தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / தமிழ்நாடு

மேல்மா சிப்காட்டிற்கு எதிராக தொடரும் கிராம மக்களின் போராட்டம்

மேல்மா சிப்காட் அமைக்க 3174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், 124 நாட்களாக 11 கிராம மக்கள் போராடிய நிலையில். 7 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களில் கைதான 6  விவசாயிகள் மீதான குண்டாஸ் இரத்து செய்யப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருள் என்ற  விவசாயின் விடுதலை வேண்டி விவசாயிகளிடையே கோரிக்கை வலுக்கிறது. முன்பிணை மனுவில் இருக்கும் கருத்துக்கள் பொய்யெனவும், பொதுத்துறை அமைச்சர் மிரட்டியதால் மனுவில் கையெழுத்திட்டோம் என்று பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டுகின்றனர்.

News Image

Author: Pughazh Selvi PK

Published: November 20, 2023

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேல்மா சிப்காட் அமைப்பதை எதிர்த்து போராடிய விவசாயிகள் 7 பேர் மீது குண்டாஸ் வழக்கு பதிந்த நிலையில் நவ 17 ஆம் தேதி  6 பேர் மீதான வழக்கை திரும்பபெற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கைதான இன்னொரு விவசாயி அருள் மீதான வழக்கை திரும்பபெற பொது மக்கள், விவசாயிகள் மற்றும் அறப்போர் இயக்கம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

முதல்வர் வெளியிட்ட உத்தரவை தொடர்ந்து, தமிழக முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் மீது பல்வேறு கேள்விகள் சமூக வலைதளத்தில் எழுந்தவண்ணம் உள்ளன. பொதுப்பணித்துறை அமைச்சரை சந்தித்து கைதானவர்களின் உறவினர்கள் மனுக்கள் அளித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் அளித்த மனுக்களில், ‘அரசு திட்டங்களை காரணமின்றி எதிர்க்க மாட்டோம் என்றும் இத்தகைய தவறுகளை வெளியாட்களின்  தூண்டுதலின் பெயரில் செய்துவிட்டோம் என்றும் இனி வருங்காலங்களில் இதுபோல் தவறுகள் செய்யமாட்டோம்’ என்றும் குறிப்பிட்டு இருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு   இருந்தது. இவைகளை தொடந்தே தற்போது சமூக வலைத்தளத்தில் கருத்துமோதல்கள் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

2018 ஆம் ஆண்டு சேலம் 8 வழி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் முக ஸ்டாலின், பதிவிட்ட X பதிவு தற்போது பேசு பொருளாகியுள்ளது. அதிமுகவின் ஐடி விங் சார்பில் முதல்வரின் X பதிவை வைத்து கேளிக்கை காணொளிகளும் பரவ தொடங்கியுள்ளது.

இந்த சூழலில் கைது செய்யப்பட்டவர்களின் மனுக்கள் பெறப்பட்ட பின்னணியை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது. மேலும், விவசாயிகள் கைதானதை செய்தி ஊடகங்கள் வழியே தெரிந்துகொண்டதாக அமைச்சர் எவ வேலு அளித்த பேட்டி போராடும் மக்கள் மற்றும் இயக்கங்கள் மத்தியில் விவாதங்களை எழுப்பியுள்ளது.

நடந்த போராட்டம், கைது மற்றும் அதற்கான அமைச்சரின் பதில்கள் குறித்து தொடர்ச்சியாக X தளத்தில் பதிவிடும் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் ஒரு பதிவில், “செங்கம் விவசாயி மேல்மா பகுதிக்கு சென்று ஆதரவு தெரிவிக்க கூடாது என்று எ.வ வேலு சொல்வது அபத்தமானது. அதற்கு குண்டாஸ் போடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அப்படி என்றால் 8 வழி சாலை எதிர்ப்புக்கு விவசாயிகளுக்கு குரல் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் மீது எவ வேலு குண்டாஸ் போடுவாரா ?” எனும் கேள்வியை எழுப்பியுள்ளார்.

124 நாட்கள் போராட்டத்தின் பின்னணி 
சிப்காட் தொழிற்பூங்காவின் 3 வது பகுதி அமைக்க திருவண்ணமாலை மாவட்டத்தில் உள்ள மேல்மா, குரும்பூர், தேத்துறை, இளநீர்குன்றம், அத்தி, காட்டுக்குடிசை முதற்கொண்டு 11 கிராமங்களில் நிலம் எடுக்க அரசு முடிவு செய்திருந்தது. கிட்டத்தட்ட 3174 ஏக்கர் நிலத்தை எடுப்பதற்கான அரசாணையை, ஏப்ரல் 22 ஆம் தேதி அரசு வெளியிட்டு இருந்தது.

