை எடுக்கிறது அதை தடுத்து நிறுத்த கோரியும் போக்குவரத்து ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “நாங்கள் உரிமம் வாங்கி வாகனம் ஓட்டுகிறோம் ஆனால் பைக் டாக்சிகள் சொந்த பயன்பாட்டு வாகனங்களை வணிகத்திற்கு பயன்படுத்துகின்றனர். ஆகையால் அரசாங்கம் அதை தடை செய்ய வேண்டும். செயலி மூலம் வாடகை கார் ஓட்டும் போது பயண விலையில் நிறைய மாறுபாடுகள் உள்ளது. பரபப்பான நேரத்தில் அதிக விலையும் மற்ற நேரங்களில் குறைந்த விலையும் இருப்பது ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளை பாதிக்கிறது. ஆகவே ஓர் குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்ய சொல்லி கோரிக்கை முன் வைக்கிறோம். இன்றைய போராட்டம் தற்போது 12 மணியளவில் முடிவடைந்துள்ளது ஆனால், வேலை நிறுத்தம் 3 நாட்களுக்கு தொடரும்”, என்று ஜாஹீர் உசைன் கூறினார்.
மேலும், நாளை மதுரை, திருச்சி, கோயம்புத்தூரில் இருக்கும் இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முன்பும், நாளை மறுநாள் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும், போராட்டத்திற்குப் பின்பு, உள்துறை செயலாளரை சந்தித்த பிறகு வேலை நிறுத்தம் முடிவடையும் என்றும் போராட்ட அமைப்பினர் தெரிவித்தனர்.