போராடும் 11 கிராம விவசாயிகள் மற்றும் பொது மக்கள் 
படம் - நக்கீரன்  

இதில் 1881 நில உரிமையாளர்களின் நிலம் கையகப்படுத்த திட்டமிட்டு இருந்தநிலையில், முதற்கட்டமாக 239 நில உரிமையார்களுக்கு நோட்டீஸ் வந்திருக்கிறது. நில எடுப்பை எதிர்த்து விவசாயிகள் ஜூலை 2 ஆம் தேதி முதல் போராட்டம் செய்ததுமுதல் நவ 2 ஆம் தேதி காவல்துறை கைது செய்தது வரை பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஜூலை 2 முதல் 124 நாளாக போராட்டம் நடைபெற்ற நிலையில் விவசாயிகள் தங்களது நிலத்தைக் காக்க தங்களது ஆதார் அட்டை, வாக்களர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையை செய்யாறு உதவி கலக்டர் அனாமிகா விடம் ஒப்படைக்க செய்யாறு ஆண்கள் மேல்நிலை பள்ளியை ஒப்படைக்க சென்றபோதே காவல்துறையினரால் தடுக்கப்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து நவ 4 ஆம் தேதி விடியற்காலை 23 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர் அவர்களில் 7 பேர் மீது குண்டாஸ் வழக்கு போடப்பட்டு தற்போது 6 மீதான வழக்கை அரசு இரத்து செய்துள்ளது. இந்த வழக்கு இரத்ததான பின்னணியில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் அமைச்சர் எவ வேலுவிடம் அளித்தே மனுவே காரணமாகிறது.

விடுதலை கோரி மனு அளித்தவர்கள், அந்த மனுவின் பின்னணியை சொல்கையில் புதிய திருப்பங்கள் உண்டாகியுள்ளது. முன்பிணைக்காக மனு அளித்த விவசாயி ஒருவரின் மனைவி பேசுகையில், “மனைவி தான் இதுக்கு சாட்சினு கையெழுத்தும் வாங்கிகினாங்க மிரட்டி, அப்படி நீ கையெழுத்து போடலேனா கடைய சீல் வைப்பேன் அப்படி இல்லனா உன்னையும் உன் பிள்ளைங்களையும் கூட்டினு போய் ஸ்டேஷன்ல வைப்பேன்னு மிரட்டி கையெழுத்தும் வாங்கிட்டாங்க” என்று கூறியுள்ளார்.

இவர் மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட மற்றொரு  விவசாயியின் மனைவி, தன்னை தகாத வார்த்தையில் பேசி காரில் ஏற்றி சென்று பொய்யான வாக்குமூலம் வாங்கியதாக கூறியுள்ளார். இதனை கண்டித்து அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் X தளத்தில் பதிவிட்ட போது, “7 பேரையும் விடுதலை செய்வதாக கூறி அங்கு அவர்களிடம் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த கட்டிதத்தில் கையெழுத்து வாங்கியதாக சொல்லப்படுகிறது. அருள் தூண்டுதலில் தான் செய்து விட்டனர் என்று அமைச்சர் ஒரு பத்திரிக்கை சந்திப்பும் நடத்துகிறார்” என்று முன்பிணைக்காக வழங்கப்பட்ட கடிதம் தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

புதிய சிப்காட்டினால் வேலைவாய்ப்பு பெருகும் என்று அரசாங்கம் கூறிய நிலையில், நில உரிமையாளர்கள் மற்றும் கிராம மக்களின் கருத்து வேறாக இருக்கிறது. “100 மூட்டை போட்டு நாங்க வண்டி டியூ கட்டுவோம், விவசாயம் கொண்டு நாங்க பிழைப்போம், அத கொண்டு சாப்டுவோம்…  நீ எடுதுனுபூட்டனா நாங்க எந்த வழில பிழைக்கறது. அப்போ எங்களுக்கு சொத்துதான் முக்கியம் சிப்காட் தேவையில்லை” என்று பாதிக்கப்பட்ட விவசாயி கலா ஜூனியர் விகடன் பேட்டியில் பேசுகிறார்.

அவரை அடுத்து பேசிய கஸ்தூரி, “மக்களான்டையே ஓட்டு வாங்கி மக்களையே அழிக்கற ஆட்சி இந்த ஆட்சி… எங்க கால்ல விழுந்து ஓட்டு வாங்கிட்டு எங்களையே அழிக்க நினைக்கறிங்க… விவசாயத்துனால தட்டுல போட்டு சாப்டறோம் இப்போ நோட்ட சில்லறைய தட்டுல போட்டு சாப்ட முடியுமா… எங்களுக்கு மண்ணுதா வேணும் என்னிக்கா இருந்தாலும் எங்களுக்கு மண்ணுதா வேணும்” என்று அவரின் ஆதங்கத்தைத் தெரிவித்தார்.

இப்படியாக, சிப்காட் தொழிற்பூங்காவின் 3 வது பகுதி அமைப்பதில் அரசிற்கும் கிராம மக்களுக்கும் இடையே இரு வேறு கருத்துக்கள் நிலவுவதால் நிலத்தை கையகப்படுத்துவதில் சர்ச்சை தொடர்கிறது.

Tags:protestFarmersRightsLandRightsTiruvannamalaiSipcotarulAraporIyakkamArrestGoondasActlandவிவசாயிகள்குண்டாஸ்MelmaFarmersProtestcmevveluஅரசு